வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் என்றாலே ஆக்ரோஷம், அதிரடி என எதிரணிக்கு பயம் காட்டுவார்கள். உதாரணத்துக்கு பவுலர்களில் ஜோயல் கார்னர், ஆம்பரோஸ், இயான் பிஷப், கர்ட்னி வால்ஷ் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல பேட்ஸ்மேன்களில் விவியன் ரிச்சர்ட்ஸ், பிரயன் லாரா, கிறிஸ் கெயில் ஆண்ட்ரே ரசல் என அந்த பட்டியலின் நீளமும் மிகப்பெரியது.
ஆனால் இதெல்லாம் இல்லாமல் தன்னுடைய அமைதியான பேட்டிங் மூலம் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா என பல நாடுகளை மிரட்டியவர் ஷிவநாராயண் சந்தர்பால். அப்படிப்பட்ட சந்தர்பால் இன்று தன்னுடைய 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்திய பூர்வகுடியான சந்தர்பாலின் குடும்பம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாடுகளுக்குத் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்டவர்கள். அப்பா மீனவர். அற்புத அழகிய கரீபியன் தீவுகளில் கிரிக்கெட் மிகவும் பிரபலம். அதனால்தான் சந்தர்பாலுக்கும் 8 வயதிலேயே கிரிக்கெட்டை பிடிக்க ஆரம்பித்துவிட்டது. பள்ளிக்கு சென்றபோதும் அவரது முழு கவனமும் கனவும் கிரிக்கெட் மீதே இருந்தது. அதனால் பள்ளிக்கு செல்வதை 13 வயதில் நிறுத்திவிட்டு முழு நேரமும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தொடங்கினார் சந்தர்பால்.
உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் 1994-ஆம் ஆண்டு சந்தர்பாலுக்கு இடம் கிடைத்தது. ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் சந்தர்பால். அறிமுகமான காலக்கட்டத்திலேயே தன்னுடைய வித்தியாசமான "Stance" மூலம் பெரும் கவனத்தை ஈத்தார் சந்தர்பால். அதாவது கிரிக்கெட் விளையாடுவதற்கு பேட்ஸ்மேன்களுக்கு காலம்காலமாக ஓர் விதி இருக்கிறது. அதாவது க்ரீஸில் இப்படிதான் நிற்க வேண்டும் என்பது அது. ஆனால் இதற்கு அப்படியே நேரெதிர் ஆனவர் சந்தர்பால்.
மூன்று ஸ்டம்ப்புகளையும் காட்டி, கொஞ்சம் லெக் அம்பயரைப் பார்த்தவாறு நிற்பார் சந்தர்பால். அதேபோல பேட்டை பின் தூக்கி "ஏரில்" வைத்திருப்பார். மேலும் கார்டு எடுக்கும்போது ஸ்டம்பில் இருக்கும் பேல்ஸ் எடுத்து அதனை பிட்சில் பேட்டை வைத்து தட்டி அடையாளத்தை குறித்துக்கொள்வார் சந்தர்பால். அதேபோல கண்களுக்கு கீழே கண் கூச்சத்தைத் தடுக்க கறுப்பு வண்ண ஸ்டிக்கர்களோடு விளையாடுவது சந்தர்பாலின் இன்னொரு அடையாளம். இவ்வளவு வித்தியாசமாக அவர் நின்று விளையாடினாலும் கிரிக்கெட்டின் அனைத்துவிதமான ஷாட்டுகளையும் அற்புதமாக விளையாடக் கூடியவர் சந்தர்பால். எதிரே பேட்ஸ்மேன்கள் அவுட்டானாலும் ஒரு பக்கம் நின்று பவுலர்களுக்கு கிலி காட்டுவார் சந்தர்பால்.
கவர் டிரைவ், ஆன் டிரைவ், புல் ஷாட் என அதளப்படுத்துவார் சந்தர்பால். ஒருகாலத்தில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலிய பவுலர்களை கடுப்பாக்கியவர் இவர் என்றால் இப்போதுள்ள 2K கிட்ஸ்களால் நம்ப முடியாது. இவரின் சமகால பேட்ஸ்மேன்தான் லாராவும். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் லாராவை காட்டிலும் பவுலர்களை அதிகம் சோதித்தவர் சந்தர்பால். அதற்கு இந்திய பவுலர்கள் தப்பவில்லை என்பதை அவரின் ரெக்கார்டுகள் சொல்கிறது. இந்தியாவுக்கு எதிராக மட்டுமே 7 சதங்கள் அடித்திருக்கிறார். 25 போட்டிகளில் விளையாடி 2,171 ரன்கள் அடித்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக சந்தர்பாலின் ஆவரேஜ் 70.
அதுவம் 2002 ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சந்தர்பால் அடித்த 140 ரன்கள் "பியூர் கிளாஸ்". 1990-களில் வந்த கிரிக்கெட் வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக ஆண்டுகள் விளையாடியவர் சந்தர்பால். 21 ஆண்டுகள் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி 164 டெஸ்ட் போட்டிகளில் 11,867 ரன்கள் அடித்திருக்கிறார் சந்தர்பால். அதில் மொத்தம் 30 சதங்கள், 66 அரைசதங்கள் அவரின் ஆவரெஜ் 51.37. ஒருநாள் போட்டிகளிலும் சந்தர்பால் கில்லிதான். 268 போட்டிகளில் விளையாடி மொத்தம் 8778 ரன்களும், 11 சதங்களும், 59 அரை சதங்களும் விளாசியிருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் கடைசியாக ஆடிய 200 ஆவது போட்டி சிவநாராயணன் சந்தர்பாலுக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தப் போட்டி. சந்தர்பால் ஆடிய 150வது டெஸ்ட் போட்டி அது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் பிரச்னை காரணமாக சில காலம் சந்தர்பாலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் வயது சென்றுக்கொண்டே இருக்க 41 ஆவது வயதில் 2016 ஆம் ஆண்டு தன்னுடைய ஓய்வை அறிவித்தார் சந்தர்பால். வெஸ்ட் இண்டீஸ்க்கு மட்டுமல்ல உலக கிரிக்கெட் வரலாற்றில் இப்படியொரு வித்தியாசமான பேட்ஸ்மேன் கிடைப்பது அறிது. அப்படிப்பட்ட ஒரு அற்புத வீரர்தான் சந்தர்பால். ஆனால் அவர்காலத்தில் சச்சின், லாராவுக்கு இருந்த புகழ் சந்தர்பாலுக்கு கிடைக்காமல் போனதுதான் சோகம்.