1991 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு முதல்முதலாக சிறைக்குச் சென்றார் பேரறிவாளன். மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு, பலகட்ட நீதிமன்ற போராட்டங்களுக்கு பின்பு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 27 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டார், இன்னும் தொடர்கிறது "அறிவு" அவர்களின் சிறைவாசம். ராஜிவ் படுகொலைக்கு சிறிய ரக 9 வால்ட் பாட்டரிகள் வாங்கிக் கொடுத்துதான் பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. அதற்காக 1991 ஆம் ஆண்டில் துடிப்புள்ள ஒரு இளைஞனாக கைது செய்யப்பட்டார் பேரறிவாளன். ஆனால் இத்தனை ஆண்டுகள் சிறையிலேயே காலம் தள்ளிவிட்ட பேரறிவாளன் தன் இளைமை முழுவதும் தொலைத்துவிட்டு, முதுமையை முத்திமிட்டப்படி சிறைக் கம்பிக்குள் விடியலுக்காக காத்திருக்கிறார்.
ஆனால், இந்த 27 ஆண்டுகளாக பேரறிவாளன் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.மிக நீண்டகாலமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனுக்கு 2011 செப்டம்பர் 9 இல் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்து பின்னர் அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து 2014 பிப்ரவரி 18 தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன், பேரறிவாளன் வாக்கு மூலம் தவறாக எழுதப்படதாகவும், அவர் குற்றமற்றவர் என்றும் தெரிவித்திருந்தார். தியாகராஜனின் இந்த வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பேரறிவாளன் சிறையில் மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் சிறைத்துறை நடத்தி வரும் டெஸ்க்டாப் பப்ளிஷிங் டிப்ளோமா பட்டப் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து, தங்கப் பதக்கமும் வென்றார். மேலும் தன்னுடைய சிறை அனுபவத்தை “An Appeal From The Death Row (Rajiv Murder Case — The Truth Speaks)” என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் பேரறிவாளன் எழுதி வெளியிட்டார். நீண்டகால சிறை வாசத்துக்கு பின்பு, கடந்தாண்டு பரோலில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டு, மீண்டும் சிறைச் சென்றார். அண்மையில் கூட உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்கில் சிபிஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததால் தனக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும், இதனால் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பேசிய நீதிபதிகள், பேரறிவாளனை விடுவிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் தன் மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு மார்ச் மாதம் கடிதம் எழுதினார். அதில் "ஜூன் 11ஆம் தேதியோடு பேரறிவாளனை அரசு சிறையில் அடைத்து 27 ஆண்டுகள் முடியப்போகிறது. வாழ்நாளுக்குள் ஒரே புதல்வன் பேரறிவாளன் விடுதலை ஆகி வருவாரா எனும் அச்சம் அதிகமாகிறது. ஏன் கொலைக் குற்றம் சுமத்தினார்கள். ஏன் தண்டித்தார்கள். ஏன் 27 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள் என்று புரியவில்லை?. எனக்கு வயது 71 என் துணைவருக்கு 77. நான் மகனை மீட்க முடியாமல் இருப்பதை எண்ணி அழுவதா; எனக்குள்ள நோய்கள் தரும் வலியைக் தாங்க முடியாமல் அழுவதா; என் முதுமையால் அலைந்து திரிய இயலாமையை எண்ணி அழுவதா; இறுதிக் காலத்தில் நோய்களாலும் முதுமையாலும் அல்லல்படும் என் துணைவருக்கு உதவிடாது அவரைப் பிரிந்து இருக்க வேண்டியதை எண்ணி அழுவதா; என்னால் இயலவில்லை” என்று அற்புதம்மாள் தமது கடிதம் பெரும் உணர்ச்சி பெருக்கை ஏற்படுத்தியது.
சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன் நிரபராதியா, குற்றவாளியா என்ற வாதம் ஒருபுறம் நடந்தாலும். பறவையைக் கூட கூண்டுக்குள் அடைக்க கூடாது என மனிதாபிமானம் பார்க்கும் பலர், சிறைக் கம்பிகளுக்கு பின்னால் ஒரு மனிதனின் கால் நூற்றாண்டுக்கான கனவும் வாழ்க்கையும் சிதைக்கப்பட்டதையும் மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டும், இதனை அரசும் பார்க்க வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.