ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல், சிரமங்களை எதிர்கொண்டவர்களுக்காக குஜராத் பள்ளிக் கல்வி நிர்வாகம் எடுத்துள்ள புதிய முயற்சிகள், கொரோனா பேரிடரின் தாக்கத்தல் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள 'டிஜிட்டல் பாகுபாடு' என்ற சமூகப் பிரச்னைக்குத் தீர்வாக அமைந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் நாரன்புரா நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, அந்தப் பகுதியில் உள்ள ஒரு திறந்தவெளி பூங்காவில் பாடம் கற்பித்து வருகிறார்கள் ஆசிரியர்கள். பூங்காவின் ஒருபுறம் 8-ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம் பயின்று வரும் வேளையில், மறுபுறம் 6-ம் வகுப்பு மாணவர்கள் கணிதம் கற்று வருகின்றனர்.
இவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க பூங்காவில் உள்ள கான்கிரீட் பெஞ்சில் போர்டு வைக்கப்பட்டுளள்து. மாணவர்கள் இப்படி திறந்தவெளியில் பாடம் கற்பிக்க காரணம், அந்தப் பள்ளியில் இடம் இல்லாமலோ, அல்லது பள்ளி சிதிலமடைந்துவிட்டது என்பதாலோ அல்ல. அரசின் புதிய திட்டத்தால் இப்படி திறந்தவெளி கல்வி கற்பிக்கப்படுகிறது.
கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் வகுப்புகள் நாடு முழுவதும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பலரால் இந்த ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. காரணம், வறுமை நிலை. இப்படியான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் விதமாக குஜராத் அரசு கொண்டுவந்த திட்டம்தான் ஷெரி ஷிக்ஷன் (தெருக் கல்வி) திட்டம். இந்தத் திட்டத்தின்படி, ஆன்லைன் கல்வியில் பங்கேற்க முடியாதவர்களை மொத்தமாக ஒருங்கிணைந்து சிறிய சிறிய குழுவாக அவர்களின் வீட்டின் அருகே உள்ள ஏதேனும் பொது இடத்தில் கல்வியை பயிற்றுவிப்பதாகும். அதன்படிதான் பூங்காக்களில், கோயில்களில் இதுபோன்ற வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி ஜூன் கடைசி வாரத்தில்தான் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனடிப்படையில்தான் நாரன்புரா பள்ளி மாணவர்களுக்கு பூங்காவில் வைத்து பாடம் நடத்துகிறார்கள் ஆசிரியர்கள்.
இந்த மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் ருச்சிகா ஷா, ``இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஆன்லைன் கல்வி சேவையை பெற முடியாதவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், பலர் இந்தத் திட்டத்தில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். தினமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, ஆசிரியர்கள் நாங்கள் அனைவரும் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று எங்கள் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம்.
குழந்தைகள் ஓர் அறை அல்லது கட்டடத்துக்குள் அமரவைக்கப்படவில்லை என்பதைத் தவிர, இது வழக்கமான பள்ளியைப் போன்றது. 3-5 மற்றும் மேல்நிலை 6-8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. திட்டம் இப்போது வெற்றிகரமாக சென்றாலும் ஆரம்பத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தங்கள் பள்ளியைத் தவிர வேறு இடங்களில் படிக்க அனுப்ப யோசித்தனர். சில பெற்றோர்கள் தயங்கினர். குறிப்பாக சிறுமிகளின் பெற்றோர் தங்கள் மகள்களை பொது இடத்தில் படிக்க அனுப்புவது குறித்து நிறைய சிந்தித்தனர். ஆனால் படிப்படியாக தங்கள் குழந்தைகள் பாதுகாப்பான கைகளில் இருப்பதை உணர்ந்து திறந்தவெளி வகுப்புகளுக்கு அனுப்பினர்" என்றுள்ளார்.
இந்த வகுப்புகளில் கலந்துகொள்ளும் அசோக் துங்காரியா என்ற மாணவர், ``ஆன்லைன் வகுப்புகள் நடந்தபோது எங்கள் தெரு சத்தமாக இருப்பதால் அப்போது நடத்தப்பட்ட பாடம் எதுவும் எனக்கு கேட்கவில்லை. தொலைபேசி நெட்வொர்க்கும் எனக்கு சிக்கலை ஏற்படுத்தியது. எனவேதான் இந்த வகுப்பில் கலந்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்தத் திட்டம் தற்போது அந்தப் பகுதிகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. என்றாலும், கொரோனா அச்சமும் நிலவி வருவருவது இந்தத் திட்டத்தில் சற்றே பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனாலும், உரிய தனிமனித இடைவெளியுடன் பாடம் நடத்தப்படுவது, டிஜிட்டல் பாகுபாட்டை நம் குழந்தைகளை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது என்பதையும் உணரும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
தகவல் உறுதுணை: The Indian Express