செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிப்பு உண்மையா ? அரசியல் கட்சிகளின் அறியாமையா?

செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிப்பு உண்மையா ? அரசியல் கட்சிகளின் அறியாமையா?

செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிப்பு உண்மையா ? அரசியல் கட்சிகளின் அறியாமையா?
Published on

செம்மொழிக்கான குடியரசு தலைவர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து செம்மொழிகளுக்கும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். தமிழ் மொழிக்கும் ஆண்டு தோறும் விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 1958 சமஸ்கிருதம், அரபிக், பெர்சியன் ஆகிய மொழிகளுக்கு பட்டயம் வழங்கப்படும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1996-ல் பாலி மொழிக்கும் பட்டயம் வழங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் இது குடியரசுத் தலைவர் விருதாக மாற்றப்பட்டது. இம்முறையின் கீழ் 15 விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் மொழியும் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின் அதெற்கென பிரத்யேக பட்டயம் உருவாக்கப்பட்டு, செம்மொழி தமிழுக்கான குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டது. இதன்கீழ், ஒவ்வொரு ஆண்டும் தொல்காப்பியர் விருது , குறள்பீடம் விருது மற்றும் இளம் அறிஞர் விருது என மூன்று பிரிவுகளில் 8 விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் செம்மொழிக்கான விருதுகள் மற்றும் குடியரசுத்தலைவர் சான்றிதழ் தொடர்பான அறிவிப்பு மார்ச் 9-ல் வெளியானது. அதில் சமஸ்கிருதம், அரபிக், பெர்சியன் மற்றும் பாலி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தன. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 30 என்றும் கூறப்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழை புறக்கணித்து சமஸ்கிருதத்துக்கு சாமரம் வீசுவதாக அமைந்து விட்டதாக எதிர்கட்சிகள் பேச ஆரம்பித்தன. கண்டன அறிக்கையை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். தமிழை சேர்க்காதது மத்திய அரசு தமிழ் மீது கொண்ட வெறுப்பையும் பாகுபாடையும் காட்டுகிறது என்ற ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றார்.

ஸ்டாலின் சொல்வது உண்மையா ? குடியரசு தலைவர் விருதுகளில் தமிழ் மொழிக்கு இடமில்லையா ? பாராமுகம் காட்டி தமிழ் ஒதுக்கப்பட்டதா ? என பல கேள்விகள் எழுந்தது. ஆனால் ஸ்டாலின் மற்றும் திக , இதர கட்சிகள்  சொன்ன எந்த குற்றச்சாட்டிலும் உண்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதாவது , செம்மொழி தமிழுக்கான குடியரசு தலைவர் விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மூன்று பிரிவுகளாக விருதுகள் பிரிக்கப்படுகின்றன. தொல்காப்பியர் விருது , குறள் பீட விருது , இளம் அறிஞர் விருது. 2015-16 ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள், முந்திய ஆண்டு விருது வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது.

2016-17 ம் ஆண்டுக்கான செம்மொழி தமிழ் குடியரசு தலைவர் விருதுக்கான அறிவிப்பு முன்னரே வெளியாகிவிட்டது. விண்ணப்பங்களை சமர்பிக்க கடந்த 7-ம் தேதி கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டது. இதன்படி விண்ணப்பங்கள் தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளன. மற்றொரு முக்கியமான விஷயம் தமிழுக்கென மட்டும் தனியே அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ஏனெனில் தமிழாய்வு நிறுவனம் என்ற ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டு, தன்னாட்சி அமைப்பாகவும் மாற்றப்பட்டுள்ளது. மற்ற மொழிகளுக்கு விருது என்ற அறிவிப்பில், எந்த வருடமும் தமிழ் இடம் பெற்றதில்லை. ஏனெனில் தமிழ், இந்தி, உருது, சிந்த் போன்ற மொழிகளுக்கு மட்டுமே தன்னாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இப்படி தன்னாட்சி கொண்ட அமைப்புகள் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியே விருதுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

தமிழக எதிர்கட்சிகள் சொல்வது போல தமிழ் புறக்கணிப்பு என்பது அறியாமையாக இருக்கலாம் அல்லது அறிந்து கொண்ட அரசியலாக இருக்கலாம். ஆனால் புறக்கணிப்பு என்பது பொய்.

கூடுதல் தகவல்கள் மற்றும் விபரங்களுக்கு

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com