1992ம் ஆண்டு தொடங்கி 2000ம் ஆண்டு வரை ஃபிலிம்ஃபேர் விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்காகவே தனியாக எடுத்துவைக்கப்பட்டிருக்கும். காரணம் 9 ஆண்டுகள் அந்த விருதை தனதாக்கிக்கொண்டிருந்தவர் ரஹ்மான். 2001ம் ஆண்டு அது. அந்த ஆண்டும் ரஹ்மான் தான் என நினைத்திருந்தார்கள். அங்கே ஒரு ட்விஸ்ட். 'தி அவார்ட் கோஸ்ட் டூ' என புதிய இசையமைப்பாளரின் பெயர் உச்சரிக்கப்பட்டது. எல்லோரும் திரும்பி பார்க்க இசையால் நடையை கட்டி வந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். முதல் படமான மின்னலே படத்திற்காக அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
இசை ஆத்மாக்களை வீணைகளால் மீட்டிய கலைஞன் ஹாரிஸ். ஒருதலைக்காதலர்களின் உற்ற நண்பன். இரு தரப்பு காதலர்களின் ஊடகன். தோற்றுப்போன காதல்களின் மீட்பன். வலிகளை கரைத்து, உற்சாகங்களை நுரைபொங்க செய்யும் ஏராளமான வித்தைகள் ஹாரிஸூக்கு அத்துப்படி!
ரோஜா படத்தில் தடம் பதித்த ரஹ்மானைப்போல, தனது முதல் படத்திலேயே தான் யார் என்பதை நிரூபித்திருப்பார் ஹாரிஸ் ஜெயராஜ். 'நான் பெங்களூர் பேசுறேன்.. ராஜேஸ்ல இருந்து' என மாதவன் உளறிக்கொண்டு ரீமாசனை மதிமயங்கி பார்த்துக்கொண்டிருப்பார். ரீமாசன் மழை நீரை காலால் உதைக்கும்போது, ஹாரிஸின் இசை சாரல் காதுகளில் தெறிக்கும். 'பூப்போல் என் நெஞ்சை கொய்தவள்' என்ற வரிகளுக்கிடையில் இசையால் நம் மனதை கொய்திருப்பார். குறிப்பாக அந்த புல்லாங்குழல் இசை அடுத்த 10 வருடங்களுக்கு ஏராளமானவர்களின் ரிங்டோனாக இருந்தது அவரின் சாதனை. மின்னலே படத்தின் ஆல்பமே ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ்-ஆக இருக்கும். மாஸ் இன்ட்ரோ பாடல், துளிர்க்கும் காதல், ஊடல், மென் காமம், காதல் தோல்வி, என எல்லா ஜானரையும் அடித்து துவைத்திருப்பார்.
அதேபோல, 'மேடி..ஓ..ஓ மேடி' என பிண்ணணி ஒலிக்க அப்பாஸைப்பார்க்க தனது கேங்குடன் மாதவன் நடந்து வரும்காட்சிகளில் அட்டகாசம் செய்திருப்பார் ஹாரிஸ். 2000ம் தொடங்கி அடுத்த 10 வருஷத்தை தன் ஸ்டூடியோவில் ஒளித்து வைத்திருந்தவர். ஒரு தசாப்தம் முழுவதும் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தார். எங்கு திரும்பினாலும், அவரின் எதாவது ஒரு பாடல் ஒடிக்கொண்டேயிருக்கும். குறிப்பாக காதலில் படர்ந்திருந்தவர்களுக்கு ஹாரிஸ் தான் ஹார்மோன் செஞ்சர்.
அடுத்து ‘12பி’ ‘மஜ்னு’ என காதல் கானங்களை வாசிக்கத் தொடங்கியது அவரின் கிட்டார். 1992ல் ரஹ்மான் நுழைந்து புதிய சவுண்டை கொடுத்தாரோ, அப்படி 2001ல் நுழைந்த ஹாரிஸின் சவுண் க்ளாரிட்டி வேற ஒரு புதுமையை கொடுத்தது. ஹாரிஸின் வருகை தமிழ் சினிமா இசைத் துறையில் ஒரு மைல்கல். அவரது ஆரம்பகால பாடல்களை எடுத்துக்கொண்டால் தெளிந்த நீரோடையைப்போல அப்படியிருக்கும். 'சாமுராய்', 'லேசா லேசா', 'உள்ளம் கேட்குமே' படங்களின் மூலம் 'மெலடி கிங்' ஆக உருவெடுத்தார் ஹாரிஸ்.
லேசா லேசா பாடல் கேட்கும்போது மனம் பஞ்சுபோல லேசாகி பறந்து கொண்டிருக்கும்போது, அடுத்த வரிகளில் 'நீயில்லாமல் வாழ்வது லேசா' என தனது இசையில்லாமல் வாழ முடியாது என்பதை குறியீடு மூலம் உணர்த்தியிருப்பார்.
இதமான சூட்டில் கண்களை மூடிக்கொண்டு கேட்கும் பாடல்களுக்கு சொந்தக்காரர் அவர். 'மூங்கில் காடுகளே' பாடலை நீங்கள் எங்கிருந்து கேட்டாலும், பொழியும் பனிக்கு நடுவே, மூங்கில் காடுகளுக்கு அருகில் நின்று கேட்பதைபோன்ற உணர்வை கொடுக்கும் மாஜிக் ஹாரிஸூடையது. 'காக்க காக்க' 'செல்லமே' படங்களில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவரிடமிருந்து அந்நியனும், வேட்டையாடு விளையாடுவும், தீம் மியூசிக்கின் கனமான அவுட்புட்டை பெற்று தந்தன. ''வேட்டையாடு விளையாடு' கமல் இன்ட்ரோ சாங் மாதிரி ஒன்னு போடுங்க' என ஹீரோக்கள் கேட்கும் அளவிற்கு தெறிக்கவிட்டிருப்பார். அந்நியனிலும் கேரக்டருக்கு தகுந்தாற்போல தனிதனி தீம் மியூசிக் அமைத்து தனது தனித்தன்மையை காட்டியிருப்பார்.
உன்னாலே உன்னாலே, தாம் தூம் படங்களில் ஜீவாவுடனான ஹாரிஸின் இணைவு அட்டகாசபடுத்தியிருக்கும். ஜூன் போனால்", "யாரோ மனதிலே" பாடல்கள் ஆத்மாவின் வருடல்கள். கெளதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்-இசையமைப்பாளர் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. பல காலத்தை வென்ற பாடல்கள் ரசிகர்களுக்குக் கிடைத்தன. ‘மின்னலே’ தொடங்கி ‘வாரணம் ஆயிரம்’ வரை தொடர்ந்த இந்தக் கூட்டணி, அதன் பிறகு ஏற்பட்ட ஒரு சிறு மனஸ்தாபத்தால் பிரிந்தாலும் மீண்டும் 2015இல் வெளியான ’என்னை அறிந்தால்’ படத்தில் மீண்டும் இணைந்தது. அந்தப் படத்தில் ‘மழை வரப் போகுதே’ உள்ளிட்ட அருமையான பாடல்கள் அமைந்தன.
’அயன்’, கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ உள்ளிட்ட கே.வி.ஆனந்த் படங்களிலும் பல சிறப்பான பாடல்கள் கிடைத்துள்ளன. ஹரி, ஏ.ஆர்.முருகதாஸ் எனப் பல வெற்றிப் படங்களை வழங்கிய முக்கியமான இயக்குநர்களுடன் அவ்வப்போது கைகோக்கும் ஹாரிஸ் அவர்கள் படங்களிலும் முக்கியமான பல வெற்றிப் பாடல்களை அளித்துள்ளார். செல்வராகவன் (இரண்டாம் உலகம்), கே.எஸ்.ரவிகுமார் (ஆதவன்), லிங்குசாமி (பீமா), பிரபுதேவா (எங்கேயும் காதல்), ஐ.அகமது (என்றென்றும் புன்னகை) எம்.ராஜேஷ் (ஒரு கல் ஒரு கண்ணாடி), ஆனந்த் ஷங்கர் (இருமுகன்), விஜய் (’வனமகன்’-ஹாரிஸின் 50ஆம் படம்) ஆகியோருடன் ஓரிரு படங்களில் பணியாற்றி சில மறக்க முடியாத வெற்றிப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய இசைவாத்தியங்களில் படிந்திருக்கும் தூசுகளைத்தட்டி, மீண்டும் பழைய ஹாரிஸ் ஜெயராஜாக திரும்பவேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் ஆத்மார்த்த கோரிக்கை.