'மணி ஹெயிஸ்ட்' மாந்தர்கள் 3: ஹெல்சிங்கி, ஆஸ்லோ: காயப்படுத்த தெரியாத உன்னத ஆன்மாக்கள்!

'மணி ஹெயிஸ்ட்' மாந்தர்கள் 3: ஹெல்சிங்கி, ஆஸ்லோ: காயப்படுத்த தெரியாத உன்னத ஆன்மாக்கள்!
'மணி ஹெயிஸ்ட்' மாந்தர்கள் 3: ஹெல்சிங்கி, ஆஸ்லோ: காயப்படுத்த தெரியாத உன்னத ஆன்மாக்கள்!
Published on

''என்னவிட்டுப் போக கூடாதுன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். கடைசிவர என்கூட இருப்பன்னு சொல்லி தான்டா இங்க வந்த. ஏன்டா இப்டி பண்ண?'' - ஆஸ்லோவின் உயிரை மட்டும் சுமந்துகொண்டிருக்கும் உடலைப் பார்த்து புலம்புவார் ஹெல்சிங்கி. உணர்ச்சிகளற்ற அந்த உடலுக்கு வேண்டுமானால் ஹெல்சிங்கி கூறும் வார்த்தைகளின் வீரியம் தொந்தரவு செய்யாமல் இருக்கலாம். ஆனால், ஆஸ்லோவின் மூளை படிமங்களின் நினைவுகளை அந்த வார்த்தைகள் நிச்சயம் பதம் பார்த்திருக்கும். அவர்களின் கடந்த கால நினைவுகளை நோக்கி இழுத்துச்சென்றிருக்க கூடும். ஏனெனில் ஆஸ்லோவுக்கும் ஹெல்சிங்கியுக்குமான நட்பு அப்படி! ஆம், இந்தத் தொடரின் இப்போது நாம் பார்க்கவிருப்பது ஹெல்சிங்கி, ஆஸ்லோ இரு கதாபாத்திரங்களையும்தான்.

'மணி ஹெயிஸ்ட்' கொள்ளை கும்பல் கூட்டத்திலேயே ஆஸ்லோவும், ஹெல்சிங்கியும் தான் பல்க் மெட்டிரியல்கள். ஆனால், குழந்தைக்கு நிகரான மனநிலையை கொண்டவர்கள். அந்தக் குழந்தைக்கு சொந்தமாக யோசிக்க தெரியாது. மற்றவர்கள் சொல்வதை உள்வாங்கி அப்படியே செய்யும். இந்தக் கொள்ளைக்கார குழந்தைகளும் அப்படித்தான். தங்களுக்கு வரும் உத்தரவுகளை ஒரு ரிமோட் கன்ட்ரோலைப்போல செயல்படுத்தக்கூடியவர்கள். விஸ்வாசத்தை மூச்சாக கொண்டவர்கள். உயிரே போனாலும் தலைமைக்கு கட்டுப்படும் ராணுவ கட்டுப்பாட்டையுடையவர்கள். தன்னை பிளந்தபோதிலும், வலிகளை மறந்து தோண்டுபவனுக்கு நீரை பரிசளிக்கும் பூமியைப்போல, வலிகளை மனதோடு புதைத்து எதிரிலிருப்பவர்களுக்கு புன்னகையைப் பரசளிக்கும் உன்னத ஜீவன்கள்!



'பலேர்மோ தேவைக்கு உன்ன யூஸ் பண்ணிட்டு இப்போ விலகிட்டான்' என ஹெல்சிங்கியிடம் நைரோபி கூறும்போது, பதிலுக்கு அமைதியாக தூங்கச் சென்றுவிடுவார் அவர். மற்றவர்களை துன்புறுத்தாத குணம் வாய்க்கபேறுவதே ஒரு பேறுதானே! அந்த வகையில் ஹெல்சிங்கியும், ஆஸ்லோவும் ஈர்க்கிறார்கள்.

ஆஸ்லோவை எடுத்துக்கொண்டால் அவர் ஒரு இன்ரோவெர்ட். அதிகம் பேசமாட்டார். ஆனால், செயலில் வெளுத்து வாங்குவார். தலைமை சொல்லிவிட்டால், தான் நேசித்தவர் மீதும் கூட துப்பாக்கியை வைக்க தவறமாட்டார். முதல் சீசனில் பெர்லின் சொன்ன ஒரே காரணத்துக்காக ரியோ, டென்வர் இருவரையுமே தாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார். குழுவில் இருக்கும் அனைவரும் பெர்லினை எதிர்க்கும்போதும் கூட, எந்தச் சூழலிலும் தலைமையை எதிர்க்க துணியாதவர் ஆஸ்லோ. செரிபியன் மொழியில் பேசும் அவருக்கு, ஸ்பானிஷ் மொழியில் பெரிய அளவில் பேசத் தெரியாது. மணி ஹெஸ்ட்டில் ஆஸ்லோ, ஹெல்சிங்கி இருவருமே கூட்டத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தபடுபவர்கள்.

'பாக்குறத்துக்குதான் இப்படி இருக்க, ஆனா சென்டிமென்டான ஆளு' என நைரோபி, ஹெல்சிங்கியைப் பற்றி பேசும் வசனம் ஹெல்சிங்கியின் கதாபாத்திரத்துக்கான சித்திரம். உண்மையில் அவர் அப்படித்தான். யாருக்கும் எந்தப் பிரச்னையும் கொடுக்காமல், தன்னுடைய தலைமை சொல்வதை மட்டும் பின்பற்றிக்கொண்டிருப்பார். எந்த அளவுக்கு என்றால், தன்னுடைய உயிருக்கு உயிரான ஆஸ்லோ உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது, 'ஆஸ்லோவ வெளியே கொண்டுபோக முடியாது' என பெர்லின் சொல்வார். உடனே நைய்ரோபியின் துப்பாக்கி பெர்லினை குறிபார்க்கும். இப்போ ஹெல்சிங்கி என்ன சொல்லப் போறாரு என எதிர்பார்க்கும்போது, 'வெளியே கொண்டுபோக வேணாம்' என கூறி அப்போதும் கூட தலைமையை எதிர்க்கமாட்டார்.

அவரின் ஏதோ ஒரு பண்பு அல்லது குணாதிசயம் எதுவோ ஒன்று, நைரோபியை கவர்ந்துவிட, காதல் வயப்பட்டு அவருடன் வாழ ஆசைப்படுவார். ஆனால், இரண்டாவது கொள்ளைத் திட்டத்தின்போது, பலர்மோ மற்றும் ஹெல்சின்கி தன்பாலின உறவை வளர்த்துக்கொள்வர். ஒருகட்டத்தில் பெர்லினின் பிரிவால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பலர்மோ, ஹெல்சிங்கி உள்ளிட்ட யாரையும் உணர்வுபூர்வமாக நெருங்க விடமாட்டார். தான் விலக்கப்படுகிறோம் என அறிந்தும் யாரையும் காயப்படுத்தாமல் ஒதுங்கிவிடுவார் ஹெல்சிங்கி.

நம்மைச் சுற்றியும் ஹெல்சிங்கி, ஆஸ்லோ கதாபாத்திரங்கள் இருந்துகொண்டேயிருக்கின்றன. பள்ளிகளில், கல்லூரிகளில், வேலைபார்க்கும் இடங்களில் இரண்டுபேர் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். சிரித்துக்கொள்வார்கள். அவர்களுக்குள் இருக்கும் இணை பிரியா நட்பு புற்றீசலைப்போல வளர்ந்துகொண்டே போகும்.

ஹெல்சிங்கியும், ஆஸ்லோவும் அப்படித்தான். 'அவன் என் பிரண்ட் மட்டுமில்லை. ஒண்ணா ஆர்மில இருந்திருக்கோம். ஒண்ணா திருடியிருக்கோம். ஜெயில்ல இருந்திருக்கோம். ஒரே கட்டிலில் படுத்திருக்கோம்' என்று ஆஸ்லோவுடனான நட்பு குறித்து ஹெல்சிங்கி கூறும்போது கூட்டமே அமைதியாக இருக்கும். ஆஸ்லோ படுத்த படுக்கையாக உணர்ச்சிகளற்று கிடக்கும் நேரத்தில் ஹெல்சிங்கி உருகிவிடுவார். எப்போதும் அவருடனே இருந்து, 'உனக்கு சரியாகிடும்' என ஒரு தாயைப்போல தேற்றிக்கொண்டிருப்பார். ஆனால், காலம் என்ற அரசன் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை படைத்தவன். சூழல்கள் அதற்கு துணை நிற்கும் சிப்பாய்கள்.

இறுதியில் தன் நண்பன் படும் கஷ்டத்தை பார்க்க முடியாமல் தன் கையாலேயே 'கொஞ்ச நேரத்துல எல்லாம் முடிஞ்சிடும்' என தலைகாணியை வைத்து ஆஸ்லோவை, ஹெல்சிங்கி அழுத்தும்போது நமக்கும் மூச்சுத் திணறுகிறது. அதை 'கருணைக்கொலை' என மணி ஹெயிஸ்ட் நியாப்படுத்தினாலும் அந்த நேரத்தில் ஆஸ்லோவின் எண்ணம் என்னவாக இருந்திருக்கும் என யோசிக்கத் தோன்றுகிறது...

தனக்கு மிக நெருக்கமான ஒரே ஜீவனின் அன்புக் கரங்களால் உயிர் பிரிவதே நிறைவு தரும் நிகழ்வாக ஆஸ்லோ நிச்சயம் கருதியிருக்கக் கூடும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com