இந்தியாவை இருநூறு ஆண்டுகளாக பிரிட்ஷ்காரர்கள் அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்தது ஊரறியும் உலகறியும். கிழக்கிந்திய கம்பெனி என்பதை உருவாக்கி அதன் மூலம் இந்தியாவின் வளங்களை கொள்ளையடித்துச் சென்றதும் அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனாலும் சுதந்திரத்துக்கு பின்னர், எதிர்கால வசதிக்காக ஆங்கிலேயர்கள் இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் அடிப்படையாக உள்ளது.
குறிப்பாக ஆண்டுக்கு 500 கோடிக்கும் அதிகமான முறை பயணிக்க பயன்படும் ரயில்வே துறையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்களே அது நல்ல விஷயம் இல்லையா? அவர்கள் அத்தனை மோசமானவர்களாக இருந்திடவில்லையே என பல கேள்விகள் கூட முன்வைக்கப்படலாம்.
ஏனெனில் ரயில் போக்குவரத்தில் இந்தியா உலகிலேயே 7வது நாடாக திகழ்கிறது. இதற்கு பிரிட்டிஷார் முதன்மை காரணமாக இருக்கிறார்கள். அதற்காக நன்றி கூறுவது கடமை அல்லவா எனவும் கருத்துகள் தெரிவிக்கப்படலாம்.
ஆனால், அந்த ரயில்வே வசதிகளை காலணி ஆதிக்கக்காரர்கள் ஏதும் காரணமில்லாமல் ஏற்படுத்திவிடவில்லை. அதற்கு சாட்சியாக இந்தியாவை ஆண்ட அத்தனைக் காலமும் பிரித்தானியர்கள் 45 ட்ரில்லியன் டாலர் அளவுக்கான வளங்கள், பொருட்களை இங்கிருந்து கொள்ளையடித்தே தங்களுடைய வயிற்றை கழுவியிருக்கிறார்கள் எனலாம். அந்த 45 ட்ரில்லியன் டாலரின் தற்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? 3,375 லட்சம் கோடியாகும்.
இத்தனை வளங்கள் மட்டும் இந்தியாவிடம் நீடித்திருந்தால், உலக நாடுகள் அனைத்திற்கும் சிம்ம சொப்பனமாகவே இருந்திருக்கும். ஆனால் விரல் விட்டு எண்ணக் கூட முடியாத அளவுக்கான வளத்தை கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட சேவைதான் ரயில்வே. அந்த ரயில் சேவையை வைத்து, கிழக்கிந்திய கம்பெனி என்பதன் பேரில் தங்கம், மசாலா, பருத்தி, பட்டு, தேயிலை, நிலக்கரி உட்பட பலவற்றை முதலில் வர்த்தகம் செய்து அதனால் செல்வ செழிப்பாகவே இருந்திருக்கிறார்கள். இருந்துக்கொண்டிருக்கிறார்கள் எனக் கூறுவதிலும் மிகையல்ல.
அதாவது, இந்தியாவில் ரயில் சேவை தொடங்கப்பட்டதால் இந்தியர்களுக்கு எந்த பலனும் அளிக்கப்படவில்லை என்பதே இதன் பொருள். இந்தியாவின் வளங்களை இடைவிடாமல் பிரித்தெடுப்பதற்காக மட்டுமே 1853 முதல் 1924 வரையில் ரயில்வே நெட்வொர்க்கை உருவாக்கினார்கள்.
14,000 எஞ்சின்களை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்து, இந்தியர்களின் வடிவமைப்பு, திறன்களை வைத்து ரயில்களை உருவாக்கியது பிரிட்டிஷ் அரசு. அப்படி ரயில்களை உருவாக்கிய இந்தியர்களுக்கு, ரயில்வேயில் உள்ள எந்த வேலையிலும் சேர முடியாதபடி கதவுகளை அடைத்துவிட்டு, முழுக்க முழுக்க வெள்ளையர்களையே பணியமர்த்தியது.
ALSO READ:
ரயில்வேயை வைத்து பல வியாபாரத்தை விருத்தியடையச் செய்ததோடு, அதன் மூலம் பல முதலீட்டாளர்களையும் ஈர்த்தது. இந்தியர்களை நிர்பந்தித்து வரி செலுத்தவும் செய்தது. இதனையடுத்து தன்னுடைய வருமானத்திற்காக ரயில்வே மூலம் இந்தியர்களையும், இந்தியாவையும் பிழியத் தொடங்கியது.
1600ம் ஆண்டுகளில் முதன் முதலில் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்டபோது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான GDPயில் 2 சதவிகிதத்தை மட்டுமே பிரிட்டன் கொண்டிருந்தது. அதே சமயத்தில் அதில் கால் பங்கை இந்தியா வைத்திருந்தது.
18ம் நூற்றாண்டு சமயத்தில், முகலாய பேரரசு மங்கிய போது பிரிட்டன்தான் உலகின் சக்திவாய்ந்த பேரரசாக உருவானது. தன்னுடைய சொந்த உபயோகத்துக்காக இந்தியாவின், இந்தியர்களின் செல்வங்கள் அனைத்தையும் பிழிந்தெடுத்தது.
1943ம் ஆண்டு இரண்டாவது உலகப்போர் நடந்த போது, பிரிட்டிஷ் ராணுவத்திற்காக உணவுகள் அனைத்தும் திசை திருப்பப்பட்டதால் 40 லட்சம் வங்காளிகள் பசிக்கொடுமையால் இறந்தனர்.
அதன் பிறகு, இந்தியாவில் இருந்து இனி லாபம் ஈட்ட முடியாது என எண்ணிய பிறகும், சுதந்திர போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த பிறகும் பிரிட்டிஷ் கடைசியாக 1947ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறியது.
ஆனால் நாட்டை விட்டு பிரிந்து செல்வதற்கு முன் தன்னால் ஆன கலகத்தை ஏற்படுத்திவிட்டே வெள்ளையர்கள் சென்றிருக்கிறார்கள். அதன்படி இந்தியாவை மத ரீதியாக இரண்டு பகுதிகளாகப் பிரித்து பிரிவினையை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் இந்துக்களும், பாகிஸ்தானில் பெரும்பாலான இஸ்லாமியர்களும் குடியேறினார்கள்.
மேலுன் இந்து-இஸ்லாமியர்களிடையே பிரச்னையும் தொடர்ந்தது. இதனால் 15 மில்லியன் மக்கள் இடப்பெயர்வுக்கும், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். இடப்பெயர்வின் போது ரயில்கள்தான் வெகுஜன கொலைகளின் மிகப்பெரிய தளமாக இருந்திருக்கிறது.
அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டு அதில் இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். பெண்கள் குறிவைக்கப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இறந்த சடலங்களை ஏற்றிச் செல்வதற்காக ரயிலை இயக்கும் ஓட்டுநர்கள் மட்டுமே உயிரோடு விட்டு வைக்கப்பட்டார்கள்.
ALSO READ:
இப்படியான ரயில் படுகொலை பற்றி பிரிட்டிஷ் அறிந்திருந்தாலும், அது ஏற்கெனவே இந்தியாவை கை கழுவிவிட்டது என்பதே நிதர்சனமாக இருந்தது. முடிந்தால் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருங்கள். இல்லையேல் சிதைக்கப்படுவதில் இருந்து தப்பியுங்கள் என இந்தியாவின் கடைசி மவுண்ட் பேட்டன் பிரபுக்கு அப்போதைய பிரதமர் க்ளெமண்ட் அட்லீ கடிதம் எழுதியிருந்தார்.
இப்படி 40 லட்சம் பேரின் பட்டினி சாவு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, 45 ட்ரில்லியன் டாலர் கொள்ளை என இவ்வளவும் நடந்திருந்தபோதும், பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எந்த தவறையும் செய்திருக்கவில்லை என்ற கருத்தே பலருக்கும் இருக்கிறது என்பது 2014ம் ஆண்டு YouGov நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.
அதன்படி 59% பேர் பிரிட்டிஷ் பேரரசு பெருமைக்கொள்ளத் தக்கது என்று கூறியிருக்கிறார்கள். வெறும் 19% பேர்தான் பிரிட்டிஷின் செயல்பாடு வெட்கக்கேடானது எனக் கூறியிருக்கிறார்கள்.