ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றம் எனும் 377ஆம் சட்டப் பிரிவு: வரலாறும் வழக்குகளும்…

ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றம் எனும் 377ஆம் சட்டப் பிரிவு: வரலாறும் வழக்குகளும்…
ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றம் எனும் 377ஆம் சட்டப் பிரிவு: வரலாறும் வழக்குகளும்…
Published on

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377க்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உலக அளவில் உற்று கவனிக்கப்படும் இந்த வழக்கின் வரலாற்றைப் பார்ப்போம்…

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377ஆம் பிரிவு ஓரினச் சேர்க்கையை ஒரு கிரிமினல் குற்றமாக அறிவிக்கின்றது. இதன்படி ஓரினச் சேர்க்கைக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை தண்டனை விதிக்கலாம். அபராதமும் உண்டு. இந்தச் சட்டம் கி.பி.1860ஆம் ஆண்டில், ஆங்கிலேய ஆட்சியாளர் மெக்காலேவினால் கொண்டுவரப்பட்டது. இந்தியா தவிர அன்றைய பிரிட்டனின் அனைத்துக் காலனிநாடுகளிலும் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் ஆங்கிலேயர்களால் அமலாகின.

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்தச் சட்டம் தொடர்கிறது. இதனை எழுதிய பிரிட்டனிலேயே 1967ஆம் ஆண்டில் இச்சட்டம் திரும்பப் பெறப்பட்ட நிலையில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உள்லிட்ட உலக நாடுகள் இச்சட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளன. இந்தியா இன்னும் திரும்பப் பெறவில்லை. ஆனால் அதே சமயம், 377ஆம் சட்டப்பிரிவின் கீழ் இந்தியாவில் யாரும் தண்டிக்கப்படவில்லை. இந்தச் சட்டம் ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதான சமூகக் கண்ணோட்டத்தை மட்டும் தொடர்ந்து பாதித்து வந்தது.

2001ஆம் ஆண்டில், 377ஆம் பிரிவை விலக்கிக் கொள்ள வேண்டும் எனக் கோரி, டெல்லியில் உள்ள ‘நாஸ் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தது. 2003ல் அந்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 2008ல் உச்சநீதிமன்றப் பரிந்துரையின் பேரில் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்தது. 2009 ஜூலை 14 அன்று 2 நீதிபதிகள் கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு 377ஆம் சட்டப்பிரிவுக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது.  அதில் ‘18 வயதுக்கு மேற்பட்டோரின் விருப்புரிமையில் தலையிடுவது அரசியலமைப்பு வழங்கிய தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது.’ எனக் கூறப்பட்டது. ஆனால் 18 வயதுக்கு உட்பட்டோர், வன்புணர்வுக்கு உட்படுவோர் விவகாரத்தில் 377ஆம் பிரிவு பொருந்தும் எனக் கூறிய நீதிபதிகள், சட்டம் இவ்வாறாகத் திருத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைத்தனர். இந்தத் தீர்ப்பு இந்திய அளவில் அதிர்வலைகளை உருவாக்கியது. ஓரினச் சேர்க்கையாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள் இதனை வரவேற்க, மதத் தலைவர்கள், சில அரசியல் அமைப்புகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன.

இந்திய அரசு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய மறுக்க, மத அமைப்புகள் இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டுக்குச் சென்றன. 2013 டிசம்பர் 11 அன்று உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதித்து, தள்ளிவைத்தது. தனது தீர்ப்பில், ‘377ஆம் சட்டத்தைத் திருத்துவதும், திரும்பப் பெறுவதும் இந்திய அரசின் பொறுப்பு, அது நீதித்துறையின் பொறுப்பல்ல. அதுவரை ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றமே’ - என்று உச்சநீதிமன்றம் கூறியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசும் நாஸ் அறக்கட்டளையும் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தன. 2016ஆம் ஆண்டில் 377ஆம் சட்டப் பிரிவுக்கு எதிராக 5 ஓரினச் சேர்க்கையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள். ஓரினச் சேர்க்கையாளர்கள் இப்படி மனு அளித்தது இதுவே முதல் முறை. இதுபோல 32 தனிப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கலாகின.

377ஆம் சட்டப்பிரிவு தொடர்பான சீராய்வு மனுக்களை 3 நீதிபதிகள் அமர்வு முதலில் விசரித்தது, பின்னர் இது 5 நீதிபதிகள் கொண்ட தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. அப்போது, ‘சமூகம் காலத்துக்கு ஏற்ப மாறிவரும். ஒருவருக்கு இயற்கையாகத் தெரிவது மற்றவருக்கு செயற்கையாகத் தெரியும்’ – என்று அந்த அமர்வு கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 377ஆம் சட்டப் பிரிவு தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி அமர்வு இப்போது விசாரித்து வருகிறது.

ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டம் நீக்கப்பட்டால் கலாசார சீரழிவு ஏற்படும், தவறான முன்னுதாரணமாகும் என ஒரு தரப்பினரும், தனிமனித உரிமை பாதுகாக்கப்படும், எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களைக் குறைக்கலாம் என ஒரு தரப்பினரும் நாடெங்கும் விவாதித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் உச்சநீதிமன்ற விசாரணையை, ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டங்களைப் பின்பற்றும் ஆசிய நாடுகள் பலவும்கூட உற்றுநோக்கி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com