இந்தியா முழுவதும் கூர்ந்து கவனிக்கப்பட்டுவந்த ஹதியா திருமண வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த ஹதியாவுக்கும் ஷஃபின் ஜஹானுக்கும் நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லாது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. சர்வதேச மகளிர் தினத்தில் வழங்கப்பட்டிருக்கும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பலவிதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கேரளாவின் கோட்டயம் மாவட்டம், டி.வி.புரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். அவரது மகள் அகிலா. சேலத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி ஒன்றில் படித்துவந்த அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்லிமாக மதம் மாறி தனது பெயரை ஹதியா என மாற்றிக்கொண்டார். அதை அறிந்த அவரது பெற்றோர் அவர் மதம் மாறியது செல்லாது என அறிவிக்கும்படி வழக்கு தொடுத்தனர். ஆனால் அவர் தனது விருப்பத்தின் அடிப்படையில்தான் மதம் மாறியிருக்கிறார் எனக்கூறி நிதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. அதன்பின்னர் ஹதியா, ஷஃபின் ஜகான் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
’அகிலாவை அச்சுறுத்தி மதம் மாற்றியிருக்கிறார்கள். அவர் பலவந்தத்தின் பேரில்தான் திருமணத்துக்கு சம்மதித்திருக்கிறார். எனவே இந்தத் திருமணத்தை செல்லாது என அறிவிக்கவேண்டும்’ எனக் கோரி அவரது தந்தை அசோகன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்துப் பெண்களைக் காதலித்து முஸ்லிமாக மாற்றுவதற்கு மிகப்பெரும் சதி நடக்கிறது. ‘லவ் ஜிகாத்’ என அழைக்கப்படும் அந்தத் திட்டமிட்ட சதியைத் தடுத்து நிறுத்தவேண்டும் என இந்துத்துவ அமைப்புகள் சர்ச்சையைக் கிளப்பின.
அகிலாவின் வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அகிலாவின் திருமணம் ‘லவ் ஜிகாத்’ என்று கருதுவதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக்கூறி ஹதியா எனப்படும் அகிலா – ஷஃபின் ஜஹான் திருமணத்தை 2017 ஆம் ஆண்டு ரத்து செய்தது. அதுமட்டுமின்றி ‘லவ் ஜிகாத்’ மூலம் பெண்கள் மதம் மாற்றப்பட்டு தீவிரவாத அமைப்புகளில் சேர்க்கப்படுகிறார்களா என விசாரிக்கும்படி தேசிய புலனாய்வு நிறுவனத்துக்கும் (என்.ஐ.ஏ) உத்தரவிட்டது. ஹதியா அவரது பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டார்.
கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனம் ஒப்பி செய்துகொண்ட திருமணம் ஒன்றை ரத்துசெய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்கிறதா என சட்ட வல்லுனர்கள் கேள்வி எழுப்பினர்.
அதையடுத்து ஷஃபின் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஹதியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் ஆஜரான ஹதியா, தனது விருப்பத்தின்பேரில்தான் ஷஃபின் ஜஹானைத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னை எவரும் நிர்ப்பந்தப்படுத்தவில்லையெனவும்; தனது சித்த மருத்துவப் படிப்பைத் தொடர விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் கூறினார். அவரது கோரிக்கையை ஏற்று, சேலத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் அவரது படிப்பைத் தொடர்வதற்கும், அவருக்குத் தமிழக அரசு பாதுகாப்பு அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹதியா வழக்கில் அவரது தந்தை அசோகனுக்காகவும், அவரது தரப்பைச் சார்ந்தவர்களுக்காவும் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் உட்பட 37 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.
ஹதியாவின் கணவர் ஷஃபின் ஜஹானுக்காக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் உள்ளிட்ட 13 வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.
“ ஆட்கொணர்வு மனுமீதான் விசாரணையின்போது நீதிமன்றம் தன்னிச்சையாக திருமணம் ஒன்றை ரத்துசெய்ய முடியுமா?” என கபில் சிபல் கேள்வி எழுப்பினார். ” வயதுவந்த ஆணும் பெண்ணும் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொண்டால் அதில் மூன்றாவது நபர் எவரும் தலையிட முடியாது என்பது சட்டத்தில் உறுதிசெய்யப்பட்ட ஒன்று” என அவர் சுட்டிக்காட்டினார்.
” ஒருவர் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 21ல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையின் அங்கமாக இருக்கிறது. ஆட்கொணர்வு மனு என்பது சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக் கோருவதாகும். அதன் வரம்பு அத்துடன் முடிந்துவிடுகிறது “ என்று வாதிட்ட கபில் சிபல் , ’சோனி கெர்ரி எதிர் கெர்ரி டக்ளஸ் ‘ என்ற வழக்கில் ”வயதுவந்த நபர்கள் தமது கருத்துகளைத் தெரிவிக்கும்போது அதை மீறி நீதிமன்றம் ஒரு ‘சூப்பர் கார்டியனாக’ செயல்பட முடியாது” என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
” அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 226 திருமணம் ஒன்றை ரத்துசெய்யும் அதிகாரத்தை நீதிமன்றத்துக்கு வழங்கியிருக்கிறது. ஒரு திருமணம் மோசடியாக நடத்தப்பட்டிருக்கிரது என நீதிமன்றம் கருதினால் அதை ரத்துசெய்ய முடியும் ’ என ஹதியாவின் தந்தை அசோகனுக்காக வாதாடிய வழக்கறிஞர் ஷ்யாம் திவான் சுட்டிக்காட்டினார்.
“ வறுமை, படிப்பறிவின்மை ஆகிய காரணங்களால் ஒரு திருமணம் கட்டாயமாக நடத்தப்பட்டிருக்குமானால் நீங்கள் கூறுவது பொருந்தும். ஆனால் இரண்டு நபர்கள் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொண்டால் அவர்களின் விருப்பம் சரியா தவறா என்றோ அந்தத் திருமணம் செல்லுமா செல்லாதா என்றோ நீதிமன்றம் ஆராய முடியுமா? “ என நீதிபதி ஒய்.சந்த்ரசூட் கேட்டார்.
” உறுப்பு 226 வழங்கியுள்ள அதிகாரம் என்பது குடிமக்களின் உரிமை ஒன்றைக் காப்பாற்றுவதற்குத்தானேயொழிய அந்த உரிமையின் கழுத்தை நெறிப்பதற்கு அல்ல ” எனக் கருத்து தெரிவித்த தலமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ” ஒரு குற்றத்தைச் செய்வதற்காகத்தான் ஒரு திருமணம் நடத்தப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் குற்ரவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கலாமே தவிர திருமணத்தை ரத்துசெய்ய முடியாது” என்று சுட்டிக்காட்டினார்.
இந்தப் பின்னணியில்தான் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை இப்போது வழங்கியிருக்கிறது. ” இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்ததன் அடிப்படையிலும், இந்த வழக்கு குறித்த உண்மைகளை ஆராய்ந்ததன் அடிப்படையிலும் ஹதியா – ஷஃபின் ஜஹான் திருமணத்தை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கக்கூடாது என இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஹதியா என்னும் அகிலா அசோகனை நேரில் ஆஜராகுமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 2017 நவம்பர் 27 ஆம் நாள் அவர் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகித் தனது திருமணம் தனது முழு சம்மதத்தோடுதான் நடந்தது எனக் கூறினார். எனவே கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது. சட்டப்படி தனது எதிர்காலத்தைத் தீர்மானித்துக்கொள்ள ஹதியா அனுமதிக்கப்படுகிறார். இந்தப் பிரச்சனையில் குற்றத்தன்மை ஏதேனும் இருக்கிறதா எனக் கண்டறிய தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ) மேற்கொண்டிருக்கும் விசாரணை சட்டப்படி தொடரும் ” என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு வகுப்புவாத அமைப்புகள் பரப்பிவந்த ‘லவ் ஜிகாத்’ என்ற கற்பிதத்தைத் தகர்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி, ‘வயதுவந்த இருவர் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொண்டால் அதில் அவர்களது பெற்றோர் நீதிமன்றம் உள்ளிட்ட எந்தவொரு மூன்றாவது நபரும் தலையிட முடியாது’ என உறுதிபடுத்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு மதவாதத்துக்கு மட்டுமின்றி ’சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகப் பேசிவரும் சாதிய வாதத்துக்கும் சவக்குழி தோண்டியிருக்கிறது.
மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் தனி மனிதர்களின் உரிமைகளில் எவரும் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. இனியாவது ‘லவ் ஜிகாத் ‘ என்ற பொய்ப் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஆனால், வகுப்புவாத நெருப்பில் குளிர்காய நினைக்கும் ஆட்சியாளர்கள் அதைச் செய்வார்களா?