புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள் நியாயமானதா?

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள் நியாயமானதா?
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள் நியாயமானதா?
Published on

2017ம் ஆண்டு முடியும் தருணத்தில் புத்தாண்டு கொண்டாட்ட மனநிலைக்கு அநேகமானவர்கள் வந்திருக்கக் கூடும். டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டை எங்கு கொண்டாடுவது என்பதை பலரும் திட்டமிட்டிருப்பார்கள். இளைஞர்கள் பொது இடங்களில் கூடி பட்டாசு வெடித்து, கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடுவார்கள். சிலர் குடும்பத்துடன் காலையிலேயே கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். இப்படி பலரும் பல விதமாக அன்றைய தினத்தை ஒரு புதிய உற்சாகத்தோடு கடப்பார்கள்.

இவ்வாறு புத்தாண்டு கொண்டாட்ட மனநிலையில் பலர் இருக்க, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வழக்கம் போல் எதிர்ப்பு எழுந்துள்ளது. சில அமைப்புகள் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம்தான். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக எதிர்ப்பு இருப்பதாக தெரிகிறது. வெளிப்படையாக இந்த எதிர்ப்பு ஒட்டுமொத்த இந்திய அளவில் பிரதிபளிக்கவில்லை என்றாலும், மாநிலங்கள் வாரியாக, நகரங்கள் வாரியாக அதிகரித்துள்ளதைப் பார்த்தால் இதன் உண்மை நிலை புரியும். 

வழக்கமாக சில அடிப்படைவாத அமைப்புகள்தான் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதற்கு முன் சில தாக்குதல் சம்பவங்களும் ஆங்காங்கு அரங்கேறி இருக்கிறது. ஆனால் இந்த முறை  அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.கள் எனப் பலர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இதன் உச்சகட்டமாக ஒரு மாநில அரசே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த சர்ச்சைகள் அதிகம் வெடித்து வருவது கர்நாடக மாநிலத்தில்தான். பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வரும் 31-ம் தேதி நள்ளிரவில் நடைபெறும் புத்தாண்டு விழா நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. நடிகை சன்னி லியோனை இங்கு அனுமதிக்க கூடாது என சில கன்னட அமைப்பினர் கடந்த ஒருவாரமாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சில இடங்களில் சன்னி லியோனின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. பெருகிவரும் எதிர்ப்பினால் இந்த நிகழ்ச்சிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனீல் குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, கர்நாடக மாநிலத்தின் கடற்கரை பகுதி நகரான மங்களூரை நகரைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் நியூ இயரை முன்னிட்டு டிஜே போன்ற நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு காரணமாக பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் போதைப் பழக்கத்தையும், பாலியல் உணர்வுகளையும் ஊக்குவிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பேசிய பஜ்ரங் தள் தலைவர் ஷரன் பம்ப்வெல், “18 வயதிற்கும் குறைவான இளம் பெண்கள், வாலிபர்களுடன் குடி மயக்கத்தில் நடனமாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற உற்சாக நடன நிகழ்ச்சிகளை கேரள மாநிலத்தில் இருந்து வந்துள்ள சில இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். ஒருவேளை போலீசார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம், அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்வோம்” என்றார்.

உத்தரபிரதேச மாநில விஷ்வ ஹிந்து மகாசபா அமைப்பின் தலைவர் மனோஜ் அகர்வால், “நியூ இயர் கொண்டாட்டம் என்ற பெயரில் ஹோட்டல்களில் ஆபாச நடனங்கள் அரங்கேறுவது கண்டனத்துக்குரியது. முதலில் மகாத்மா காந்தி வழியில் அவர்களுக்கு அறிவுரை வழங்குவோம். அவர்கள் கேட்கவில்லை என்றால் நடவடிக்கை எடுப்போம்” என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். அகர்வாலின் கருத்து ஆதரவு அளிக்கும் வகையில் பேசிய பாஜக எம்.பி. பிரமோத் குப்தா இந்து மத முறைப்படி புத்தாண்டை கொண்டாடுமாறு இளைஞர்களுக்கு அறிவு புகட்டி வருவதாகவும், அடுத்த தலைமுறை நம்முடைய கலாச்சாரத்தை புரிந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.

மத்திய பிரதேச பாஜக அரசின் அமைச்சர்கள் இருவர்கள் நியூ இயர் கொண்டாட்டத்திற்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேச கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கோபால் பார்வகா கூறுகையில், “நியூ இயர் என்பது மேற்கத்திய கலாச்சாரம். இந்தியர்கள் தங்களது சொந்த கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்” என்றார்.

மற்றொரு அமைச்சரான ஜெய்பன் சிங் பாவியா, “இந்துக்களுக்கு என்று தனி காலெண்டர் உள்ளது. கண்டிப்பாக அதனை பின்பற்றி நம்முடைய கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். மேற்கத்திய கலாச்சாரத்தை புறக்கணிக்க வேண்டும். இந்து காலெண்டர் முறைப்படி பண்டிகைகளை கொண்டாட வேண்டும்” என்று பேசினார். தனிப்பட்ட முறையில் இந்த நியூ இயரை கொண்டாட மாட்டோம் என்று இந்த அமைச்சர்கள் கூறுகின்றனர்.

இவையெல்லாவற்றையும் விட ஒருபடி மேலே சென்று, இந்து கோயில்களில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஆந்திர அரசு தடை விதித்தது. இந்து முறைப்படி தான் கோயில்களில் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதை சுட்டிக்காட்டி கர்நாடக மற்றும் தமிழக மாநிலங்களில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் தடைவிதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் இரண்டு விதமான எதிர்ப்புகள் இருக்கின்றன. ஒன்று ஒட்டுமொத்தமாக ஆங்கில புத்தாண்டையே கொண்டாடக் கூடாது என்பது. மற்றொன்று புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கலாச்சார சீர்கேடுகள் ஏற்படுகிறது என்பது. எந்தவொரு கருத்தையும், கருத்தாக வைக்கும் போது பிரச்னைகள் எழுவதில்லை. சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து நேரடியானத் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடும் போதுதான் அபாயம் ஏற்படுகிறது. தற்போது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளே இதுபோன்ற கருத்துக்களை வலியுறுத்துவது மேலும் சிக்கலை கூட்டும். 

ஆங்கிலப் புத்தாண்டு வேண்டாம், இந்து மதப்படி புத்தாண்டை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தும் பட்சத்தில், தமிழ்ப் புத்தாண்டு மட்டும்தான் கொண்டாட வேண்டும் வேறு எந்தப் புத்தாண்டையும் கொண்டாடக் கூடாது என்று வாதம் முன் வைக்கப்பட்டால் என்ன ஆகும். ஆங்கிலப் புத்தாண்டா, இந்துமத புத்தாண்டா என்பதல்ல பிரச்னை. மக்கள் எல்லா பண்டிகைகளையும் மகிழ்ச்சியாக கொண்டாட நினைக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே எண்ணம். இதை ஒரு விடுமுறை தினமாக நினைத்துக் கூட கொண்டாடுவார்கள். இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் காவல்துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கொண்டாட்டங்களில் அதிருப்தி இருந்தால் அவர்களிடம் முறையிடலாம். யாரும் நேரடியாக சட்டம் ஒழுங்கை கையில் எடுக்காமல் இருப்பது தேசத்தின் நலனிற்காக மட்டுமல்ல; அது மக்களின் நலனிற்கானதும் கூட.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com