வெறுப்பு அரசியலை வளர்ச்சி அரசியல் வீழ்த்திவிட்டதா? - டெல்லி தேர்தல் ஓர் அலசல்

வெறுப்பு அரசியலை வளர்ச்சி அரசியல் வீழ்த்திவிட்டதா? - டெல்லி தேர்தல் ஓர் அலசல்
வெறுப்பு அரசியலை வளர்ச்சி அரசியல் வீழ்த்திவிட்டதா? - டெல்லி தேர்தல் ஓர் அலசல்
Published on

டெல்லி சட்டசபைக்குப் பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக அரியணையில் ஏற உள்ளார். பாஜக 8 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதோடு, 63 இடங்களில் டெபாசிட் இழந்தது.

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, தலைநகரமான டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது. இருப்பினும், இந்த முறை எப்படியும் டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்துவிடும் என அக்கட்சி தரப்பில் கூறப்பட்டு வந்தது. குறைந்தபட்சம் ஆம் ஆத்மிக்கு நெருக்கடி கொடுக்கும் என்றே பேசப்பட்டது. ஆனால், எவ்வித போட்டியும் இல்லாமல் 62 இடங்களைப் பிடித்து மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது ஆம் ஆத்மி.

கெஜ்ரிவாலின் இந்த வெற்றிக்கு வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து அவர் செய்த பிரசாரங்களே காரணம் எனவும் பாஜகவின் தோல்விக்கு அவர்களது வெறுப்பு அரசியலே காரணம் எனவும் அரசியல் விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கெஜ்ரிவாலின் பிரசாரத்தின்போது அவர் டெல்லியில் கடந்த ஆண்டுகளில் செய்த வளர்ச்சி திட்டங்களான இலவச மின்சாரம், கல்வி, தண்ணீர் போன்றவற்றின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். அவற்றைப் பட்டிதொட்டி எங்கும் சென்று சேருமாறு சமூக வலைத்தளங்களைத் திறமையாகக் கையாண்டார். தேசிய அரசியலிற்குள் போகாமல் மாநில பிரச்னைகளை மட்டுமே கவனத்தில் கொண்டார். ஆனால், பாஜக, அரவிந்த் கெஜ்ரிவாலை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்ததாகக் கூறப்பட்டது. கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி, இந்து விரோதி என்றெல்லாம் அக்கட்சியின் அமைச்சர்களே வார்த்தைகளை வாரி வீசியதாகப் புகார்கள்
எழுந்தன.

இதுகுறித்து பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “நிச்சயமாக பாஜகவின் வகுப்பு வாத அரசியல் டெல்லியில் எடுபடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 300க்கும் மேற்பட்ட எம்.பிக்கள், அமைச்சர்கள், 12 முன்னாள் மற்றும் இந்நாள் முதலமைச்சர்கள் டெல்லி தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அமித்ஷா, மோடி உட்படப் பலர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக யோகி ஆதித்யநாத் பேசுகையில் போலீஸ் சொல்வதை மக்கள் கேட்கவில்லை என்றால் குண்டுகள் பாயும் எனப் பேசினார். அதேபோல் அனுராக் தாக்கூர் வன்மையான பேச்சுக்களைப் பேசுகிறார். பாஜகவின் இத்தகைய வகுப்பு வாதத்தை மக்கள் புறந்தள்ளியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் மாலன் கூறுகையில், “டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில், பாஜக மாநிலப் பிரச்னைகள் குறித்துப் பேசவில்லை. அவர்கள் தேசிய அளவிலான பிரச்னைகளை மட்டுமே கையில் எடுத்துப் பேசி வந்தனர். இத்தகைய வியூகம் பாஜகவிற்குக் கைகொடுக்கவில்லை. பாஜகவின் திட்டத்தை அறிய மக்கள் முற்பட்டனர். ஆனால் அதைத் தெளிவாகச் சொல்லாமல் பாஜக தேசிய பிரச்னைகளையே பேசி வந்தது. ஆனால் கெஜ்ரிவால் அதைப் புரிந்து கொண்டு மாநில பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். மாநிலக் கட்சிகள் மக்களிடம் நெருக்கமாக இருக்கிறது என்பது ஒரு முக்கியமான விஷயம்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கனகராஜ் கூறுகையில், “இந்தியாவில் இவ்வளவு மோசமான வெறுப்பு பேச்சு பேசப்பட்ட தேர்தல் பரப்புரை இருந்ததே கிடையாது. மோடி, அமித்ஷா உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் பணி செய்தனர். அவர்களிடம் சரக்கு எதுவும் இல்லாததால் திரும்ப திரும்ப, பாகிஸ்தான், புல்லட், கற்பழிப்பு, கொலை, என்று மக்களை அச்சுறுத்துவதன் மூலமே வாக்குகளைப் பெற்று விட முடியும் என நம்பினார்கள். மக்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து நிற்பார்கள் என நினைத்தார்கள்.

முந்தைய தேர்தல் பிரசாரங்களில் பாஜக எந்த வாக்குறுதி அளித்தாலும் மோடியினால் முடியும் என்ற தோற்றம் இருந்தது. ஆனால் தற்போது அந்த தோற்றம் எதார்த்தத்தில் சுக்குநூறாக அடிப்பட்டுப் போய் விட்டது. இதனால் வேறு வழியில்லாமல் மக்களை அச்சுறுத்த நினைத்தனர். பிரசார காலம் முடிந்த பிறகே யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்புகிறது. போலீஸ், தேர்தல் ஆணையம், ஊடகங்கள் கூட பாஜகவின் பக்கமே நின்றது. அவர்கள் பேசிய வெறுப்பு பேச்சை மீண்டும் மீண்டும் போட்டுக்காட்டியது. அப்போதும்கூட அவர்கள் தேர்தலில் தோற்றுப் போயிருப்பது அவர்களிடம் விஷயம் ஒன்றும் இல்லை என்பதையே காட்டுகிறது. வெறுப்பு அரசியலால்தான் பாஜக தோற்றது.” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் கூறுகையில், “முதல்வர் வேட்பாளரை பாஜக அறிவிக்காதது தவறு. கெஜ்ரிவால் வெற்றி பெற்றதற்குக் காரணம் அவருடைய சாஃப்ட் இந்துத்துவா. மற்றொன்று அவருடைய செயல்பாடுகள். கெஜ்ரிவாலுக்கு நேர்மையான வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால் அதை மோடிக்கு எதிரான வாக்குகள் என்று பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸின் கோபண்ணா கூறுகையில், “இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை வளர்ச்சி அரசியலுக்கும் வகுப்புவாத அரசியலுக்கும் இடையே நடைபெற்ற போட்டிதான் இது. மதச்சார்பற்ற சக்தியாக ஆம் ஆத்மியை பார்க்க மறுக்கிறவர்கள் அதற்கு சாஃப்ட் இந்துத்துவா முகமூடியை அணிந்து கொச்சைப் படுத்துகிறார்கள். மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்துகிற செயலை தலைநகரில் பாஜகவினர் செய்துள்ளனர். பாஜகவுக்குப் பாடம் புகட்டவே, டெல்லி மக்கள் இந்த தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டனர்.” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com