”இந்தி பேசும் மாநிலங்கள் நம் வரிப்பணத்தில்தான் வாழ்கிறார்கள்”- முன்னாள் ஐ.ஏ.எஸ் தேவசகாயம்!

”இந்தி பேசும் மாநிலங்கள் நம் வரிப்பணத்தில்தான் வாழ்கிறார்கள்”- முன்னாள் ஐ.ஏ.எஸ் தேவசகாயம்!
”இந்தி பேசும் மாநிலங்கள் நம் வரிப்பணத்தில்தான் வாழ்கிறார்கள்”- முன்னாள் ஐ.ஏ.எஸ் தேவசகாயம்!
Published on

தி.மு.க எம்.பி கனிமொழியின் விமான நிலைய சர்ச்சையின்போது, ”கனிமொழிக்கு இந்தி தெரியாது என்பது பொய். 1989 ஆம் ஆண்டு துணை பிரதமராக இருந்த தேவிலால் தமிழகம் வந்தபோது, அவரின் இந்தி உரையை கனிமொழிதான் மொழிபெயர்த்துக் கொடுத்தார்” என்ற பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு “தேவிலால் தமிழகம் வந்தபோது கனிமொழி மொழிபெயர்க்கவில்லை. நான்தான் மொழிபெயர்த்தேன்” என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டு பா.ஜ.க தரப்பினரை அதிரச்செய்தார், ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம். இப்பிரச்சனை குறித்து, அவரிடம் பேசினோம்,

முன்னாள் துணை பிரதமர் தேவிலால் தமிழகம் வரும்போது என்ன நடந்தது?

தேவிலால் உருது கலந்த இந்தியில்தான் பேசுவார். நன்கு இந்தி தெரிந்தவர்களுக்குகூட, அவர் பேசுவது புரியாது. அவர், பேசியது தூய்மையான இந்தியும் கிடையாது. எனக்கு உருது கொஞ்சம் தெரியும். அதனால்தான்,அவர் பேசியதை மொழிபெயர்க்க முடிந்தது. நான் சப்-கலெக்டராக பணிபுரிந்த பகுதிகளில் உருது மொழி பேசுபவர்கள் உண்டு. பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள். அதனால், கொஞ்சம் உருது தெரியும். 1989 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் துணை பிரதமராக தேவிலால் பதவியேற்றார். பதவியேற்ற மூன்று வாரங்களிலேயே இரண்டு காரணங்களுக்காக தமிழகம் வந்தார். விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவு நாள். தேவிலால், அப்போது விவசாயத்துறைத் தலைவர். அதனால், அவர் நினைவு தினத்திற்கு கோவை பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர், பேசியதை நான்தான் தமிழில் மொழிபெயர்த்தேன்.

அப்போது,தமிழக முதல்வராக  கருணாநிதி இருந்தார். உணவுப் பற்றாக்குறை தமிழகத்தில் இருந்தது. கருணாநிதி  கோரிக்கை வைத்ததாலும், அதுகுறித்து விவாதிக்கவும் தேவிலால் வந்தார். இந்த, இரண்டு நிகழ்வையும் முடித்துவிட்டு டெல்லி சென்றவுடனேயே, உணவு தானியத்தை தமிழகத்திற்கு அளித்து உத்தரவிட்டுவிட்டார் தேவிலால். இதுதான் நடந்தது. 1977 ஆம் ஆண்டிலிருந்து 1981 ஆம் ஆண்டுவரை தேவிலால் ஹரியனா முதல்வராக இருந்தபோதிலிருந்தே, எனக்கு நல்ல பழக்கம். சென்னை பொதுக்கூட்டத்திற்கு கலைஞர் வரவில்லை. மற்ற டிஸ்கஷன் உள்ளே நடந்தது. நான் உள்ளே செலல்வில்லை.

தேவிலால் உட்பட யாருக்கெல்லாம்  மொழிபெயர்த்து கொடுத்துள்ளீர்கள்?

தேவிலாலுக்கு தமிழர்கள் குறித்து எதுவும் தெரியாது. அதனால்,  மொழிபெயர்த்தேன். மற்றபடி, நான் மொழிப்பெயர்ப்பாளர் இல்லை. வேறு யாருக்குமே நான் மொழிபெயர்த்ததில்லை

நீங்கள் இந்தி கற்றுக்கொண்டது எப்படி?

நான் பள்ளியில் படிக்கும்போது இந்தி மூன்றாவது மொழியாக இருந்தது. அப்போதே, இந்தி தெரியும். மேலும், நான் பணியாற்றிய ஹரியானாவில் இந்திதான் முதன்மை மொழி. அதனால், இன்னும் நன்கு பேசக் கற்றுக்கொண்டேன். தமிழைவிட இந்திதான் நன்கு பேசுவேன். இந்தி பேசுவதில் ஒரு பிரச்சனையும் கிடையாது.

தமிழகத்தில் இந்தி திணிப்பு சர்ச்சையை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்தி திணிப்பு என்பது கூடவேக் கூடாது. இந்தி பேசுபவர்கள் மற்ற மொழிகளை படிப்பதில்லை. மற்றவர்கள் மட்டும் ஏன் இந்தி படிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்? தமிழை ஒப்பிடும்போது இந்தி ரொம்பவே வீக்கான மொழி. இலக்கியத் தன்மையும் கொண்டது கிடையாது. அதிக மக்கள் பேசுகிறார்கள் என்பது மட்டுமே இந்திக்கு தகுதி. மற்ற எந்த தகுதியும் இல்லை. ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார், டெல்லி போன்ற மாநிலங்களில் மட்டுமே  இந்தி பேசுகிறார்கள். அதனால், அவர்களே முன்னிலையில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்திக்கு மொழியாக இருக்ககூட தகுதியே கிடையாது. இந்தியில் அறிவியலும் வளராது. இந்தி பேசுபவர்கள்தான்தான் தென்மாநிலங்களில் வந்து பணிபுரிகிறார்கள். அவர்கள், தமிழ் கற்றுக்கொள்கிறார்களா?  தமிழ் உலகின் மிக உயர்ந்த மொழி. இந்தி பேசும் மாநிலங்கள் அதிகம் என்பதால் ஓட்டுக்காக இந்தியை முன்னிலைப் படுத்துகிறார்கள்.  

ஆனால், தமிழர்கள் இந்தி படிக்காததால்தான் வேலை வாய்ப்புகள் பறிபோய்விட்டது என்று தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்படுகிறதே?

அங்கு என்ன வேலை வாய்ப்பு உள்ளது. எங்களைப் போன்ற பெரிய பணிக்கு போகிறவர்கள் படித்துவிட்டு போகட்டும். சாதாரண மக்களுக்கு இந்தியில் என்ன வேலை வாய்ப்பு உள்ளது? இந்தி பேசும் மாநிலங்கள் நம் பணத்தில்தான்  வாழ்கிறார்கள். தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இந்தி பேசாத மராத்தி, குஜராத் மாநிலங்கள் கொடுக்கும்  அதிக வரி வருவாயில்தான் இந்தி பேசும் மாநிலங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

எச். ராஜாவின் குற்றச்சாட்டு குறித்து கனிமொழி உங்களிடம் பேசினாரா?

நான் இப்போது நாகர்கோயிலில் இருக்கிறேன். சோசியல் மீடியாவில்  இல்லவே இல்லை. ஒரு நண்பர் போன்செய்து ’சார் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கு. கனிமொழிக்கு நல்லா இந்தி தெரியும். தேவிலால் தமிழகம் வரும்போது கனிமொழிதான் மொழிபெயர்த்தார் என்று ராஜா கூறியிருக்கிறார்’ என்றார். இந்த எச்.ராஜா என்பவரை எனக்கு யாரேன்றே தெரியாது. எதோ நீதிமன்றத்தை அவதூறாக பேசும்போது, அந்தப் பெயரை கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வளவுதான்.  தேவிலால் தமிழகம் வந்தபோது நான்தான் மொழிபெயர்த்தேன். இதில், கனிமொழி எங்கிருந்து வந்தார்? எச்.ராஜாவுக்கு தமிழக மக்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம்.  நான்தான் கனிமொழிக்கு போன் செய்தேன். அவர்,’எனக்கு இந்தி தெரியவே தெரியாது சார். ஏன் இப்படி பண்ணுகிறார்கள் என்பது புரியவில்லை’ என்றார். அதன்பிறகுதான், அந்த அறிக்கையை விட்டேன்.

நீங்கள் இப்படி அறிக்கை விட்டதால் பா.ஜ.க தரப்பிலிருந்து ஏதாவது கண்டனங்கள் வந்ததா?

என்னை மிரட்ட பா.ஜ.கவுக்கு தைரியம் உண்டா? நான் இந்திராகாந்தியையே எதிர்த்தவன். என்னை மிரட்ட பா.ஜ.கவுக்கு தைரியம் கிடையாது.

நாட்டின் 74 வது சுதந்திர தினம் எப்படி போகிறது?

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து கருத்து சுதந்திரம் இல்லை. பிரதமர் மோடி மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறார்.  அவர், என்ன படித்தார் என்பதுகூட யாருக்கும் தெரியாது. ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர். அவ்வளவுதான். குஜராத் மற்றும் இந்தியாவின் பெரிய பெரிய பிசினஸ்மேன்கள்தான் இவரை உருவாக்கினார்கள். இவர், ஆட்சிக்கு வந்தபிறகு எல்லா நிலைகளிலும் ஆர்.எஸ்.எஸ்காரர்களை கொண்டு வந்துவிட்டார்கள். எமர்ஜென்ஸியை விட மோசமான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே, இந்திய பொருளாதாரம் சரிவடைந்து இருந்தது. மக்கள் வறுமையில் துடிக்கிறார்கள். கொரோனா வந்து மத்திய அரசுக்கு சாதகமாகிவிட்டது. கொரோனாமீது பழியைப் போட்டு  தப்பித்துக்கொண்டார்கள்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருகிறார்களே?

ஐ.ஏ.எஸ்கள் ராஜினாமா செய்துவிட்டு வருவது நார்மல்தான். ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகள் மத்தியில் இப்படி வருவது பெரிய பிரச்சனை இல்லை. நான்கூட வி.ஆர்.எஸ்ஸில்தான் 15 வருட சர்வீஸோடு வெளியில் வந்தேன். இப்போது, மூன்றுபேர்தான் ராஜினாமா செய்துள்ளார்கள். மத்தியில் பாசிச ஆட்சியில், பாசிச மாநிலங்களில் என்னால் பணிபுரிய முடியாது என்று வெளிவருகிறார்கள். அதுதான் உண்மை. சசிகாந்த் செந்தில் 2009 பேட்ச் ஐ.ஏ.எஸ். பத்து வருடம் பணியாற்றினார். அதற்குள், ராஜினாமா செய்துவந்து விட்டார். பாசிச ஆட்சிகளில் பணிபுரிய விரும்பவில்லை என்பதையேக் காட்டுகிறது. ஆனால், இவர்களுக்கு மாறாக ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி இருக்கிறார். அவர் பெயர் அண்ணாமலை. ஆர்.எஸ்.எஸ் ஐடியாலஜியில் இருந்துகொண்டு பதவியையே ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துவிடலாம் என்று எண்ணுகிறார். அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது.

ஹரியானாவில் பணிபுரிந்திருக்கிறீர்கள். விளையாட்டுத்துறையில் எப்போதும் ஹரியானா வீரர்களே முன்னிலையில் இருந்துள்ளார்கள். தமிழகம் எப்படி இருக்கிறது? 

தமிழ்நாடு அரசே இல்லை. இலவசம் கொடுத்து மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டார்கள். இலவசங்களை ஆரம்பித்தது எம்.ஜி.ஆர். கருணாநிதியும் செய்தார். அதனை மோசமாக்கியது ஜெயலலிதா. தமிழ்நாடு ஃபுட்பால், வாலிபால், தடகளம் என பல விளையாட்டுகளில் முன்பு டாப்பில் இருந்தது. இப்போது, இதுபோன்ற இலவச அரசுகளால் அப்படி இல்லை.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com