கிரிக்'கெத்து' 20: இந்திய அணியை நம்பர் 1 டெஸ்ட் அணியாக மாற்றிய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன்

கிரிக்'கெத்து' 20: இந்திய அணியை நம்பர் 1 டெஸ்ட் அணியாக மாற்றிய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன்
கிரிக்'கெத்து' 20: இந்திய அணியை நம்பர் 1 டெஸ்ட் அணியாக மாற்றிய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன்
Published on

இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரையில் 24 பேர் தலைமை பயிற்சியாளர்களாக பணியாற்றி உள்ளார்கள். அதில் நான்கு பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அவர்களில் மறக்க முடியாத வெளிநாட்டு பயிற்சியாளராக பணியாற்றி இருந்தவர் தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த கேரி கிர்ஸ்டன். 2011 - 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா அவர் பயிற்சியாளராக இருந்த போதுதான் வென்றிருந்தது. 

இந்திய அணியின் சீனியர் வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கரை அணியில் இடம் பெற்றிருந்த மற்ற வீரர்கள் தங்களது தோளில் சுமந்தபடி மைதானத்தை வலம் வந்து அசத்தினர். அதே போல அன்றைய தினம் அப்போதைய பயிற்சியாளர் கிர்ஸ்டனையும் தோளில் சுமந்து கொண்டாடினர் ரெய்னா, கோலி மற்றும் யூசுப் பதான் மாதிரியான வீரர்கள். அணியின் 28 ஆண்டுகால கனவு அன்றைய தினம் நிஜமாகி இருந்தது. அந்த உற்சாகத்தில் இந்திய அணியின் வீரர்கள் அப்படி செய்திருந்தனர். 1983 உலகக் கோப்பையை இந்தியா வென்றதற்கு பிறகு பணியாற்றிய 13 தலைமை பயிற்சியாளர்களால் செய்ய முடியாததை செய்து காட்டினார் கேரி. 

அணியில் நடந்த மாற்றம்!

1993-இல் தொடங்கி 2004 வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடியவர். 101 டெஸ்ட் போட்டிகள், 185 ஒருநாள் போட்டிகளும் இதில் அடங்கும். ஓய்வுக்கு பிறகு 2008-இல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகினார். தோனி, அணியின் ஷார்டர் பார்மெட்டுக்கு ஆஸ்தான கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார். இன்றைய இந்திய அணியிலும் அதே மாதிரியான போன்ற டிரான்சிஷன் நடந்துள்ளது. கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிராவிட் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். 

பயிற்சியாளராக இந்திய அணியுடனான கேரியின் பயணம் சரிவிலிருந்து தொடங்கியது. 2008-இல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டிரை சீரிஸ் மற்றும் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. அடுத்த சில மாதங்களில் அணியை வெற்றி பாதைக்கு திரும்ப செய்தார். இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மாதிரியான நாடுகளில் வெற்றியை குவித்தது. 

அதோடு இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பேட்ஸ்மேன்களின் அணுகுமுறையில் மாற்றம் இருந்தது. அவரை அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் அனைவரும் புகழ்ந்து கொண்டே இருந்தனர். 

வீரர்களை ஊக்குவிப்பது, அவரது டெக்னிக்குகளை மேம்படுத்துவது மற்றும் களத்தில் அமைக்க வேண்டிய வியூகங்கள் குறித்து விவாதிப்பது என தனது பணியை அவரது பாணியில் செய்தது அவரை அனைவரும் புகழ காரணமாக இருந்தது. அதற்கான பலனையும் இந்திய அணி பெற்றது. அணியின் வெற்றிக்கு முக்கிய மற்றும் முழுமுதல் சக்தியாக விளங்கினார் அவர். 

கிர்ஸ்டன் இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த விஷயங்களில் ஒன்று என அப்போதைய கேப்டன் தோனி அவரை பாராட்டி இருந்தார். 

உலகக் கோப்பையை வெல்வதற்கு 10 மாதத்திற்கு முன்னர் நடந்த காரசாரமான கலந்துரையாடல்

இந்திய அணி 2010 ஆசிய கோப்பையை வென்ற நாளன்று தலைமை பயிற்சியாளர் கேரி, பவுலிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் மற்றும் மன வள பயிற்சியாளர் பேடி அப்டன் ஆகியோருக்கு இடையே விவாதம் ஒன்று நடந்துள்ளது. அதில் கேரி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். 

“இது உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி என்றால், நம் அணி களத்தில் வெற்றி பெறும் என நீங்கள் நம்புகிறீர்களா?” என கேட்டுள்ளார். அப்போது மூவரும் ‘நோ’ என சொல்லி உள்ளனர். அந்த விவாதத்திற்கு பிறகே அணியை உலகக் கோப்பைக்கு மூவரும் தயார் செய்துள்ளனர்.  

அதன் பின்னர் அனுபவமும், இளமையும் கலந்த அணியை இந்தியா 2011 - 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் களமிறக்கியது. சொந்த மண்ணில் நடந்த தொடர், வலுவான அணி, சிறந்த கேப்டன் என அனைத்தும் சரியான கலவையில் கேரி கிர்ஸ்டனுக்கு அமைய தனது பணியை சிறப்பாக செய்திருந்தார். இந்தியாவும் கோப்பையை வென்றிருந்தது. 

‘நம்பர் 1’ டெஸ்ட் அணியாக இந்தியாவை மாற்றியவர்!

இவை அனைத்தையும் விட அசல் கிரிக்கெட் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை ‘நம்பர் 1’ டெஸ்ட் அணியாக மாற்றியவர் அவர். இந்தியா கடந்த 2009-இல் அந்த அந்தஸ்தை பெற்றிருந்தது. 2010 மற்றும் 11-இல் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடத்தை பிடித்திருந்தது. அந்த வெற்றிக்கு பிறகு குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புவதாக சொல்லி கிர்ஸ்டன் தனது பொறுப்பிலிருந்து விலகினார். பின்னர் தென்னாப்பிரிக்க அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். பிக் பேஷ் லீக், ஐபிஎல் மாதிரியான தொடர்களிலும் பயிற்சியாளராக இருந்தார். தற்போது அகமதாபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் அவர் உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற விரும்புவதாகவும் அவர் அண்மையில் சொல்லியிருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com