’ரத்தசோகை’ பாதித்த கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவுகள்: மருத்துவர் ஆலோசனை

’ரத்தசோகை’ பாதித்த கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவுகள்: மருத்துவர் ஆலோசனை
’ரத்தசோகை’ பாதித்த கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவுகள்: மருத்துவர் ஆலோசனை
Published on

’உலகிலேயே இந்தியாவில்தான் பெண்களுக்கு அதிக ரத்த சோகை பாதிப்பு இருக்கிறது. குறிப்பாக, கர்ப்பிணி பெண்களைத்தான் ரத்தசோகை அதிகமாக தாக்குகிறது’ என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறது மருத்துவ உலகம். இந்நிலையில், கர்ப்பிணிகளுக்கு ஏன் ரத்த சோகை பிரச்சனை ஏற்படுகிறது? மற்ற பெண்களைவிட கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் அதிக ரத்தம் தேவைப்படுகிறது? கர்ப்பிணி பெண்கள் ரத்த சோகை பாதிப்பிலிருந்து குணமாக உண்ண வேண்டிய உணவுகள் என்ன?  போன்றவைக் குறித்து பிரபல மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் இந்திரா நெடுமாறனிடம் கேட்டபோது,

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர், இந்திரா நெடுமாறன்

எல்லா நோயாளிகளை விடவும் கர்ப்பிணிகளுக்கே அதிக ரத்தம் தேவைப்படும்!

   ”குழந்தை வயிற்றில் இருப்பதாலும் பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதாலும் உலகில் எல்லா நோயாளிகளை விடவும் கர்ப்பிணிகளுக்குத்தான் மருத்துவத்துறையில் ரத்தம் அதிகம் தேவைப்படுகிறது. குழந்தை வயிற்றில் இருக்கும்போது, அதற்கு உணவுப் பாதையும் நுரையீரலும் வேலை செய்யாது. அதனால், ரத்தத்தின் வழி குழந்தைக்கு உணவை எடுத்துச் செல்லவும் சுவாசத்திற்காகவும் தாயின் நஞ்சுக்கொடி பயன்படுகிறது. இந்த நஞ்சுக்கொடி மூலம் கர்ப்பப்பையின் உள்ளே 1 நிமிடத்திற்கு 1 லிட்டர் ரத்தம் உள்ளே சென்று வரும். இதன்மூலம்தான், குழந்தைக்கு தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல, குழந்தையிடம் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு உள்ளிட்ட நச்சு ரத்தத்தையும் நஞ்சுக்கொடி மூலமே குழந்தை வெளியேற்றுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் மேல் பகுதியில்தான் இருக்கவேண்டும்.

ஆனால், பலப் பெண்களுக்கு கர்பப்பையின் வாய்ப்பகுதியில் படரவும் வாய்ப்புண்டு. அப்படி, தவறாக படரும்போது, குழந்தை பிறந்தால் தாயின் வயிற்றிலுள்ள எல்லா ரத்தமும் 1 நிமிடத்திலேயே வெளியேறிவிடும். அதனால்தான், பிரசவத்தை தாய்க்கு மறுஜென்மம் என்கிறார்கள். அப்படி வெளியேறும் ரத்ததிற்கு உடனடியாக ரத்தம் ஏற்றப்பட வேண்டும். அப்படி ரத்தம் ஏற்றாமல் இருந்தாலோ அல்லது தவறான ரத்தத்தை செலுத்தினாலோ தாய்க்கு உடனடியாக கிட்னி செயலிழத்தல், ஈரல் செயலிழத்தல் ஏற்பட்டு இறப்பு நேரிடும்.

கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை உருவாவதற்கான காரணங்கள்!

 சாதாரணப் பெண்களுக்கு உடலில் மூன்றிலிருந்து நான்கரை லிட்டர் வரை ரத்தம் இருக்கும். ஆனால், கர்ப்பிணிகளுக்கு கர்ப்பம் தரித்தவுடன் 1 லிட்டர் ரத்தம் அதிகமாகவே உண்டாகும்.  ஏற்கனவே, ரத்தசோகை இருக்கும் பெண்களுக்கும் ரத்தம் அதிகம் உற்பத்தியானாலும் குறைவாகவே இருக்கும்.

    இந்தியாவைப் பொறுத்தவரை 90 சதவீத பெண்களுக்கு ரத்தசோகை பிரச்சனை உள்ளது. அதில், கர்ப்பிணிகளுக்குத்தான் அதிகம். சில பெண்கள் சத்தான உணவை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கர்ப்பிணியான பின்னும் மருத்துவர்கள் கொடுக்கும் சத்து மாத்திரைகளை உட்கொள்ள மாட்டார்கள். இன்னும் சில பெண்களுக்கு மருந்து மாத்திரை கொடுத்தாலும் அல்சர் பிரச்சனை இருந்தால், இரும்புச் சத்துகள் முறையாக போய் சேராது.

    இதுபோன்ற காரணங்களால்தான் கர்ப்பிணிகளுக்கு ரத்தம் 10.5 சதவீதம் உடலில் கட்டாயம் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ரத்தம் குறைவாக இருந்தால் பிரசவ நேரத்தில் அம்மா உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க கர்ப்பிணிகள் ரத்தம் அதிகரிக்க இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். ரெகுலராக டாக்டர் செக்கப் செல்வதோடு சத்து மாத்திரைகளை சாப்பிடவேண்டும்.

ரத்தசோகை பாதித்த கர்ப்பிணிகள் உண்ணவேண்டிய உணவுகள் என்ன?

ரத்த சிவப்பணுக்கள் உருவாக முக்கியமாக இரும்புச்சத்து, போலிக் ஆசிட், விட்டமின் ’பி 12’ உணவுகளை உண்ண வேண்டும். இந்தச் சத்துகள் ஆட்டின் கல்லீரல் மற்றும் மண்ணீரல், பச்சையான காய்கறிகள், புதினா, கொத்தமல்லி, கருவேப்பில்லை, அத்திப்பழம், மாதுளை, பேரிட்சையில் அதிகம் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

அதேசமயத்தில் இரும்புச் சத்தை கால்சியம் சத்தான பால் பொருட்களோடு சேர்த்து சாப்பிடவேக் கூடாது. அப்படி சாப்பிட்டால், அதற்கான சத்துகள் கிடைக்காது. மாறாக, விட்டமின் ’சி’ சத்தோடு இரும்புச் சத்தை எடுக்கலாம்.

உதாரணமாக லெமன் ஜூஸ்ஸுடன் புதினா ஜூஸ்ஸையும் கலந்து குடித்தால் சத்துகள் இரட்டிப்பாகும்” என்று ஆலோசனைகளை வாரி வழங்குகிறார், டாக்டர் இந்திரா நெடுமாறன்.

-வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com