மலேசியப் பிரதமராக இருந்து, தேர்தலில் தோற்று ஆட்சியை இழந்து, பின்பு ஊழல் வழக்கில் கைதாகி இப்போது வழக்குகளை எதிர்கொள்ளும் நஜீப் ரசாக்கின் வாழ்க்கைப் பாதை என்ன? பார்க்கலாம்.
1953ஆம் ஆண்டு பிறந்த நஜீப் துன் ரசாக் மலேசிய வரலாற்றில் மிக இளம் வயதில் எம்.பி.ஆனவர். 1975ல் தனது தந்தையின் மறைவையொட்டி மலேசியாவின் பெனாக் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நஜீப் போட்டியின்றி எம்.பி.ஆனார். பின்னர் அரசியலில் படிப்படியாக உயர்ந்து பாதுகாப்புத்துறை, கல்வித்துறைகளுக்கு அமைச்சராகி 2004ல் மலேசிய துணைப் பிரதமரான நஜீப், 2009ல் மலேசியாவின் 6ஆவது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் ஒரு இந்தியருக்கே பதவி என்ற 30 ஆண்டுகால நிலையை மாற்றி 2 இந்தியர்களுக்கு பதவி கொடுத்தது. இந்தியர்களுக்கு ‘மைடப்தார்’ எனப்படும் குடியுரிமை அங்கீகாரம் வழங்க சிறப்பு உத்தரவிட்டது – உள்ளிட்ட சில வரவேற்கத்தக்க நடவடிக்கைகள் இவரது காலத்தில் எடுக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டில் அமெரிக்க உளவு அமைப்பு, 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை நஜீப் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியது. அதில் 681 மில்லியன் டாலர்கள் நஜீப்பின் சொந்த வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருந்தது, அந்தத் தொகையில் சுமார் 30 மில்லியன் டாலர்களை அவர் தனது மனைவிக்கு நகைகள் வாங்க செலவழித்திருந்தார்.
இதனால் நஜீப் பதவி விலகக் கோரி பல போராட்டங்கள் மலேசியாவில் 2015முதல் நடந்து வந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளின் விளைவாக, மலேசியாவில் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நஜீப் ரசாக் தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று மகாதிர் முகமது பிரதமரானார். அதன்பின் நஜீப் மீதான ஊழல் வழக்கு விசாரணை வேகம் பெற்றது. அண்மையில் அவரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் ரூ.1,872 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் ரொக்கம் மட்டும் ரூ.205 கோடி ஆகும். 1,400 நெக்லஸ், 2,200 மோதிரங்கள் உட்பட மொத்தம் 12 ஆயிரம் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர, 567 விலை உயர்ந்த ஹேண்ட்பேக்குகள், 423 கைக்கடிகாரங்கள், 234 ஜோடி சன்கிளாஸ்கள் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து மலேசிய மேம்பாட்டு நிறுவன மோசடி வழக்கில் கோலாலம்பூரில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜீப் ரசாக் ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த ஊழல் வழக்கு விசாரணையால் நஜீப்பும் அவர் மனைவியும் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று மலேசிய அரசு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 3ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவர்மீது 3 நம்பிக்கை மோசடி வழக்குகளும், ஒரு அதிகார துஷ்பிரயோக வழக்கும் பதியப்பட்டு உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் அந்நாட்டுச் சட்டப்படி 20 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கத் தக்கவை. இதனால் நஜீப்பின் அரசியல் எதிர்காலம் மட்டுமின்றி எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது.