”என்னை பிரதமராக்குங்கள்...” பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை பயணம்..!

”என்னை பிரதமராக்குங்கள்...” பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை பயணம்..!
”என்னை பிரதமராக்குங்கள்...” பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை பயணம்..!
Published on

1935 -ஆம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி மேற்குவங்க மாநிலத்தில் பிறந்த பிரணாப் முகர்ஜி, அரசியல், வரலாறு மற்றும் சட்டப் படிப்புகள் படித்தவர். ஆசிரியராக, பத்திரிகையாளராக, வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 1957-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிரணாப் முகர்ஜியின் நாடாளுமன்ற வாழ்க்கை 1969-ம் ஆண்டு தொடங்கியது. அவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1975,1981,1993,1999 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1980-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டார் பிரணாப் முகர்ஜி. ஆனால் அத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தியாவின் இளம் நிதி அமைச்சர் என்ற பெருமையை தமது 47-வயதில் பெற்றார் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982-ம் ஆண்டு நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது யூரோமனி என்ற ஏடு உலகின் சிறந்த நிதி அமைச்சர் பிரணாப் என்று அப்பொழுது புகழாரம் சூட்டியிருந்தது.

இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு தம்மை பிரதமராக்குமாறு பிரணாப் முகர்ஜி கேட்டுப் பார்த்தார். இதில் ராஜீவ்காந்தி கடுப்படைந்தார். இதனால் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜிக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இதில் அதிருப்தி அடைந்த பிரணாப் முகர்ஜி காங்கிரஸை விட்டு வெளியேறி, ராஷ்டிரிய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். தனிக்கட்சி தொடங்கிய பிரணாப் முகர்ஜியால் 3 ஆண்டுகாலம்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. பி.வி. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் காங்கிரசில் மீண்டும் ஐக்கியமானார். அப்பொழுது திட்டக் குழு துணைத் தலைவர் பொறுப்பு பிரணாப் முகர்ஜிக்கு கொடுக்கப்பட்டது. 1995-ம் ஆண்டு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார் பிரணாப். அப்பொழுது சார்க் அமைப்பின் அமைச்சர்கள் குழுவுக்குத் தலைவராகவும் இருந்தார்.

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சரானார். 2009-ம் ஆண்டு நாட்டின் நிதி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார். ஆனால் இவர் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்த இந்த கால கட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை எதிர்கொண்டிருந்தது.

நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை எதிர்கொண்டிருந்தது. 43 ஆண்டுகால அரசியல்வாழ்வுக்குப் பிறகு நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக 2012ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். 2017ஆம் ஆண்டு வரை இவர் குடியரசுத் தலைவராக பணியாற்றினார். இவர் கடந்த 10ஆம் தேதி உடல்நிலை குறைபாடு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளையில் சிறுகட்டி இருந்ததாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் கொரோனாவா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அவருக்கு, நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

கோமாவில் இருந்த அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் பங்கு வகித்த அவரின் மறைவு, நாட்டிற்கே இழப்பு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com