'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்

'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
Published on

உடலில் நடைபெறும் இயற்கை அதிசயங்களில் ஒன்று, புதிய செல்கள் உருவாதல். அதனால்தான் குறிப்பிட்ட நாட்களில் பலவீனமாக உணரும் நாம், சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது ஆரோக்யமானவரான மாறுகிறோம். தினமும் உடல் இயக்கம் மற்றும் உழைப்புக்கு ஏற்றவாறு ஆரோக்யமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அதிலும் கர்ப்பிணிகள் கரு வளர்ச்சி மற்றும் தங்களுடைய உடல் இயக்கத்துக்கு போதுமான உணவுகளை எடுத்துக்கொள்வது என்பது மிகமிக அவசியம்.

குறிப்பாக கருவிலுள்ள குழந்தை வளர்ச்சி அடைய அடைய உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு உணவு உட்கொள்ள வேண்டும். உடலில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து போன்ற அனைத்தும் தேவையான அளவில் இருக்கவேண்டும். அதற்கு சில காய்கறிகள் மற்றும் பழங்களை கர்ப்பிணிகள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பால் பொருட்கள்: கர்ப்பகாலத்தில் புரதம் மற்றும் கால்சியம் அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கு கால்சியம் குறைவால் அடிக்கடி முழங்கால் மற்றும் இடுப்பு வலி ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வயிற்றில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சியையும் கருத்தில்கொள்ள வேண்டும். பால்பொருட்களில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் இதில் பாஸ்பரஸ், வைட்டமின் பி, மக்னீசியம் மற்றும் சிங்க் போன்ற சத்துகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக பாலாடைக் கட்டிகளில் கால்சியம் அதிக அளவில் செறிந்துள்ளது. எனவே தினமும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்வது அவசியம்.

பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள்: தானியங்கள், பட்டாணிகள், பீன்ஸ், சோயா பீன்ஸ் மற்றும் நிலக்கடலை போன்ற அனைத்துமே கர்ப்பிணிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவுகள். ஒருநாளைக்கு குறைந்தது 600 மில்லி கிராம் ஃபோலேட் உடலுக்குத் தேவை. இந்த அளவை தினசரி எடுத்துக்கொள்ளும் உணவிலிருந்து பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். இதுதவிர சில பருப்புகளில் இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் பொட்டாசியமும் நிறைந்துள்ளன.

மீன் வகைகள்: மீன் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என்ற நம் உடலுக்கு தேவையான் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. எனவே அனைத்து வயதினருமே மீன் வகைகளை எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக சால்மன் மீனில் ஒமேகா-3 அதிகம் நிறைந்துள்ளது. வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை, கண்கள் மற்றும் செரிமான மண்டலத்தின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. அதேசமயம் கடல் மீன்களில் மெர்க்குரி அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது எனவும் கேள்விப்பட்டிருப்போம். வாளமீன், சுறா, கெளுத்தி, மார்லின், bigeye tuna மற்றும் கல்ஃப் மற்றும் மெக்ஸிகோ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற டைல் மீன்கள் என்று சொல்லக்கூடிய மீன்வகைகளில் மெர்க்குரி நிறைந்துள்ளது. எனவே இதுபோன்ற மீன்களை தவிர்ப்பதும், மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்வதும் சிறந்தது.

முட்டை: முட்டையில் பெரும்பாலும் அனைத்து சத்துக்களுமே நிறைந்திருப்பது நம் அனைவருக்குமே நன்கு தெரியும். ஒரு பெரிய முட்டையில் 80 கலோரிகள், புரதம், கொழுப்பு மற்றும் அதிக வைட்டமின்கள், மினரல்கள் இருக்கிறது. மேலும் கர்ப்பிணிகளுக்குத் தேவையான கோலைன் என்ற சத்து முட்டையில் அதிகமாக இருக்கிறது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதுடன், மூளை மற்றும் முதுகெலும்பின் சீரற்ற வளர்ச்சியை தடுக்கிறது. ஒருநாளைக்கு கர்ப்பிணிக்கு 450 மில்லிகிராம் கோலைன் தேவைப்படுகிறது. ஒரே ஒரு முட்டையில் 147 மில்லிகிராம் கோலைன் இருக்கிறது. எனவே கர்ப்பிணிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் முட்டை முக்கிய இடம் வகிக்கிறது.

ப்ரக்கோலி மற்றும் பச்சை கீரைகள்: கீரைகளில் நார்ச்சத்து, வைட்டமின் சி, கே, ஏ, கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. எனவே தினசரி டயட்டில் சரிவிகித உணவுமுறையை பின்பற்ற வேண்டும் என நினைப்பவர்கள் ஏதேனும் ஒரு கீரை வகையை உட்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உலர் பழங்கள்: உலர் பழங்களில் கலோரிகள், நார்ச்சத்து மற்றும் பலவிதமான வைட்டமின்கள், மினரல்கள் அதிகமாக இருக்கிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் மினரல்களுடன் ஃபோலேட், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியமும் இருக்கிறது. சிலர் தனியாக உலர் பழங்களை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் சாக்லெட் போன்ற இனிப்பு வகைகளில் சேர்த்து எடுத்துக்கொள்வர். உலர் பழங்களில் இயற்கையாகவே இனிப்பு சுவை நிறைந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே அதில் மீண்டும்
சர்க்கரையை சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

இவை அனைத்துடன் குழந்தையின் சருமம் பளபளப்பாகவும், வறட்சி அடையாமலும் இருப்பதற்கு பழங்கள், காய்கறிகளுடன், போதுமான தண்ணீர் குடிப்பது மிகமிக  அவசியம் என்பதை கர்ப்பிணிகள் மறக்கவேண்டாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com