PT Web Explainer: வெறும் 8 பேர்... என்.எல்.சி-யில் தமிழர்கள் புறக்கணிப்பா?
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. 2019-ல் என்எல்சி நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான GET (Graduate Excutive Trainee) எனப்படும் நிர்வாகப் பட்டதாரி பயிற்சியாளர் எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் நடத்தப்பட்டது. GET எனப்படும் இந்தப் பயிற்சி முடித்தவர்கள் செய்யப்பட இருக்கும் பணி சாதாரணமானது அல்ல.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ஓராண்டுக்குப் பயிற்சியராக இருப்பார்கள். பயிற்சியாளராக இருக்கும்போதே அவர்களின் மாத ஊதியம் ரூ.1.13 லட்சம். ஓராண்டு பயிற்சிக் காலம் முடிவடைந்த பிறகு அதிகாரியாக அமர்த்தப்படுவர். அப்போது அவர்களின் மாத ஊதியம் ரூ.1.40 லட்சமாக உயர்த்தப்படும். இந்தப் பணியில் சேருபவர்கள் என்.எல்.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் இயக்குனர் நிலை வரை பதவி உயர்வு பெற முடியும் என்பதால் இத்தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
மொத்தம் 259 காலிப் பணியிடங்கள் இருந்த நிலையில், இந்தியா முழுவதும் தேர்வுகள் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் எழுத்து தேர்வில் பங்கேற்றனர். இப்படி, எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து 1,582 பேரை அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு என்எல்சி நிறுவனம் முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டது. இங்குதான் பிரச்னை ஆரம்பமானது. இந்த முன்னுரிமைப் பட்டியலில், தமிழகத்திலிருந்து வெறும் 8 பேர் மட்டுமே இடம்பெற்று இருந்தனர். அதாவது வெளிமாநிலத் தேர்வு மையங்களில் எழுதியவர்களில் 99 சதவீதம் நேர்முகத் தேர்வுக்கு தெரிவுசெய்யப்பட்ட நிலையில், தமிழகத் தேர்வு மையங்களில் எழுதியவர்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர்.
இந்தப் புள்ளிவிவரம், வெளிமாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வின் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். குறிப்பாக, இதை தமிழர்கள் புறக்கணிப்பாக கருதி அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்க்க தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே மத்திய அரசின் ரயில்வே துறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம், அஞ்சல் துறை பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் மீண்டும் என்எல்சியை சர்ச்சையையாக மாற்றியிருக்கிறது.
இதனைக் கண்டித்து ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கண்டனங்களும் எதிர்ப்புகளும்:
"வெளி மாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வின் நம்பகத்தன்மை மீது மிகப்பெரும் சந்தேகம் ஏற்படுகிறது. என்.எல்.சி.யில் அப்ரென்டீஸ் பயிற்சி முடித்தவர்கள், இறந்தோர் வாரிசுகள், என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்தவர்கள் என ஆயிரக்கணக்கான பேருக்கு இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளையும் வெளிமாநிலத்தில் உள்ளவர்களுக்குத் தாரைவார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசின் போக்கு மிகுந்த வருத்தத்திற்குரியது. வட மாநிலத்தவருக்கே ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுவதால், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தத் தொழிலாளர் பணிகள் கிடைப்பதும் அரிதாகி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இதுபோன்ற தேர்வுகள் மூலமும் அநீதி இழைக்கப்படுகிறது.
இந்த GET தேர்வை உடனடியாக ரத்து செய்து, வெளிமாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ள தேர்வில் 99 சதவீதம் வெளிமாநிலத்தவரே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள என்.எல்.சி உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே வேலைவாய்ப்புக் கிடைத்திடுவதை மத்திய பா.ஜ.க. அரசு உறுதி செய்திட வேண்டும்" என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
"என்எல்சி நிறுவனத்திற்காக தங்கள் நிலங்களையும், வீடுகளையும் இழந்த மண்ணின் மைந்தர்களையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் புறக்கணித்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக கண்டித்துள்ளார்.
"தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் தேர்ச்சி விகிதம் இப்படி குறைவாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதில் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. அண்மைக்காலமாக தமிழ் நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களிலும், ரயில்வே முதலான நிறுவனங்களின் பணி நியமனங்களிலும்கூட இதேபோல வட மாநிலத்தவர் திட்டமிட்டு புகுத்தப்படுகின்றனர்.
என்எல்சி நிறுவனம் என்பது மற்ற பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து வேறுபட்டது. இது தமிழ்நாட்டினுடைய கனிம வளங்களை எடுத்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது. இதற்கான நிலங்கள் இந்தப் பகுதி மக்களால் வழங்கப்பட்டவை. எனவே, தமிழக மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அவற்றிலிருந்து கனிம வளங்களை எடுத்துப் பயன்படுத்துகிற இந்த நிறுவனத்தின் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கான விதிகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
"தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததிலிருந்தே, இத்தேர்வில் மிகப்பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது வெட்டவெளிச்சமாகிறது. தமிழர்கள் சிந்திய குருதியிலும், வியர்வையிலும் உருவான இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வந்த பூர்வ குடித் தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டுக்கொடுத்தனர். ஆனால் இன்று அதே நிறுவனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தமிழர்கள், அடிமாட்டு கூலிகளாக வேலைசெய்யக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி அவர்கள் அதிகாரம் செலுத்துகின்ற இடமாக உள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவர்களாகவும், உயர் பதவிகளிலும் தமிழர் அல்லாதவரே அதிகாரிகளாக நியமிக்கப்படும்போது இயல்பாகவே தமிழர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் நிலவுவது கண்கூடு. இன்றளவும் இந்நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்தப்படி நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்குப் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும், என்எல்சி-யில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கும் பணி வழங்கப்படாமலும், திட்டமிட்டுப் புறக்கணிக்கும் என்எல்சி நிர்வாகத்தின் இனப்பாகுபாடு செயல்பாடானது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக என்எல்சி நிர்வாகம் மீது பல்வேறு நிதி, மற்றும் நிர்வாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், தற்போது பொறியாளர் தேர்வில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதிலும் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை" என்று கொந்தளித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
"இந்த ஆட்சேர்ப்பு முறை வெளிப்படையானது அல்ல. இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை ஆட்சேர்ப்பு பணிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும். நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அந்த நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்" என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்.
அதேபோல், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, "தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அநீதி இது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றியிருந்தும் தமிழக இளைஞர்களை வேண்டுமென்றே புறக்கணிக்கும் நடவடிக்கையாக இது தோன்றுகிறது. தமிழகத்திலுள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது இது முதன்முறை கிடையாது. இவ்வாறு நடப்பது தமிழர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு குறித்த மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
"என்.எல்.சி. இந்தியா அனல் மின் நிலையத்தில், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. சொந்த மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவது இது புதியதல்ல. ரயில் நிலையங்கள், மின்துறை, நீதித்துறை, வங்கிகள், தனியார் மென்பொருள் நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும், தற்போது பிற மாநிலத்தவர்களின் ஆதிக்கம் நிறைந்து இருக்கிறது. திட்டமிட்டு, மத்திய அரசு, தமிழர்களை தொடர்ச்சியாக வஞ்சித்து வருகிறது. தமிழகத்தை வெளியார்களின் வேட்டைக்காடாக மாற்றவே, இப்படியான சதி செயல்களை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியிருக்கிறார்.
என்எல்சி சொல்வது என்ன?
கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் என கடும் எதிர்ப்புக்கு என்எல்சி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதில், "என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனம். இதனால் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றியே என்எல்சி தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த தேர்வின்போதும் முறையான கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டன. குறிப்பாக, நாடு முழுவதும் 105 நகரங்களில் 261 மையங்களில் நடந்த இந்தத் தேர்வின் சிசிடிவி காட்சிகள் உள்ளன. தேர்வர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
தேர்வின்போது மொபைல் போன்கள் வேலை செய்வதைத் தடுக்கும் வகையில் ஜாமர்கள் தேர்வறைகள் முன்பு பொருத்தப்பட்டிருந்தன. தேர்வுக்கான முன்பதிவு, மதிப்பீடுகள் என ஆகியன ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. தேர்வு முடிந்ததும் தேர்வர்கள் தங்களின் விடைத்தாளை அசல் விடைத்தாளுடன் ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை" என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.
ஆனால், இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. இதுகுறித்த விசாரணை அவசியம் என்பதே அரசியல் கட்சிகளின் வலியுறுத்தலாக இருக்கிறது.
- மலையரசு