விழிப்புணர்வு சரி, ஆனால் கிடைக்கிறதா? - கிருமிநாசினிகள் கிடைக்காமல் அலையும் சென்னை மக்கள்!

விழிப்புணர்வு சரி, ஆனால் கிடைக்கிறதா? - கிருமிநாசினிகள் கிடைக்காமல் அலையும் சென்னை மக்கள்!
விழிப்புணர்வு சரி, ஆனால் கிடைக்கிறதா? - கிருமிநாசினிகள் கிடைக்காமல் அலையும் சென்னை மக்கள்!
Published on

கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் மட்டும் அவ்வைரஸின் தாக்கத்தால் 3‌119 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சீனாவில் 22 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்நாட்டில் 80 ஆயிரத்து 73‌5 பேர் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.‌

சீனாவி்ற்கு அடுத்தபடியாக, இத்தாலியில் ‌‌366 பேர் இவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.‌ ஈரான், தென்கொரியா, பிரான்ஸ் என கொரோனாவால் உயிரிழப்பை சந்தித்துள்ள நாடுகளில் பட்டியல் நீள்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் மூன்று வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அதிகாரிகள் இன்று உறுதி செய்துள்ளனர்.

கொரோனாவுக்குள் சிக்காமல் இருந்த தமிழகமும் தற்போது சிக்கியுள்ளது. ஓமனில் இருந்து காஞ்சிபுரம் வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரொனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. விமான நிலையங்கள் தீவிர கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கொரோனா குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவை நிறுத்தம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகளில் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகழுவ வேண்டும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும், கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கொரோனா தொற்று கைகள் மூலம் மூச்சுக்குழல் வழியாக உடலுக்குள் நுழைந்துவிடும் என்பதால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பிரதான அறிவுரையாக உள்ளது. அதேபோல் வெளியில் பயணம் செய்வோர் கைகளில் தேய்த்து பயன்படுத்தும் கிருமிநாசினியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பலரும் hand sanitizer என்ற கிருமி நாசினியை தேடி அலைகின்றனர். குறிப்பாக சென்னையில் தற்போது கிருமி நாசினி கிடைப்பதே இல்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். மெடிக்கல்ஸ், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் சர்வ சாதாரணமாக கிடைக்கும் கிருமி நாசினி இப்போது கிடைக்காத பொருளாகிவிட்டதாக தெரிவிக்கின்றன. எப்போது கிடைக்கும் என்பது மெடிக்கல்ஸ் உரிமையாளர்களுக்கே தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த மெடிக்கல் உரிமையாளர் ஒருவர், ''கிருமி நாசினி ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் என்பதால் ஒருவர் வந்தாலே 4 முதல் 5 கிருமிநாசினிகளை வாங்கிச் சென்று விடுகின்றனர். அதனால் உடனடியாக விற்று தீர்ந்துவிட்டன. தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்தும் அடுத்த ஸ்டாக் வரவில்லை. இதனால் 500ml அளவிலான பெரிய பாட்டில்களை விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஆனால் பெரிய பாட்டில்கள் என்றால் கையில் எளிதாக எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகும். இதை எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்'' என தெரிவித்தார்.

இந்நிலையில் அரசு தாமாக முன்வந்து பொது இடங்களில் தேவையான கிருமி நாசினிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com