ஆந்திராவையும் துவம்சம் செய்யும் கனமழை, வெள்ளம்:  44 பேர் உயிரிழப்பு, 16 பேர் மாயம்

ஆந்திராவையும் துவம்சம் செய்யும் கனமழை, வெள்ளம்:  44 பேர் உயிரிழப்பு, 16 பேர் மாயம்
ஆந்திராவையும் துவம்சம் செய்யும் கனமழை, வெள்ளம்:  44 பேர் உயிரிழப்பு, 16 பேர் மாயம்
Published on

ஆந்திராவில் முன்னெப்போதும் இல்லாத கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 16 பேரை காணவில்லை என்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் இந்த மாத தொடக்கத்தில் ஆரம்பித்த கனமழை தொடர்ந்து பெய்ந்து வருகிறது, நவம்பர் 16 ஆம் தேதிமுதல் ராயலசீமா, திருப்பதி மற்றும் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. அடுத்த 3 - 4 நாட்களில் ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா, சித்தூர் மற்றும் நெல்லூர் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று அமராவதியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏற்கனவே நிரம்பியுள்ள நீர்நிலைகள் உடைந்து, கீழ்நிலை கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால், மாவட்ட  நிர்வாகம் மற்றும் அதிகாரிகளை மாநில அரசு உயர் எச்சரிக்கையில் வைத்துள்ளது.  கனமழை வெள்ளம் காரணமாக கடப்பா, சித்தூர், அனந்தப்பூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் உள்ள 119 மண்டலங்களில் 1,990 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 211 கிராமங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்றும் அரசு தெரிவித்துள்ளது.

திருப்பதி நகரிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது, இதனால் இப்பகுதியில் 4 பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கின. அங்கு ஆர்டிசி பேருந்து ஒன்று நாடலூர் பாலத்தில் இருந்து விழுந்ததில் 10 பேர் பலியாகினர், மேலும் பத்து பேர் ஆற்றின் கரையில் உள்ள சிவாலயத்தில் உயிரிழந்தனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணப்பணிகள் தீவிரம்:

4 மாவட்டங்களில் மின்சாரம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 95,949 குடும்பங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதை துரிதப்படுத்துவதாகவும் அரசுஅறிவித்துள்ளது. வீடு முழுவதுமாக சேதமடைந்தவர்களுக்கு, புதிய வீடு கட்ட1.8 லட்சம் ரூபாயும், பகுதியளவு சேதமடைந்தவர்களுக்கு இழப்பீடு தொகையாக 95 ஆயிரம் ரூபாயும் அரசு வழங்குகிறது. பயிர்கள் சேதம் மற்றும் கால்நடை இறப்பு குறித்து கணக்கெடுக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் பாமாயில், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு தலா 1 கிலோ வழங்க அரசு உத்தரவிட்டது. ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழிப் பார்வையிட்டதுடன், மாவட்ட ஆட்சியர்களுடன் சனிக்கிழமை வெள்ள நிலைமை குறித்து ஆலோசனை செய்தார். வெள்ளிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநில முதல்வரிடம் தொலைபேசியில் பேசி அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com