இளையோர் மொழிக்களம் 32 | முதலில் எங்கிருந்து தொடங்குவது?

ஆங்கிலத்தில் பேசவேண்டிய இடங்களில் முழுமையாக ஆங்கிலத்திலேயே பேசுங்கள். ஆனால், தமிழில் தமிழறிந்த இருவராய் உரையாடினால் தமிழையே தேர்ந்தெடுங்கள்.
தாய்மொழிக் கல்வி
தாய்மொழிக் கல்விpixabay
Published on

எல்லா இடங்களிலும் தமிழைப் பயன்படுத்துவது நம் நீண்ட நெடிய நோக்கமாகும். அதனை முதனிலையில் எவ்வாறு செயல்படுத்துவது ? சிறிதே எண்ணிப் பார்க்கலாம். தமிழைப் பயன்படுத்துவது என்றதும் நமக்குப் புலவர் அளவிற்குத் தமிழ் தெரிந்தாகவேண்டுமே, நமக்கு அவ்வளவு தெரியாதே என்று எவரும் அஞ்சற்க. ஒவ்வொருவர்க்கும் எவ்வளவு தெரியுமோ அவ்வளவிலேயே தமிழைச் சிறப்பாகப் பயன்படுத்த இயலும். அவரவர் மட்டத்திலான நிலையிலும் தமிழை ஆள்வதுதான் மொழியின் ஆழ்ந்த பரவலுக்கு வழிகோலும்.

தமிழைத் தமிழாகவே பயன்படுத்தியவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள் ? கற்றுத் துறைபோகிய அறிஞர் பெருமக்கள்தாம் தமிழ்மொழியை அவ்வாறு கையாண்டார்கள் என்று கூறலாமா ? இல்லை. எழுதவும் படிக்கவும் தெரியாத கடைநிலை மக்கள்தாம் தமிழை முழுமையாகவும் கலப்படமின்றியும் பயன்படுத்தினார்கள். நகரத்தில் உள்ளதைவிடவும் ஊர்ப்புறத் தமிழுக்குத்தான் உயிராற்றல் மிக்கிருந்தது.

நல்ல வேளையாக இன்றைக்கு வரைக்கும் மக்கள் தொகையினரில் பேரெண்ணிக்கையினர் ஊர்ப்புற வாழ்வினராக உள்ளனர். நகர்மயமாக்கலும் ஊர்ப்பகுதிகட்கு ஏற்பட்ட வளர்ச்சியாகவே எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ் மொழி
தமிழ் மொழி

இந்தத் தன்மையினால்தான் தமிழை மிகுதியும் நன்கு பயன்படுத்தி வந்தவர்கள் என்று ‘கிராமத்தவர்கள், பாமரர்கள்’ என்று சொல்லப்பட்ட எளிய மக்களைக் காட்டுகிறோம். அவர்கள் வாழ்வில் ஆங்கிலம் இல்லை. அவர்களால் வடமொழிச் சொற்களைத் தற்பவமாக்கித்தான் பயன்படுத்த இயலும். நஷ்டம் என்று சொல்பவர்களைவிடவும் நட்டம் என்று தற்பவ வடிவில்தான் சொல்வார்கள்.

தாய்மொழிக் கல்வி
இளையோர் மொழிக்களம் 31 | படித்தவர்களே பிழையாக எழுதலாமா?

நம் மக்களிடம் ஓர் ஆங்கிலச் சொல்லை அறியத் தந்தால் அதனை ஆங்கிலமாகவே பயன்படுத்தமாட்டார்கள். அதனைத் தமிழ் ஒலிப்புக்கேற்ப, தமிழ் இயற்கைக்கேற்ப, தமிழ் இயல்பிற்கேற்ப மாற்றுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஒரு பிறமொழிச்சொல்லானது தமிழுக்கு வரவேண்டுமானால் தமிழாகத்தான் வரவேண்டும். தமிழ் இயற்கையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

தமிழ்
தமிழ்

எடுத்துக்காட்டாக, அறை என்ற பொருள்படும் ஆங்கிலச் சொல்லான ‘ரூம்’ என்ற சொல்லை மக்களிடம் கூறுங்கள். அச்சொல்லைத் தமிழாக்குவதற்கு முன்னோ பின்னோ உயிர் ஒலியினைச் சேர்க்கவேண்டும். ‘ரூமு’ என்பார்கள். இன்னும் ஒரு படி மேலேபோய் ‘ரூம்பு’ என்பார்கள். ‘அறையெடுத்துத் தங்கியிருந்தார்கள்’ என்பதனை நம் மக்கள் எப்படிச் சொல்கிறார்கள் ?

‘ரூம்பு எடுத்துத் தங்கியிருந்தாங்க’ என்கிறார்கள். நம்முடைய நாணயத்தின் பெயரான ‘ரூபாய்’ என்பதனை எப்படிச் சொல்கிறோம் ? இத்தனைக்கும் இச்சொல் பன்னூற்றாண்டுப் பயன்பாட்டில் நிலைத்த பிறமொழிச்சொல்தானே ? ‘உருவா, ருவா, ரூவா’ என்றுதான் சொல்லிக்கொண்டுள்ளோம்.

ஆங்கிலத்தில் வல்லின மெய்யொலியில் எந்த ஆங்கிலச் சொல்லையும் நம்மால் அவ்வாறே சொல்ல முடியுமா ? முடியாது. ஆங்கிலத்தை நன்கறிந்த நிலையிலும்கூட வல்லின மெய்யொலியில் முடியுமாறு ஒரு சொல்லைச் சொல்லவேண்டுமென்று நாம் உறுதி காட்டுவதில்லை. ‘பர்பெக்ட், கரெக்ட், ரைட், பீரியட்’ போன்ற சொற்களை உரியவாறு மெய்யொலியில் நிறுத்துகிறோமா ? ‘பர்பெக்டு, கரெக்டு, ரைட்டு, பீரியடு’ என்று ஈற்றில் உகரம் சேர்த்த பிறகுதான் நிறுத்துகிறோம். இதுதான் தமிழியற்கை.

தாய்மொழிக் கல்வி
இளையோர் மொழிக்களம் 30 | மொழி வாழ்வது நம் நாக்கில்தான்..!

இதிலிருந்து நாம் பெற்றுக்கொள்வதென்ன ? கடைநிலை மக்களைப்போல நாம் மொழியைப் பயன்படுத்தவேண்டும். மூத்தோர் பயன்படுத்தியதைப்போல் மொழியைக் கையாளவேண்டும். முதற்கண் அது மொழியின் வட்டார வழக்காகத்தான் இருக்கும். வட்டார வழக்கு என்பது மொழிக்குரிய பயன்பாட்டு இசை. இது முற்றிலும் பேச்சு வழக்கினால் மட்டுமே வாழ்கிறது. எழுத்து வழக்கிற்குத்தான் இசைகூட்ட முடியாத பொதுப்பயன்பாடே தவிர, பேச்சு வழக்கிற்கு உரிய வட்டாரத்தன்மை உண்டு. அது அழகியது. இயற்கையானது.

கூழாங்கல்லினைப்போன்று பட்டும் பயன்பட்டும் சீரடைந்த ஒலி வடிவமது. கோயம்புத்தூரில் உள்ளவரும் திருநெல்வேலியில் உள்ளவரும் தத்தம் வட்டார வழக்கிலேயே உரையாடிக்கொள்வதில் என்ன தடை ? இளையோரிடையே வட்டார வழக்கின்படி மொழியைப் பயன்படுத்துவது மெல்ல அருகிவருகிறது. வட்டார வழக்கினைப் பயன்படுத்துவதற்குச் சிறிதும் தயங்கக்கூடாது. வட்டார வழக்கின்வழியேதான் மொழியின் ஆழ்நினைவுகள் ஒருவர்க்குள் மிதந்தெழுந்து வரும்.

இன்னும் சுருக்கமாகவும் பொருளுடையதாகவும் சொல்வதானால் - ‘மொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியதைப்போலப் பயன்படுத்த வேண்டும்.’ அவர்கள் அன்றாட வாழ்க்கையில் மொழியைப் பிறிதொன்றாகக் காணவில்லை. வலிந்து எந்தச் சொல்லையும் எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் தாமறிந்த மொழியிலிருந்து சிறிதும் விலகவில்லை.

எங்கிருந்து எப்படித் தொடங்குவது ? முதலில் தமிழில் எளிமையான சொற்களில் விளங்கும் பலவற்றுக்கு ஆங்கிலச் சொற்களை எடுத்தாள்கிறோமே, அதனைத் தவிர்க்கவேண்டும். ‘ஆறு’ என்று சொல்ல வேண்டிய இடத்தில் ‘ரிவர்’ என்று சொல்வதை - ‘கண்’ என்று சொல்லவேண்டிய இடத்தில் ‘ஐ’ என்று சொல்வதை – ‘சாலை, தடம்’ என்று சொல்லவேண்டிய இடத்தில் ‘ரோடு’ என்று சொல்வதை – ‘வேலை’ என்று சொல்லவேண்டிய இடத்தில் ‘வொர்க்’ என்று சொல்வதை – ‘பள்ளி’ என்று சொல்லவேண்டிய இடத்தில் ‘ஸ்கூல்’ என்று சொல்வதை – ‘பறவை’ என்று சொல்லவேண்டிய இடத்தில் ‘பேர்ட்’ என்று சொல்வதை – அறவே தவிர்க்கவேண்டும்.

இன்னும் இன்னும் ஆயிரம் எடுத்துக்காட்டுகள் உள்ளன. இதுதான் முதல் அடி. முதல் எட்டுவைப்பு. அடிப்படையாய் விளங்கும் தமிழின் தலைச்சொற்களை அன்போடு எடுத்தாளுங்கள். ஆங்கிலத்தில் பேசவேண்டிய இடங்களில் முழுமையாக ஆங்கிலத்திலேயே பேசுங்கள். ஆனால், தமிழில் தமிழறிந்த இருவராய் உரையாடினால் தமிழையே தேர்ந்தெடுங்கள்.

தாய்மொழிக் கல்வி
இளையோர் மொழிக்களம் 29 | அன்றாடப் பயன்பாட்டுச் சொற்கள் அனைத்திலும் தமிழ்செய்க !

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com