'கூட்டு நாடகமா?' - எழுவர் விடுதலையில் எழுப்பப்படும் சந்தேகமும் பின்புலமும்!

'கூட்டு நாடகமா?' - எழுவர் விடுதலையில் எழுப்பப்படும் சந்தேகமும் பின்புலமும்!
'கூட்டு நாடகமா?' - எழுவர் விடுதலையில் எழுப்பப்படும் சந்தேகமும் பின்புலமும்!
Published on

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்கும் தமிழக அரசின் தீர்மானத்தில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று 28 மாதங்கள் கழித்து கையை விரித்திருக்கிறார் தமிழக ஆளுநர். இந்த விவகாரத்தில் எப்போதுதான் தீர்வு கிடைக்கும்?

30 ஆண்டுகளாக தொடரும் சட்டப் போராட்டத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாக கூறி, ஆளுநர் தரப்பு தற்போது தெரிவித்திருக்கிறது. கடந்த 25-ஆம் தேதி இந்த உத்தரவை ஆளுநர் தரப்பு, மத்திய அரசுக்கு அனுப்பியிருந்த நிலையில், நேற்று (பிப்.4) இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்த நிலையில், இதுபற்றிய ஆளுநரின் முடிவு கடந்த 28 மாதங்களாக வெளிவராமல் இருந்தது.

இதுகுறித்து பேரரறிவாளன் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஜனவரி 29 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க ஆளுநருக்கு அவகாசம் வழங்கியது. இந்த நிலையில்தான் எழுவர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என்று ஆளுநர் தெரிவித்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலை உருவாகியிருக்கிறது.

எழுவர் விடுதலை எப்படியும் சாத்தியமாகும் என்று தமிழக மக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், ஆளுநரின் இந்த முடிவு பேரதிர்ச்சியாக மாறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட வாய்ப்புகளை ஆராய்வதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

ஆளுநரின் இந்த முடிவு பற்றி பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் “எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் எடுத்துள்ள முடிவு மாநில அரசாங்கத்தை மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தையே அவமதிக்கும் செயல். அரசியலமைப்பு சட்டத்தில் உறுப்பு 72இன் படி குடியரசுத் தலைவருக்கு தண்டனை குறைப்பு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதைப் போலவே, உறுப்பு 161இல் இவ்வாறு தண்டனைக்குறைப்பு செய்வதற்கு மாநில அரசுக்கு, ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக தெளிவாக அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது.

இந்த அதிகாரங்கள் இரண்டுமே இணையானதுதான். இதனை பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உறுதிபடுத்தியிருக்கின்றன. 2003-இல் டெல்லி அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இதனை உறுதி செய்தது. அதுபோலவே 1990 ஜுவிந்தர் சிங் மற்றும் பஞ்சாப் அரசுக்கு இடையே நடந்த வழக்கிலும் இது உறுதி செய்யப்பட்டது. தற்போதைய ராஜீவ் காந்தி வழக்கிலும் 161வது பிரிவின் அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உறுதி செய்திருக்கிறது. இதன்படியே தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஏகமனதாக எழுவர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார்கள். தற்போது அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இந்த முடிவை எடுக்கவே ஆளுநர் 28 மாதங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். இப்போதும் அவராக இந்த முடிவை எடுக்கவில்லை; உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு பிறகே முடிவெடுத்திருக்கிறார்.

இவ்விவகாரம் பற்றி குடியரசுத் தலைவர் முடிவெடுக்க அனுப்பியுள்ளதாக ஆளுநர் கூறுகிறார். அவ்வாறு அனுப்ப அவருக்கு உரிமை இல்லை. 161 பிரிவின்படி அமைச்சரவை பரிந்துரை செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது அவருக்கு ஏதேனும் சந்தேகம்  இருந்தால் அதனை திருப்பியனுப்பலாம். ஆனால் அவர் இப்போது குடியரசுத் தலைவருக்கு இந்த தீர்மானத்தை அனுப்பியிருப்பது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதும், அவமானப்படுத்துவதும் ஆகும். கடந்த ஜனவரி 25 ஆம் தேதியே ஆளுநர் இதுபற்றி முடிவெடுத்த நிலையில், இதுநாள் வரை தமிழக அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே இது கூட்டுச் சதியாகவே தெரிகிறது.

28 மாதங்களாக தமிழக அமைச்சரவை தீர்மானத்தை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது குடியரசு தலைவரிடம் அனுப்புவதாக சொல்வதை தமிழக அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும். ஏனென்றால் இது மாநில உரிமைகள், அதிகாரம் சம்பந்தப்பட்ட விஷயம். மேலும்  உடனடியாக மாநில அரசு மீண்டும் எழுவர் விடுதலை தொடர்பான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநர் இந்த மறுதீர்மானம் குறித்து முடிவெடுக்கும் வரை ஏழு பேருக்கும் பரோல் கொடுக்கவேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தமிழக அரசுக்கு எழுவர் விடுதலையில் உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்று நம்பலாம், இல்லையென்றால் ஆளுநரின் இந்த முடிவு தமிழக அரசுடன் சேர்ந்து நடத்தும் கூட்டு நாடகமாகவே கருத வேண்டும்.

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு குற்றவாளிகள் விடுதலைக்கு மிக எளிதாக ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கிய தமிழக அரசால் எழுவர் விடுதலையில் ஒப்புதல் வாங்க முடியவில்லை என்பது தமிழக அரசின் மீதான சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது” என்கிறார் ரவிக்குமார்.

குடியரசுத் தலைவர்தான் எழுவர் விடுதலை தீர்மானம் குறித்து முடிவெடுக்கவேண்டும் என்று தமிழக ஆளுநர் பரிந்துரைத்திருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக பேசிய மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, “161 மற்றும் 162 வது பிரிவின்படி இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே தெரிவித்து வருகிறேன்” என்கிறார் உறுதியாக.

“மாநில அரசு எடுத்த முடிவை உறுதி செய்ய மறுத்தது பொறுப்பற்ற செயல். ஆளுநர் எடுக்கவேண்டிய முடிவை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்தது இதுவரை நடக்காதது” என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் தெரிவித்திருக்கிறார்.

தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி விடுதலைக்கு ஒப்புதல் அல்லது நிராகரிப்பு என்ற இரண்டு முடிவுகள் மட்டுமே ஆளுநரின் முன்பு இருந்தன. ஆனால் இரண்டிற்கும் மாறான முடிவை அவர் எடுத்துள்ளார் என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துருவும் ஆளுநரின் முடிவை விமர்சித்துள்ளார்.   

ஆளுநர் எத்தகைய முடிவையும் எடுத்திருக்கலாம். ஆனால் அதற்காக அவர் 28 மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டது என்பது எழுவர் விடுதலையை தாமதப்படுத்தும் முயற்சிதான் என்று அரசியல் கட்சியின் தலைவர்கள் பலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

இதுகுறித்து பேசிய பேரரறிவாளனின் வழக்கறிஞர் பிரபு “இது தொடர்பான எங்களின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எங்களின் வழக்கே இரண்டு ஆண்டுகளாக தமிழக அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்ல என்பதுதான்.

தற்போதுதான் ஆளுநர் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது அனுபவமற்ற செயல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு எடுத்த அமைச்சரவை முடிவை, மாநில அரசின் உரிமையை மத்திய அரசிடம் ஆளுநர் ஒப்படைத்திருக்கிறார். இது சட்டவிரோதமானது. சில நாட்களில் எடுக்கக்கூடிய இந்த முடிவை, 09/09/2018 இல் தமிழக அமைச்சரவை தீர்மானம் அளித்த 28 மாதங்கள் கழித்து முடிவெடுத்துள்ளது, அவரின் பதவிக்கே நியாயமற்ற செயல்” என தெரிவித்தார்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் அத்தனை சட்டப் போராட்டங்கள், கருணை மனுக்கள் எல்லாமே நீண்ட வருட காலதாமதம் செய்யப்பட்டது. தற்போது ஆளுநர் தன்னிடம் இருந்த பந்தை குடியரசு தலைவரை நோக்கி தூக்கி எறிந்திருக்கிறார். இதற்கு அவர் எப்போது முடிவெடுப்பார். தமிழக அரசு இந்த விவகாரத்தை எப்படி அணுகப்போகிறது என்ற கேள்விகளுக்கு பின்னால் அற்புதம் அம்மாளின் கண்ணீர் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com