நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு தனி ஒரு வீரரான ஹசன் அலி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் பலரும் சாடி வருவதை பார்க்க முடிகிறது. அத்தகைய சூழலில் #INDwithHasanAli என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி உள்ளது.
உண்மையில் பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் என்ன? பலி கொடுக்கப்பட்ட ஹசன் அலி!
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸை இழந்து முதலில் பேட் செய்திருந்தது. மைதானத்தில் இந்த போட்டியுடன் சேர்த்து நடைபெற்றுள்ள 17 டி20 போட்டிகளில் 16 முறை இரண்டாவதாக பேட் செய்த அணி தான் வென்றுள்ளது. ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்து ஆட்டத்தையும், சாம்பியன் பட்டத்தையும் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இத்தகைய சூழலில் கிட்டத்தட்ட டாஸை இழந்த போதே ஆட்டத்தை இழந்துவிட்டது பாகிஸ்தான்.
மறுபக்கம் டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி என்றாலே அது அதிகபட்ச ரன்களை சேஸ் செய்யப்படும் சாத்தியம் உள்ள நாக்-அவுட் போட்டியாக பார்க்கப்பட்டது. 2016-இல் இந்தியாவின் 193 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2010-இல் பாகிஸ்தான் நிர்ணயித்த 192 ரன்களை ஆஸ்திரேலியாவும், 2014-இல் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 173 ரன்களை இந்தியாவும் சேஸ் செய்துள்ளன. இந்த அனைத்து ரன் சேஸ்களும் சொல்லி வைத்தார் போல் அந்தந்த டி20 உலகக் கோப்பை எடிஷனின் இரண்டாவது அரையிறுதியில் நடைபெற்றுள்ளது.
இருந்தும் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 176 ரன்களை எடுத்தது. அதை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 12.2 ஓவர்களில் 96 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. கிட்டத்தட்ட ஆட்டத்தை பாகிஸ்தான் வெற்றி பெற்றதாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அதெல்லாம் வெறும் சில நிமிடங்கள் தான் நீடித்தன. 16, 17, 18 மற்றும் 19-வது ஓவர்களில் முறையே 12, 13, 15, 22 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. அதில் 19-வது ஓவரில் கொடுக்கப்பட்ட ஒரு கேட்ச் வாய்ப்பை தான் ஹசன் அலி மிஸ் செய்திருந்தார். அதற்கு அடுத்த மூன்று பந்துகளை ஹாட்ரிக் சிக்ஸர்களாக மாற்றி இருந்தார் மேத்யூ வேட்.
ஆனால், பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணமாக ஹசன் அலி, பலி கொடுக்கப்பட்டுள்ளார். கேப்டன் பாபர் அசாம் வைத்திருந்த ஃபீல்ட் செட்-அப், 19-வது ஓவரை வீசிய பவுலர் ஷஹீன் அஃப்ரிடியின் ஏடாகூடமான லைன் குறித்து யாருமே பேசவில்லை. அது அவர்களது கண்ணுக்கு தெரியாத குற்றமாக இருந்தது.
#INDwithHasanAli
இதே பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நம் இந்திய வீரர்கள் சரியாக பந்து வீசாத நிலையில், தனிப்பட்ட முறையில் முகமது ஷமி மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதில் சில விஷமம் வாய்ந்ததாகவும் இருந்தன. அதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி கூட ‘வெறுப்புணர்வை வீரர்கள் மீது திணிக்க வேண்டாம்’ என ரிப்ளை கொடுத்திருந்தார்.
இதுதான் தற்போது ஹசன் அலிக்கு நடந்து வருகிறது. “சிறப்பாக விளையாடியும் களத்தில் செய்த சின்ன தவறு எங்களை வெளியேற்றி விட்டது. அந்த கேட்சை நழுவவிடாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கலாம்” என போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் சொல்லி இருந்தார். பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் ஹசன் அலியை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் தான் இந்தியாவில் அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் #INDwithHasanAli என்ற ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது.
‘இந்தியா உங்கள் பக்கம் ஹசன் அலி’ என இந்த ஹேஷ்டேக் முழங்கினாலும் இதில் அதிகம் பகிரப்படும் கருத்துகள் வஞ்சப்புகழ்ச்சி அணியை போல இருப்பதை பார்க்க முடிகிறது. அதாவது புகழ்வதை போல இகழ்ந்துள்ளனர்.
அதில் சில இங்கே...
விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். அதுவும் குழு விளையாட்டில் வெற்றி மற்றும் தோல்வி அணி வீரர்களை சார்ந்தே உள்ளது. அதனால் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு ஹசன் அலியை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. 22 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் சிறந்த 11 கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர்.