“மதுரையச் சுத்துன கழுத ஊரவிட்டு வெளிய போகாது” என்றொரு பழமொழி உண்டு. அதற்குக் காரணம் என்ன தெரியுமா.? மதுரையில் இருக்கும் கழுதைகள் அங்கு ஒட்டப்படும் சினிமா வால்போஸ்டர்களை சாப்பிட்டுப் பசியாறியே மொத்த வாழ்வையும் வாழ முடியுமாம். அத்தனை திரையரங்குகள் உள்ளன. அவ்வளவு சினிமா பார்ப்பார்கள் மதுரை நிலவாசிகள். ஒரு சினிமா வெளியானால் சென்னை சினிமாக்காரர்கள் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது “மதுரையில் ரிசல்ட் எப்படி இருக்கு?” என்பதே. 90களின் பிற்பகுதி வரையிலும் கூட திரைப்பட விநியோகஸ்தர்கள் ஒரு சினிமாவை தேர்வு செய்து வாங்கி வெளியிட முதலில் ‘மதுரக் காரய்ங்களுக்கு பிடிக்குமா’ என யோசிப்பார்களாம். அந்த அளவிற்கு ஆதிகால கலைகள் முதல் சமகால சினிமாவரை கலை ஆர்வலர்கள் நிறைந்த ஊர் மதுரை. மதுரையின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கதைசொல்லி இருப்பான். மிகையாகச் சொல்லவில்லை இது உண்மை.
இப்போதுதான் பல மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் இந்தியா முழுக்க பெருகிவிட்டன. ஆனால் 60 - 70 களுக்கு முன்பிருந்தே பல காம்ப்ளக்ஸ் திரையரங்குகள் மதுரையில் இயங்கி இருக்கின்றன. ப்ரியாகாம்ப்ளக்ஸ், அம்பிகா - மூகாம்பிகா, நடனா - நாட்டியா - நர்த்தனா, அபிராமி - அம்பிகை, மாப்பிள்ளைவிநாயகர் - மாணிக்கவிநாயகர், சக்தி காம்ப்ளக்ஸ், தீபா - ரூபா என பல புகழ் பெற்ற காம்ப்ளக்ஸ் திரையரங்குகள் மதுரையில் இருந்தன. அதுபோல தேவிடாக்கிஸ், சிந்தாமணி, கல்பனா, சரஸ்வதி, தங்கரீகல், அலங்கார், மதி, குரு, சோலைமலை என பல தனித்திரையரங்குகளும் மதுரை நிலவாசிகளின் கலாச்சார மையமாக இருந்திருக்கின்றன.,
தற்போதும்கூட பல திரையரங்குகள் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் தேவிடாக்கிஸ், சிந்தாமணி, நடனா - நாட்டியா - நர்த்தனா போன்ற சில திரையரங்குகள் கால வேகத்தில் தங்கள் ஓட்டத்தை முடித்துக் கொண்டன. சில அரங்குகளின் பெயர்கள் மாறிப் போய்விட்டன. இயக்குநர் பார்த்திபன் சினிமா தியேட்டரை மையமாக வைத்து இயக்கிய ‘ஹவுஸ்புல்’ திரைப்படம் மதுரை தேவிடாக்கிஸில் படமாக்கப்பட்டது. கமல்ஹாசன் நடித்த சினிமாவான குரு வெளியானதால் ஆரப்பாளையத்தில் உள்ள திரையரங்கிற்கு குருத் தியேட்டர் என பெயர் வைக்கப்பட்டது. அப்படித்தான் சிந்தாமணியும், அண்ணாமலையாக மாறிய கல்பனா டாக்கிஸும். இப்படி மதுரை திரையரங்குகள் ஒவ்வொன்றிற்கும் தனித்த காரணப்பெயரும் வரலாறும் உண்டு. இந்த திரையரங்குகளுக்கெல்லாம் காட்பாதர் எனச் சொல்லும் அளவிற்கு ஒரு திரையரங்கம் மதுரையில் இருந்தது அதன் பெயர் தங்கம்.
மதுரை மக்கள் தங்கம் போல கொண்டாடிய திரையரங்கம் அது. இத்திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சி என்றால் அத்திரைப்படம் காலத்தால் அழியாத காவியமாக இருக்கப் போகிறது என முடிவு செய்துகொள்ளலாம். காரணம் தங்கம் தியேட்டரில் ஒரு காட்சிக்கு 2,560 பேர் வரை அமர்ந்து பார்க்கலாம். ஆயிரம் சைக்கிள்களை நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதியும் இருந்திருக்கிறது. அத்தனை பிரம்மாண்டமான திரையரங்கு அது. 1952ஆம் ஆண்டு கட்டப்பட்ட இத்திரையரங்கம் ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கமாக இருந்துள்ளது.
தங்கம் திரையரங்கம் கட்டியபிறகு அங்கு முதன்முதலில் வெளியான திரைப்படம் எது தெரியுமா...? ‘பராசக்தி’. ஆம் அப்படத்தில் சிவாஜிகணேஷன் பேசிய முதல் வசனம் போலவே சக்ஸசாக இயங்கியது தங்கம் திரையரங்கம். முழுமையாக கட்டிமுடிக்கப்படுவதற்கு முன்பே தங்கம் தியேட்டரில் பராசக்தி திரையிடப்பட்டதாம். அக்டோபர் 17ஆம் தேதி ஒரு தீபாவளி நன்நாளில் பராசக்தி தங்கம் திரையரங்கில் வெளியானது. முழுமையாக கட்டி முடிக்கப்படாததால் பலரும் தரையில் மண்குவித்து அமர்ந்து படம் பார்த்தார்களாம்.
2,560 இருக்கைகள் கொண்ட இத்திரையரங்கில் பராசக்தி 112 நாள்கள் ஹவுஸ்புல்லாக ஓடியது என்று சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். மதுரை நிலவாசிகளின் சினிமா ஆர்வம் அத்தனை வியப்புக்குறியது. ஜெய்சங்கர் நடிப்பில் 1976ஆம் ஆண்டு வெளியான சினிமா ‘துணிவே துணை’ அதாவது தங்கம் திரையரங்கம் கட்டப்பட்டு 25வது ஆண்டில் வெளியானது ‘துணிவே துணை’. இத்திரைப்படம் வெளியான போது ஒரே டிக்கட்டில் இரண்டு சினிமாக்கள் காண்பிக்கப்பட்டதாம். தியேட்டரின் பெயர் தங்கம் என்றிருப்பதால் கூடுதல் விலை டிக்கட்டுகள் கோல்டன்பாயில் பேப்பரில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்த்திரைப்படங்கள் மட்டுமல்ல ஜாஸ், ஓமன், எக்சார்சிஸ்ட், இந்தியில் யாதோன் கி பாராத் ஆகிய திரைப்படங்கள் இங்கு ரிலீசாகியிருக்கின்றன. புருஸ் லீ’யின் ரிட்டன் ஆப் த ட்ராகன் திரைப்படமும் தங்கம் திரையரங்கின் பக்கா சவுண்ட் சிஸ்டமில் அதிரடி காட்டியிருக்கிறது. தங்கம் திரையரங்க ரசிகர் ஒருவர் இத்திரையரங்கை அருங்காட்சியகமாக மாற்றியிருக்கலாம் ஆனால் இப்போது தங்கம் தியேட்டர் இல்லாமல் போச்சே என தன் ஏக்கத்தை பதிவு செய்தார்.
ஒரு நாளைக்கு 7 காட்சிகள் வரையிலும்கூட தங்கம் தியேட்டரில் திரையிடல்கள் நடந்திருக்கின்றன. காட்சி முடிந்து மக்கள் அரங்கிலிருந்து வெளியேறினால் சித்திரைத் திருவிழா கூட்டம் போல அந்தப் பகுதி ஜேஜேவென இருக்குமாம். 1995ஆம் ஆண்டு நாகார்ஜுனா நடித்த ஈஸ்வர் என்ற டப்பிங் படமே தங்கம் தியேட்டரில் திரையிடப்பட்ட கடைசி சினிமா.
தங்கம் தியேட்டர் குறித்து தற்போதுள்ள தலைமுறைப் பிள்ளைகள் பலருக்கும் தெரியாது. இத்தனை சிறப்பு கொண்ட தங்கம் திரையரங்கம் மதுரையில் எங்கிருந்தது தெரியுமா...? - பெரும்புகழ் கொண்ட தங்கம் திரையரங்கம் இடிக்கப்பட்ட காக்காதோப்பு பகுதியில் தான் தற்போது தி சென்னை சில்க்ஸ் இயங்கிவருகிறது. கூடவே தங்கம் தியேட்டரின் நினைவாக தங்கம் நகைக்கடையும் இங்குள்ளது. பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நடக்கும் தொலைவில் இப்பகுதி உள்ளது.
1988ஆம் ஆண்டு சினிமா பாரடைஸோ எனும் இத்தாலியத் திரைப்படம் வெளியானது. அந்த சினிமாவில் சினிமாத் திரையரங்கமொன்று இடிக்கப்படும். அதுவரை தங்களது வாழ்வின் அங்கம் போல இருந்து அத்தனை இன்ப துன்பங்களையும் இருளில் பகிர்ந்து கொண்ட அத்திரையரங்கம் இடிக்கப்படும் போது ஊர் மக்கள் கூடி நின்று கண்ணீர் சிந்துவர்.
அதுபோலத்தான் மதுரை மக்களின் பல்வேறு மனநிலைகளை ஆற்றுப்படுத்தி ஆறுதல் கொடுத்து வந்தது தங்கம் திரையரங்கம். ஆயிரம் காதல், ஆயிரம் பிரிவுகள், லட்சக்கணக்கான முத்தங்கள், பலநூறு ரசிகர் மோதல், கண்ணீர், புன்னகை, மதுரையின் இன்ப துன்பங்கள் என அனைத்தையும் தன் திரைக் கண்களால் பார்த்திருக்கிறது தங்கம் தியேட்டர்.
அப்படியொரு வரலாற்றுத் திரையரங்கம் இடிக்கப்பட்ட போது வானம் தன்முகத்தை மேகக் கைகளால் மூடி ஒரு மூச்சு அழுதுவிட்டுப் போனது. ஆற்ற முடியாத காயங்கள், பேரன்பின் முத்தங்கள், மனதின் மானசீக மொழி, இயலாமையால் நழுவும் ஒருதுளிக் கண்ணீர் என அனைத்தையும் எந்த விசாரணையுமின்றி ஏற்றுக் கொள்வன திரையரங்குகள். யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாததை நாம் ஒரு திரையரங்கின் இருட்டில் கொட்டிவிட்டு வரலாம். அதனால்தான் இத்தனை தடைகளுக்குப் பிறகும் கலைதேசத்தின் ஒற்றை சிம்மாசனமாகத் திகழ்கின்றன திரையரங்குகள்.
திரையரங்கம் என்பது வெறும் சினிமா பார்க்கும் இடமல்ல. பாப்கார்ன், ஐஸ்கிரீம், மல்லிகைப் பூ, அத்தர் இவற்றின் வாசனை அலையும் திரையரங்கின் குளிர்க் காற்றில் நிறைந்திருப்பன நமது மானசீக நாள்கள். இடிந்து போன தங்கம் தியேட்டரின் பிரம்மாண்ட வெண்திரைமுன் அமர்ந்திருக்கிறான் மதுரையின் ஒப்பற்ற ரசிகனொருவன். பின்னனி இசையுடனும், மின்னும் கலர்க்கலர் குண்டு பல்புகளுடனும் மேலெழுகிறது அரங்கின் அரூப ரெட் வெல்வட் துணி. அது ஒரு பரிசுத்த கனவு போல மதுரையின் ஆழ்மனதில் மயங்கிக் கிடக்கிறது. யாரும் உரசிப் பார்க்க முடியாத எங்கள் தங்கத்தின் நினைவுகள் பிலிம் சுருள் போல நீள்கிறது.