கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என தன்னலம் கருதாத தன் செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த உதாரணமாக எக்காலத்திலும் நினைவுகூறப்படும் காமராஜருக்கு இன்று பிறந்தநாள். குமாரசாமி - சிவகாமி தம்பதியின் மகனாக, 1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி, மதுரை அருகே விருதுப்பட்டியில் பிறந்தவர் காமராஜர்.
6 வயதிலேயே தந்தை மறைந்துவிட, தொடங்கும் முன்பே முடிவுக்கு வந்தது காமராஜரின் பள்ளிப்படிப்பு. மாமாவின் துணிக்கடையில் வேலை பார்த்த காமராஜருக்கு, விருதுப்பட்டியின் கடைவீதியில் அரங்கேறும் விடுதலைப் போராட்டங்கள் மாற்றத்தைக் கொடுத்தன. தனது 16 வது வயதில் இந்திய நேஷனல் காங்கிரஸ் கட்சியில் முழு நேர தொண்டராக சேர்ந்து, 1930-ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார் காமராஜர்.
தீவிர விடுதலைப் போராட்டத்தில் இறங்கிய அவர், ஒத்துழையாமை இயக்கம் முதல் அடுத்தடுத்த போராட்டங்களில் பங்கேற்று, 6 முறை சிறை சென்று, 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். காமராஜர் முதல்முறையாக 1954-ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். தனது அரசியல் குருவான சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்ற பிறகே காமராஜர் தலைமைச் செயலகம் சென்றதாக தகவல்கள் உண்டு.
ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை முடிவுக்கு கொண்டு வந்தது தான் முதலமைச்சராக காமராஜரின் முதல் நடவடிக்கை.
மலர் மாலைகள் என்றால் காமராஜருக்கு அலர்ஜி, எனவே யாரேனும் மலர் மாலை அணிவித்தால் அதனை கைகளில் வாங்கிக் கொள்வார். கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
“காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி”– என்று சொன்னார் எம்.ஜி.ஆர். இந்திரா காந்தி எமர்ஜன்ஸி அறிவித்தபோது காமராஜர் மிகவும் வேதனைப் பட்டார். இந்திராகாந்தி நாட்டின் ஜனநாயகத்தை பழி தீர்த்துக் கொண்டதாக வருந்தினார். எமர்ஜன்ஸி காலத்தில் கைது செய்யப்படாத முக்கியத் தலைவர் காமராஜர் மட்டுமே.
“நாட்டுக்கு உழச்ச எல்லாரும் சிறையில இருக்கும்போது எனக்கு மட்டும் என்ன விதி விலக்கு நானும் ஜெயிலுக்கு போறேன்” என எமர்ஜன்ஸியை எதிர்த்து மேடை போட்டு பேசினார் காமராஜர். இவ்விசயத்தில் மன வேதனையில் இருந்த காமராஜர் எமர்ஜன்ஸி அறிவிக்கப்பட்ட நான்கு மாதத்தில் உடல் நலிவுற்று இறந்து போனார். காமராஜர் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் தொலைநோக்குப் பார்வையுடன், அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் காமராஜரை கர்மவீரராக்கியது. ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளைத் திறந்தது, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் போக்க சீருடைகள் அதுவும் இலவசமாக, மதிய உணவுத்திட்டம் என இளைய சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக வார்த்தெடுக்க, சமரசமின்றி அவர் செயல்பட்ட விதம் என்றும் நினைவு கூறப்படும்.
கர்மவீரரின் ஆட்சியில் தொழில் துறையில் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ், ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, ஆவடி கனரக (டாங்க்) வாகன தொழிற்சாலை என பல்வேறு பெரும் தொழில் வாய்ப்புகள் இவரது ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்டது.
கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி உட்பட, 19 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டது. தொழில் முன்னேற்றம் தொடர்பாக இவர் வகுத்து செயல்படுத்திய திட்டத்தின் காரணமாக இவர் ஆட்சிகாலத்தில் தமிழகம் தேசிய அளவில் 2ம் இடத்தில் இருந்தது.
காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார். காமராஜர் மறைவுக்குப் பிறகு 1976’ஆம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா அறிவிக்கப்பட்டது. கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம்.