'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..!

'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..!
'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..!
Published on

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்திகளை நொடிப் பொழுதில் இணைய ஊடகங்கள் மூலமாக தெரிந்து கொள்கிறோம். பொது அறிவுத் தகவல்கள் முதல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வரை அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. சத்தமே இல்லாமல் ரேடியோ பெட்டி என்பதே அருங்காட்சியகப் பொருளாகிவிட்டது. ஆனாலும், வானொலி எனும் ஊடகம் இந்த டிஜிட்டல் மேம்பாட்டையும், மக்களை இன்னும் நெருக்கமாகச் சென்றடைவதற்கான கருவியாகவே பயன்படுத்தி வருகிறது என்பதுதான் உண்மை நிலவரம். ஆம், இன்று நம்மில் பலரும் ஸ்மார்ட்ஃபோன் வழியாக வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகிறோம் என்பதை மறுக்க முடியாது.

ஹியர்ஃபோனில் இசையையோ, நிகழ்ச்சிகளையோ கேட்டுக்கொண்டே வேலைகளை எவ்வித தடங்கலும் இன்றி உற்சாகமாக செய்யலாம் என்பதாலேயே பலருக்கும் வானொலி இப்போது மிகுந்த வசதியான ஊடகமாகத் திகழ்கிறது.

சரி, வானொலிக்கான பயனுள்ள ஆப்களை நாடலாம் என்று கூகுள் ஸ்டோரில் தேடினால், சட்டென நமக்குக் கிடைக்கிறது. 'ஆல் இந்திய ரேடியோ' (All India Radio - भारत रेडियो - பிரசார் பாரதி). இந்த அதிகாரபூர்வ செயலி, வானொலி நேயர்களுக்கு மிகவும் உகந்தது என்பது அதன் பல்வேறு அம்சங்களிலிருந்து புரிந்துகொள்ள முடியும். 

தற்போது அரசு நிறுவனம் மட்டுமல்லாது தனியார் பண்பலைகளும் ஒலிபரப்பாகி வருகின்றன என்றாலும், ஆன்லைன் மூலமாக இயங்கும் 'ஆல் இந்திய ரேடியோ' அப்ளிகேஷன் பல விதங்களில் ஸ்பெஷல்தான். அசாமி, வங்காளம், தோக்ரி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்கணி, மலையாளம், மராத்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி, தமிழ், தெலுங்கு, உருது உட்பட பல மாநில மொழிகளில் இயங்கி வரும் அகில இந்திய வானொலி மற்றும் பண்பலை ஒலிபரப்புகளை இந்த செயலியில் கேட்டு ரசிக்கலாம்.

தமிழில் மட்டும் 19 வானொலி நிலையங்கள் உள்ளன. AIR சென்னை வானொலி, புதுச்சேரி, காரைக்கால், கோவை, தருமபுரி, கொடைக்கானல், மதுரை, ஊட்டி, திருச்சி, தூத்துக்குடி மற்றும் பண்பலைகள் ஒலிபரப்பாகின்றன. 

9.89 மெகா பைட் அளவுள்ள இந்த அப்ளிகேஷன் கடந்த 2020 ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. எளிமையாக ஒரு ஸ்டேஷனில் இருந்து மற்றொரு ஸ்டேஷனிற்கு மாறும் வசதி, ஃபேவரைட் ஸ்டேஷன்களை சேஃவ் (SAVE) செய்துவைக்கும் வசதியும் உள்ளது.

இந்த செயலியில் உள்ள தமிழ் அலைவரிசைகளில் வலம் வந்தபோது நிச்சயம் நல்ல அனுபவம் தருவதாக அமைந்தது. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் விதவிதமான திரையிசைப் பாடல்களைக் கேட்க முடிகிறது. குறிப்பாக 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்காகவே இந்த ஸ்டேஷன்கள் இயங்குகின்றனவோ என்ற எண்ணமும் வரலாம். அந்த அளவுக்கு அந்தக் காலக்கட்டத்தின் ஹிட்டான பாடல்கள், மனதுக்கு இதமூட்டும் பாடல்களை அவ்வபோது கேட்டு ரசிக்கலாம்.

ஒரு ஸ்டேஷனிலிருந்து மற்றொரு ஸ்டேஷனுக்குத் தாவும் வசதியும் மிக எளிதாக இருப்பதால், விருப்பமான பாடல்களை கேட்க எளிதாக அடுத்தடுத்து நகரலாம். 

திரைப் பாடல்கள் மட்டுமல்ல, அவ்வப்போது அரசு - நிர்வாகம் சார்ந்த நாட்டு நடப்புகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் கேட்டுப் பயன்பெறலாம். 

மிக முக்கியமான ஹைலைட்டாக கருதக் கூடியது என்றால், அது மண் வாசனைதான். ஆம், சென்னை நேயர்கள் மதுரை, திருச்சி, கோவை என மற்ற மாவட்ட - மண்டல ஸ்டேஷன்களில் நிகழ்ச்சிகளைக் கேட்கும்போது, அந்தந்த வட்டார மொழிகளைக் கேட்க முடியும். ஒவ்வொரு ஸ்டேஷனிலுமே நேயர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடும் நிகழ்ச்சிகள் அடிக்கடி வருகின்றன. இது, பண்பாட்டு - கலாசார பகிர்வுக் களமாகவே அனுபவத்தைக் கடத்துகிறது.

'அதான் எத்தனையோ மியூசிக் ஆப்கள் இருக்கிறதே, எதற்காக செயலியில் வானொலி?' என்று சிலர் கேட்கக் கூடும். ஒரு பாடலைக் கேட்டு ரசிக்கும்போது, அடுத்த பாடல் எதுவாக இருக்கும் என்று தெரியாது. அப்படி அடுத்தடுத்து வரும் பாடல்களில் பலவும் நம்மை ஏதேதோ நினைவுகளில் மூழ்கடிக்கச் செய்து திக்குமுக்காட வைத்துவிடும். இது, வானொலியில் மட்டும்தானே சாத்தியம்?

இப்படி வானொலிக்கே உண்டான பேரனுபவத்தைப் பெற நிச்சயம் நம் 'ஆல் இந்திய ரேடியோ' அப்ளிகேஷன் உங்களுக்கும் விருப்பமானதாக அமையலாம்.

All India Radio - भारत रेडियो அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ள பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். செயலியை டவுன்லோடு செய்ய இதோ இணைப்பு > https://play.google.com/store/apps/details?id=com.the100code.air

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com