பெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை ! யார் இந்த ரெட்டி சகோதரர்கள் ?

பெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை ! யார் இந்த ரெட்டி சகோதரர்கள் ?
பெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை ! யார் இந்த ரெட்டி சகோதரர்கள் ?
Published on

கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகிய மூவர்தான் கர்நாடக அரசியலை ஒரு காலத்தில் ஆட்டிப் படைத்த ரெட்டி சகோதரர்கள். ஆந்திராதான் ரெட்டி சகோதர்களின் பூர்வீகம். இவர்களின் தந்தை காவல் துறையில் ஒரு சாதாரண தலைமை காவலராக இருந்து ஓய்வுப் பெற்றவர். தென் இந்தியாவில் பாஜக காலூன்ற முயன்றுக்கொண்டு இருந்த நேரம் அது. 1999 ஆம் ஆண்டு பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள் ரெட்டி சகோதரர்கள். அப்போதிலிருந்து பெல்லாரி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில், பாஜகவை வெற்றி பெறச் செய்வததில் ரெட்டி சகோதரர்களின் பங்கு மிக அதிகம். 

ரெட்டி சகோதரர்களின் அபாரமான வளர்ச்சி, இரும்பு தாது சுரங்கத்தில்தான் தொடங்கியது. “ஓபாலபுரம் சுரங்க நிறுவனம்“ என்று தொடங்கி, கர்நாடக மாநிலத்தின் எல்லை அருகே ஆந்திராவில் இரண்டு லைசென்ஸுகள் பெற்று அசுர வளர்ச்சியை பெற்றனர் ரெட்டி சகோதரர்கள். 2005 இல் ஆண்டுக்கு 5 லட்சம் டன்களுக்கு முதலில் லைசென்ஸ் பெற்றவர்கள், குறுகிய காலத்திலேயே 60 லட்சம் டன்கள் எடுக்க உரிமம் பெற்றார்கள். ஒரு நாளைக்கு 20,000 டன்கள் எடுக்கும் ரெட்டி சகோதரர்களின் ஒரு நாளைய வருவாய் 6 கோடி. ஆண்டுக்கு 1800 கோடி வருவாய் பெறும் முதலாளிகளாக உயர்ந்தனர். இதனால் ரெட்டி சகோதரர்களின் செல்வாக்கு கர்நாடகாவில் அதி வேகமாக முன்னேறியது. 

பாஜகவில் ரெட்டி சகோதரர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது. 2010 ஆம் ஆண்டு, தென் மாநிலங்கள் முழுக்க வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் 15 நாட்களாக ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்து, டெல்லியில் பாஜகவின் உட்கட்சிப் பூசலை நடத்தியவர்கள் ரெட்டி சகோதரர்கள். ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரெட்டி சகோதரர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படும் ஷோபா மற்றும் சில அதிகாரிகளை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்தார். ஆனால், எடியூரப்பாவுக்கே செக் வைத்து அவரை முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரினார்கள் ரெட்டி சகோதரர்கள். இதனால் தேசியளவிலான பாஜக தலைவர்களே ஆடிப்போனார்கள்.

பின்பு, சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டு ரெட்டி சகோதரர்கள் சமாதானப்படுத்தினார். ஆனாலும், ரெட்டி சகோதரர்களுக்கும் எடியூரப்பாவுக்கும் இடையே புகைச்சல் இருந்துக் கொண்டேதான் இருந்தது. 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 110 இடங்களை வெல்வதற்கு ரெட்டி சகோதரர்கள் காரணம். எனவே கருணாகர ரெட்டி, சோமசேகர் ரெட்டி, ஜனார்தன ரெட்டி ஆகியோர் எடியூரப்பாவின் ஆட்சியைக் காப்பாற்றியதற்காக அமைச்சர்களாக்கப் பட்டனர். ரெட்டி சகோதரர்களின் அரசியல் வளர்ச்சி, அவர்களின் தொழில் ரீதியான வளர்ச்சி மேலே சென்றது. மேலும், சர்வதேச சந்தையில் இரும்புத் தாது ஏற்றுமதிக்கு ஏற்பட்ட தேவையை கணக்கில் கொண்டு சுரங்கத் தொழிலில் இறங்கினர் ரெட்டி சகோதரர்கள். கர்நாடகா, ஆந்திரா என்று இரண்டு மாநிலங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

2001 - 2002 ஆண்டில் தான், ரெட்டி சகோதரர்கள்  ஓபாலபுரம் சுரங்க நிறுவனத்தை தொடங்குகின்றனர்.  ஆஞ்சநேயா என்பவர், ரெட்டி சகோதரர்களின் ஓபாலபுரம் சுரங்க நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராக பணி புரிந்தார். இவர் இந்திய சுரங்கத் துறை மற்றும் தொழிலாளர் நலத் துறை இணைந்து வழங்கும் சுரங்க தொழிலில் நிபுணர் என்ற சான்றிதழை வைத்திருந்தார். 
எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருந்த நேரத்தில் 2009 ஆம் ஆண்டு ரெட்டி சகோதரர்களின் சுரங்க நிறுவனத்தை சிபிஐ சோதனையிடப் போவதாக தகவல் வருகிறது. ஆஞ்சனேயாவின் அலுவலகம், ஒரு மலையின் அடிவாரத்தில், இரும்பு ஷீட்டுகளால் கட்டப்பட்ட அலுவலகம். அத்தனையும் ஓர் இரவில் மாற்றுகின்றனர் ரெட்டி சகோதரர்கள்.  

இதனால் அதிர்ச்சியடைந்த ஆஞ்சநேயா ரெட்டி சகோதரர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்கிறார். இதனையடுத்து ஆஞ்சநேயாவுக்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் மோதல் முற்றுகிறது. சிபிஐயிடம் ஆஞ்சநேயா மாட்டிவிடுவாரோ என்ற அச்சத்தில் ரெட்டி சகோதரர்கள் அவரது குடும்பத்துக்கு தொந்தரவு கொடுக்க தொடங்கினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆஞ்சநேயா தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார் என கூறப்படுகிறது.

ரெட்டி சகோதரர்களில் ஜனார்த்தன ரெட்டியின் மிகவும் முக்கியமானவர். இவருக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த ராஜசேகர ரெட்டிக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஓபாலபுரம் கனிம நிறுவனத்துக்கு ஏராளமான உதவிகளைச் செய்தார் ராஜசேகர ரெட்டி செய்ததாகவும்  அதற்கு கைமாறாகத்தான் அவர் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை உடைப்பதற்கு உண்டான அத்தனை உதவிகளையும் செய்தனர் ரெட்டி சகோதரர்கள் என்று கூறப்படுவதுண்டு. 

சிறு வயதில் சிறிய வீட்டில் வாழ்ந்த ரெட்டி சகோதரர்கள் பெல்லாரியில் மிகப் பெரிய சொகுசு வீட்டை கட்டினர். அந்த வீட்டில் 60 அறைகள் உண்டு. இந்த வீட்டை 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய தனியார் பாதுகாவலர்கள் பாதுகாத்தனர்.  ஹெலிகாப்டர் வந்து இறங்க ஹெலிபேடோடு இந்த வீடு கட்டப்பட்டது. இருபது ஹெலிகாப்டர்களை வாங்கி அவற்றை வாடகைக்கு விட்டு, ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற புதிய தொழிலை தொடங்கவும் ரெட்டி சகோதரர்கள் உத்தேசித்தனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com