கையில்லா சாராவின் அழகிய கையெழுத்து

கையில்லா சாராவின் அழகிய கையெழுத்து
கையில்லா சாராவின் அழகிய கையெழுத்து
Published on

எல்லோரையும் போலத்தான் அந்த குழந்தையும் பிறந்தது. ஆனால் அவளுக்கு மணிக்கட்டுக்கு பிறகான கைப்பகுதி இல்லை என்று அவளது பெற்றோர் உணரவே நாட்கள் ஆனது. பேனாவோ , பென்சிலோ பிடித்து எழுத விரல்கள் இல்லா அந்த குழந்தை , இன்று மிகச்சிறந்த கையெழுத்து கொண்ட சிறுமி என்ற பெருமைக்கு ஆளான கதையையே இன்று பார்க்க போகிறோம். 

சாரா ஹின்ஸ்லே - 10 வயதான சிறுமி. அமெரிக்காவில் வசித்து வரும் சாராவுக்கு பிறந்தது முதலே மணிக்கட்டு பகுதிக்கு பிறகு பாகங்கள் இல்லை. ஆனால் அவளிடம் தன்னம்பிக்கை இருந்தது. மிகச்சிறந்த பயிற்சியும் , விடா முயற்சியும் சாராவோடு ஒட்டிப் பிறந்திருந்தன. விரல்கள் இல்லாவிட்டால் ஒருவரால் எழுத முடியும் என கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? அப்படியே முடிந்தாலும் அந்த கையெழுத்து மிக அழகாக இருக்கும் என சொல்ல முடியுமா ? சாராவின் கையெழுத்தை பார்க்கும் முன் அனைவருக்கும் அப்படி தோன்றியிருக்க வாய்ப்புண்டு. 

அமெரிக்காவில் நடந்த தேசிய அளவிலான கையெழுத்து போட்டியில் சாராவும் கலந்து கொண்டாள். நாடு முழுக்க இருந்து பல்வேறு பள்ளிகளை சார்ந்த குழந்தைகளும் அந்த போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். மிக விறுவிறுப்பாக நடந்தது போட்டி. யார் ஜெயிக்க போகிறார் என்ற ஆர்வம் பலருக்கும் இருந்தது. சாராவுக்கும் அந்த ஆர்வம் இல்லாமல் இல்லை. கண்டிப்பாக ஜெயிப்போம் என எண்ணிக் கொண்டிருந்தாள். நடுவர்கள் முடிவை அறிவித்த போது பலருக்கும் ஆச்சரியம். ஆம் , எந்த குழந்தைக்கு பேனாவை பிடித்ஃது எழுத விரல்கள் இல்லையோ , அந்தக் குழந்தையின் கையெழுத்து மிகச்சிறந்த கையெழுத்தாக அறிவிக்கப்பட்டது. 

இந்த வெற்றி குறித்து நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு பேசிய சாரா “ என்னை சுற்றியுள்ள அனைத்தையும் நான் விரும்புகிறேன். எதையும் சவாலாக எடுத்து செய்வதை விட, பிடித்து செய்கிறேன். எனது அக்கா வெரோணிக்காவோடுச் ஏர்ந்து கொண்டு செஸ் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாள். ஆங்கிலத்தோடு சேர்த்து இன்னும் சில மொழிகளையும் எழுத நான் காற்றிருக்கிறேன், அதோடு மிக நன்றாக ஓவியம் வரைவேன் தெரியுமா ! என்றாள். 

சாராவின் அம்மா கூறும் போது “ இதை என்னால் செய்ய முடியுமா என சாரா ஒருமுறை கூட கேட்டதில்லை” அவளது இரண்டு மணிக்கட்டுகளுக்கு இடையே பென்சிலை வைத்துக் கொண்டு எழுத முயல்வாள். எழுத முடியவில்லை என உணர்ந்தது போது , ஏன் ஓவியமாக தீட்டக் கூடாது என எண்ணினாள் சாரா. இப்போது ஓவியம் வரைவதாக நினைத்து மிக அழகாக எழுத ஆரம்பித்து விட்டாள்” என பெருமைப்பட்டார். 

மூன்றாம் வகுப்பு படிக்கும் சாராவின் ஆசிரியை ஜெரில் பேசிய போது “ இது முடியாது , நான் எப்படி செய்ய முடியும் என்ற எந்த தயக்கத்தையும் நான் சாராவிடம் கண்டதில்லை. தன்னுடைய சிறப்பான விஷயத்தை எப்போதும் வெளிக்கொணவே சாரா முயல்வாள். அதுவே சாராவின் இந்த வெற்றிக்கு காரணம் என்றார். தேசிய கையெழுத்து போட்டியில் வென்ற சாராவுக்கு 500 டாலர் அமெரிக்க பணம் கொண்ட பரிசு வழங்கப்பட உள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com