கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தும் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாக, அறிகுறிகளற்ற மற்றும் அறிகுறிகள் குறைவாக இருக்கும் நபர்களுக்கு வீட்டுத்தனிமை பரிந்துரைக்கப்படுகிறது. இதன்மூலம், தீவிர பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் போகும் நிலை முடிந்தவரை தவிர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.
வீட்டுத்தனிமை என்று சொல்லிவிட்டாலும், அவர்களும் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களே. இவர்கள் நோயிலிருந்து மீளவும் நோயை மேலும் பரப்பாமல் இருக்கவும் சில வழிமுறைகள் இருக்கின்றன. சுகாதாரத் துறை வழிகாட்டும் அந்த வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
முதல் விஷயம், அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் நோயாளியை பார்த்துக்கொள்ள பராமரிப்பாளர் இருக்க வேண்டும். அப்படியானவர்கள்தான், வீட்டுத்தனிமையை நாட வேண்டும். பராமளிப்பாளர் இல்லையெனில், கோவிட் கேர் சென்டரை நாடுவது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு, அதற்கேற்ப முடிவெடுங்கள்.இப்போது நெறிமுறைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
வீட்டுத்தனிமையில் இருப்போருக்கு...
ஆக்சிஜனுக்கு எளிய பயிற்சி:
உடலில் ஆக்சிஜன் அளவை அறிய ஆக்சிமீட்டரில் பரிசோதிக்கும்போது, 94 சதவிகிதத்துக்கும் குறைவாக காண்பித்தால், நீங்கள் எளிய பயிற்சியை செய்யலாம். இந்தப் பயிற்சிக்கான வழிமுறைகள் ஒவ்வொன்றையும், 30 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பின்பற்றுங்கள். படத்தில் காட்டியிருக்கும் பொசிஷன்களை மனதிற்கொண்டு, இந்தப் பயிற்சிகளை செய்யத் தொடங்குங்கள்.
1) முதலில் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை, படத்தில் உள்ளதுபோல் குப்புறப்படுத்துக் கொள்ளுங்கள்; வயிறுப்பகுதிக்கு மட்டும் கூடுதல் அழுத்தம் கிடைக்குமாறு படுக்கவும்.
2) அடுத்து 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை, படத்தில் உள்ளதுபோல் படுக்கையில் வலதுபக்கம் உடலை சாய்த்துக்கொண்டு, வலது கையை தலைக்கு முட்டுக்கொடுத்தவாறு படுக்கவும்.
3) பின்னர், 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை, படத்தில் உள்ளதுபோல் முதுகை சற்றே - அதாவது 30 முதல் 60 டிகிரி வரை சாய்த்துக் கொண்டு, கால்களை நேராக நீட்டி அமரவும்.
4) அதன்பின் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை, படுக்கையில் இடதுபக்கம் நோக்கி உடலை சாய்த்துக்கொண்டு, இடதுக்கையை தலைக்கு முட்டுக்கொடுத்தவாறு படத்தில் காட்டியவாறு படுக்கவும்.
5) ஐந்தாவதாக, 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை, படத்தில் காட்டியவாறு குப்புறப்படுத்து, வலதுகாலை சற்று மேல்நோக்கி செங்குத்தாகவும், வலதுகையை மேல்நோக்கி உயர்த்தியும் படுக்கவும். இதைசெய்யும்போது இடதுபுற கை மற்றும் கால், நேராக இருக்க வேண்டும்.
6) ஆறாவதாக, மீண்டும் முதல் நிலையிலிருந்து ஒவ்வொன்றாக பின்பற்றுங்கள். ஒருவேளை, 92 சதவிகிதத்துக்கும் குறைவாக ஆக்சிமீட்டரில் வந்துவிட்டால், உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.
பராமரிப்பாளர்கள் கவனத்துக்கு...
வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கென எப்படி நெறிமுறைகள் உள்ளதோ, அதுபோலவே அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
கர்ப்பிணிகள், இதயப் பிரச்னை உள்ளவர்கள், முதுகுத்தண்டுவட பிரச்னை இருக்கிறவர்கள், எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பவர்கள், நரம்பு ரத்த உறைவு சிக்கல் இருப்பவர்கள், இவற்றை செய்ய வேண்டாம்.