இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேர் கூட்டாக கடந்த 12ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான அதிருப்தியை மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே நடைபெறும் சந்திப்பு இது என கூறினர். உச்சநீதிமன்றத்தின் நிர்வாக முறைகள், வழக்குகளை ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவற்றை தலைமை நீதிபதி தன்னிச்சையாக முடிவு செய்கிறார் என அவர்களின் குற்றச்சாட்டு ஒலித்தது.
அந்த தருணம் நாடே சற்று பரபரப்படைய, ஊடகங்கள் விறுவிறுப்புடன் நீதிபதிகளின் புகார்களை பதிவு செய்துகொண்டிருந்தது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் குற்றச்சாட்டுகளை அடுக்கிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் இந்த குழப்பங்கள் கடந்த சில மாதங்களாகத் தான் உள்ளது என்று கூறினர்.
இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக, உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான சாவந்த், சந்துரு, ஏபி ஷா, சுரேஷ் ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், புதிய விதிமுறைகள் வகுக்கும் வரை, முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். இவ்வாறு பிரச்னை சூடுபிடிக்க, பிரச்னைகள் தீர்க்கப்படவுள்ளது குழப்பங்கள் வேண்டாம் என இந்திய பார் கவுன்சில் அறிவித்தது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தரப்பில் இருந்த எந்த பதிலும் வரவில்லை.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஜெகதீஸ் சிங் கேஹர் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு பதவியேற்றவர் தான் தீபக் மிஸ்ரா. இவர் 1953 அக்டோபர் 3ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் பிறந்தார். 1977 பிப்ரவரி 14ஆம் தேதி, வழக்கறிஞராக பதிவு செய்தார். 1996 ஜனவரி 17ஆம் தேதி ஒடிசா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 1997 டிசம்பர் 19ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமனமானவர். 2009 டிசம்பர் மாதம் 23ஆம் தேதி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியானார். 2010 மே மாதம் 24ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். 2011 அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அடைந்தார். பின்னர் 2017 ஆகஸ்ட் 28ஆம் தேதி மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார். இதைத்தொடர்ந்து 2018 அக்டோபர் 2ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.
இவர் நீதிபதியாக இருந்து பல முக்கிய வழக்குகளில் அதிரடி தீர்ப்புக்களை வழங்கியவர். டெல்லி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கியது. சிறுவர்களின் ஆபாச இணையதளங்களை தடை செய்தது. சபரிமலை ஆலயத்தை பெண்களுக்கும் திறந்துவிடவேண்டும். திரையரங்குகளில் தேசிய கீதம் பாடவேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. 24 மணி நேரத்தில் இணையத்தில் எஃப்.ஐ.ஆர் நகல் பதிவு செய்ய வேண்டும். யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. பதவி உயர்வில் இட ஒதுக்கீடுக்கு தடை விதித்தது உள்ளிட்டவை இவர் வழங்கிய தீர்ப்புகள் தான். இத்தகைய நீதிபதி மீது தான், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் தற்போது சரமாரியான குற்றாச்சாட்டுகளை கூறியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களையும், கருத்துக்களையும் உருவாக்கியுள்ளது. என்ன இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் பிரச்னையை சபைக்கு முன் கொண்டு வந்திருக்கக்கூடாது என்று கூறுகின்றனர் சில மூத்த நீதிபதிகள். சிலர் 4 பேர் செய்ததும் சரிதான், இனிமேலாவது நீதித்துறையில் தெளிவு பிறக்கட்டும் என்று கூறுகின்றனர். ஆனால் உச்சநீதிமன்றத்தில் முக்கிய அடிப்படை பிரச்னையாக இருப்பது நீதிபதிகள் நியமனம் தொடர்பான பிரச்னை தான் என்பதே ஆய்வு செய்ய வேண்டிய கருத்தாக உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நீதித்துறைக்கும், மத்திய அரசுக்கும் இடையே நீதிபதிகள் நியமிக்கும் முறையில் கருத்து வேறுபாடுகள் முற்றியது. ஏனெனில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை, உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதற்கு காரணம் நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு ஏற்பட்டால், அது நீதித்துறையின் உரிமைக்கு இடையூறாக அமையும் என நீதித்துறை எண்ணியது தான்.
இதுதவிர சட்டத்துறை, சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் சிலரின் கருத்து மாறுபட்ட வகையில் உள்ளது. நீதிபதியாக இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு ஆளுநர், அரசு அதிகாரப் பணிகள் உள்ளிட்டவற்றை வழங்கக்கூடாது என்பதே அவர்களின் கருத்து. ஏனெனில் நீதிபதியாக இருக்கும் ஒருவருக்கு, ஓய்வுபெற்ற பிறகு அரசுப் பொறுப்புகள் வழங்கக்கூடும் என்றால், ஆட்சியில் இருக்கும் அரசுக்கு ஆதராவாக நீதிபதிகள் செயல்படக்கூடும் என்பதே அவர்கள் தரப்பு எண்ணம்.
நீதித்துறையில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பங்கள் மற்றும் நிர்வாக பிரச்னைகள் காரணமாக, நீதிபதிகள் நியமனம் என்பது முடங்கிப்போய்விட்டது என்று கூறலாம். இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 31 ஆகும். இதில் தற்போது 25 நீதிபதிகள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளனர். இதிலும் 7 பேர் நடப்பு ஆண்டோடு ஓய்வு பெறவுள்ளனர். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 18 ஆக குறையும். இதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 400 நீதிபதிகள், 5000 மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்ட நியமனங்கள் நீதித்துறையில் தூசி படிந்துள்ளன. இவ்வாறு நீதிபதிகளின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது நீதித்துறைக்கே ஏற்பட்டுள்ள தடுமாற்றம் ஆகும்.
குற்றம், அரசியல், ஊழல், விதிமுறைகள், முறைகேடுகள், தடைகள், தகுதி நீக்கங்கள் என அனைத்திலும் இறுதி தீர்வாக நீதிமன்றங்கள் குறிப்பாக இந்திய அளவில் உச்சநீதிமன்றங்கள் கருதப்படும் நிலையில், அங்கேயே ஒரு பிரச்னை என்பது ஜானநாயகத்திற்கு உண்மையில் ஆபத்து தான். உச்சநீதிமன்றத்தின் குழப்பங்களை தீர்த்துக்கொள்ளும் உரிமையும், பொறுப்பும், கடமையும் உச்சநீதிமன்றத்திற்கு தான் உள்ளது. இதன் அடிப்படையில் நீதிபதிகள் நியமனத்தில் தெளிவான திட்டத்தையும், சட்டத்தையும் வகுத்து உச்சநீதிமன்றம் விரைவில் ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே அனைத்து குழப்பங்களும் தீரும்.