தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு சட்டம். இதன் கீழ்தான் சிறைக்கைதிகளுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது. இச்சட்டத்தின்கீழ் பொதுவாக இரண்டு வகையான விடுப்புகள் வழங்கப்படுகின்றன. ஒன்று அவசரகால விடுப்பு மற்றொன்று சாதாரண விடுப்பு. இவை குறித்து இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளாம்.
சிறைக்கைதிகளைப் பொறுத்தவரை விடுப்பு என்பது அடிப்படை உரிமை அல்ல. அது அரசோ, சிறைத்துறையோ வழங்கக்கூடிய விருப்புரிமை அதிகாரம் தொடர்பானது. இதன்படி தமிழக தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின் விதி 6 - அவசரகால விடுப்பு குறித்தும், விதி 7 - அதற்கான தகுதிகள் குறித்தும், விதி 20 - சாதாரண விடுப்பு குறித்தும், விதி 21 - அதற்கான தகுதியின்மை குறித்தும், விதி 22 - தகுதிகள் குறித்தும், விதி 40 - அரசின் அதிகாரம் குறித்தும் குறிப்பிடுகிறது.
அவசர கால விடுப்பு: பெற்றோர், மனைவி, குழந்தைகள், உடன்பிறந்தோர் ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகையிலோ, மரணம் நிகழ்கையிலோ, நெருங்கிய உறவுகளின் திருமணத்திற்கோ அவசர கால விடுப்பு வழங்கப்படுகிறது. அவசர கால விடுப்பு ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் வழங்கப்படுகிறது. ஒருமுறைக்கு அதிகபட்சமாக 6 நாட்கள் வழங்கப்படுகிறது. அவசர கால விடுப்பு தேவையெனில், சிறைத்துறை காவல் கண்காணிப்பாளருக்கு மனு அளிக்க வேண்டும். விடுப்பு கோரப்படும் காரணத்தை அந்த கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் அலுவலர் மூலமாக உறுதி செய்தபின் சிறைத்துறைக் கண்காணிப்பாளர் அவசர கால விடுப்பு வழங்குவார். அந்த அதிகாரம் அவருக்கே உள்ளது. 6 நாள் விடுப்பு அதிகபட்சமாக வழங்கப்படும் சூழலில், விதி 34 மூலமாக விண்ணப்பித்து விடுப்பு கால அளவை நீட்டிக்க கோரலாம். அவசர கால விடுப்பில் செல்வோருக்கு பெரும்பாலும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும். அது கைதியின் வழக்கு, நடத்தை அடிப்படையில் முடிவு செய்யப்படும். அதற்கான கட்டணம் விடுப்பு கோருபவரிடமிருந்தே வசூலிக்கப்படும்.
சாதாரண விடுப்பு: சாதாரண விடுப்பு கோருகையிலும் சிறைத்துறை கண்காணிப்பாளரிடமே விண்ணப்பிக்க வேண்டும். அதனை வழங்கும் அதிகாரமும் அவருக்கே உண்டு. விதி 20ன் அடிப்படையில், விடுதலை ஆகப்போகிறவர்கள் விடுதலைக்குப் பின்பான வாழ்க்கைக்காக சில ஏற்பாடுகளைச் செய்வதற்காக, குழந்தைகளின் கல்வி, பள்ளி, கல்லூரி சேர்க்கை, வீடு மராமத்து பணிகளை மேற்கொள்ள, பிள்ளைகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்ய, பாகப்பிரிவினை, குடும்ப சொத்துப்பிரச்சனை, அறுவடை காலம் போன்ற விவசாயப் பணிகளை மேற்கொள்ள போன்ற காரணங்களுக்காக சாதாரண விடுப்பு கோரி விண்ணப்பிக்கலாம். விதி 20ல் இவை குறிப்பிடப்படுகின்றன.
சாதாரண விடுப்பு வழங்க தடையாக இருக்கும் காரணங்கள்: விதி 21 சாதாரண விடுப்பு வழங்க தடையுள்ள காரணங்கள் குறித்து பேசுகிறது. விடுப்பு கோரும் குற்றவாளி கொள்ளை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி போன்ற முக்கியமான குற்றங்களில் தொடர்புடையவராக இருந்தால் பரோல் வழங்கப்படாது. ஒருவருக்கு விடுப்பு வழங்கினால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்றாலும் அவருக்கு விடுப்பு வழங்கப்படாது. சிறைக்குள் ஒருவரின் நடத்தை சரியில்லை என்றாலும் அவருக்கு விடுப்பு வழங்கப்படாது. கலவரம், போராட்டம் செய்பவர், சிறையிலிருந்து தப்ப முயன்றவர் போன்றோருக்கும் சாதாரண விடுப்பு வழங்கப்படாது. விதி 22ந் படி சாதாரண விடுப்பில் செல்வோருக்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகபட்சமாக 1 மாதம் விடுப்பு வழங்கப்படுகிறது. அதற்கு முன்பாக மீண்டும் விடுப்பு வழங்கப்படாது.
அரசின் சிறப்பான அதிகாரம்: இவையெல்லாம் இருப்பினும், தமிழக அரசின் தண்டனை நிறுத்தி வைப்பு விதி 40-ன் படி அரசு நேரடியாக தலையிட்டு, விதிகளை தளர்த்தி, விடுப்பு வழங்கவோ, விடுப்பை நீட்டிக்கவோ செய்யலாம். அந்த அடிப்படையிலேயே பேரறிவாளன் போன்றோருக்கு விடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்படியெல்லாம் விதிகள் இருப்பினும், இவை தமிழக அரசின் தண்டனை நிறுத்தி வைப்புச்சட்டம் என்பதால், இதில் திருத்தங்களைக் கொணர தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு.
இந்த வரைமுறைகளில் இல்லாமல், குண்டாஸ் வழக்குகளில் சிறையிலிருப்போரை பொறுத்தவரை அவர்கள் விடுப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். கடந்த 2021 ஆகஸ்ட் 19ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், தற்போது அவர்கள் விடுப்பையும் அரசோ, சிறைத்துறை கண்காணிப்பாளரோ பரிசீலித்து முடிவெடுக்கலாம்.
- சகாய பிரதீபா
தொடர்புடைய செய்தி: ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா - கண்டனம் தெரிவித்த அமெரிக்கா