கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நினைவுகளின் பங்கெடுத்துக் கொண்ட பொருட்களை ஏலம் எடுப்பதில் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் அலாதியான ஈடுபாடு உண்டு என்றே கூறலாம். அந்தவகையில் கிரிக்கெட் உலகில் அதிக விலைக்கு ஏலம் போன பொருட்கள் இவை:
ரூ.1.5 கோடிக்கு ஏலம் போன தொப்பி:
கிரிக்கெட் உலகின் பிதாமகன்களுள் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அணிந்த பச்சை நிற தொப்பி 1,70,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இந்திய ரூபாயில் ஏறக்குறைய ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பு. 2003ல் நடந்த ஏலத்தில் அந்த தொப்பியை இந்த தொகைக்கு டிம் செரிசியர் எனும் தொழிலதிபர் வாங்கினார். 1948ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பிராட்மேன் 173 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டும் ஆனார். அந்த போட்டியில் கூடுதலாக 4 ரன்களை அவர் குவித்திருந்தால் அவரது பேட்டிங் ஆவரேஜ் 100ஆக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி பயன்படுத்திய பேட்:
இலங்கை அணிக்கெதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் தோனி அடித்த மிகப்பெரிய சிக்ஸரை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 1983க்குப் பிறகு இந்திய அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த சிக்ஸர் அது. அந்த போட்டியில் தோனி பயன்படுத்திய பேட், 1,00,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. அந்த தொகையின் இந்திய ரூபாய் மதிப்பு தோராயமாக ரூ.84 லட்சத்தைத் தாண்டும். 2011ம் ஆண்டு அந்த பேட்டை ஆர்.கே.குளோபல் எனும் நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.
விஸ்டன் கிரிக்கெட் புத்தகம்:
புகழ்பெற்ற இங்கிலாந்தின் விஸ்டன் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிடும் கிரிக்கெட்டர்களின் அல்மனாக்ஸ் என்ற புத்தகம் கிரிக்கெட்டின் பைபிள் என்றழைக்கப்படுகிறது. அந்த வரிசையில் 1864 முதல் 2007ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட 144 புத்தகங்களின் தொகுப்பு 84,000 பவுண்டுகளுக்கு (ரூ.70,58,352) ஏலம் போனது. போன்ஹாம் நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு நடத்திய ஏலத்தில் இந்த தொகைக்கு அந்த தொகுப்பு ஏலம் போனது.
ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடிக்க கேரி சோபர்ஸ் பயன்படுத்திய பேட்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கேரி சோபர்ஸ், ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடிக்கப் பயன்படுத்திய பேட் 54,257 (தோராயமாக ரூ.45.5 லட்சம்) பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் தொடரின் போது நாட்டிங்ஹாம்ச்ஷையர் அணிக்காக விளையாடிய சோபர்ஸ், ஸ்வான்சீ அணிக்கெதிரான போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார். அந்த போட்டியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மால்கம் நால்ஷ், சுழற்பந்து வீச்சை முயற்சி செய்த போது, சோபர்ஸின் இலக்கானார்.
பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்த கேரி சோபர்ஸின் பேட்:
கடந்த 1958ல் வெஸ்ட் இண்டீஸின் ஜமைக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் கேரி சோபர்ஸ் ஆட்டமிழக்காமல் 365 ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடிக்க கேரி சோபர்ஸ் பயன்படுத்திய பேட்டானது 47,475 பவுண்டுகளுக்கு (தோராயமாக ரூ.40 லட்சம்) ஏலம் போனது. அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 790 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.