வெயில்காலம் வந்தாலே பலருக்கும் வரக்கூடிய பிரச்னை முகப்பரு. சிலருக்கு சிறுசிறு புள்ளிகள் போன்று பருக்கள் வரும், சிலருக்கு கட்டிகள் போன்று உருவாகி மிகுந்த வலியை கொடுக்கும். வெயில்காலத்தில் முகப்பரு வராமல் தடுக்க தினசரி வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலே போதுமானது.
தண்ணீர்
பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணம் போதுமான தண்ணீர் அருந்தாததுதான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தண்ணீரில் ஊட்டச்சத்துகளும் ஆக்சிஜனும் நிறைந்திருப்பதால் பல பிரச்னைகளுக்கு தீர்வும் தண்ணீர்தான். இது உடல் உறுப்புகளுக்கு ஊட்டமளித்து முகப்பருவை எதிர்த்து போராட உதவுகிறது.
ஆலிவ் ஆயில் க்ரீம்
கோடைகாலத்தில் வெளியே செல்லும்போதும் தூங்கபோகும் முன்னரும் ஆலிவ் ஆயில் லோஷனை பயன்படுத்தலாம். இது சரும துவாரங்களை அடைக்காமல் சருமத்தால் உறிஞ்சப்படுவதால் சருமம் சுவாசிக்க வழிவகை செய்கிறது. இது முகப்பரு ஏற்படாமல் தடுக்கிறது.
எலுமிச்சைச் சாறு
எலுமிச்சைச் சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் கல்லீரலில் தேங்கியுள்ள அமில கழிவுகளை நீக்கி சுத்தப்படுத்துகிறது. மேலும் ரத்தத்திலுள்ள நச்சுக்களை அகற்றி உடலில் தேவையான நொதிகள் சுரப்பை மேம்படுத்துகிறது. இது சரும துவாரங்களை சுத்தப்படுத்தி சருமம் புத்துணர்வுடனும், பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.
தர்பூசணி
வெயில்காலத்திற்கு ஏற்ற பழமான தர்பூசணி சருமத்திலுள்ள கறைகளை நீக்குகிறது. இதில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்திருப்பதால் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் மற்றும் ஹைட்ரேட்டேடாகவும் வைத்திருக்கிறது. மேலும் இது முகப்பரு வெடிப்பை தடுத்து, முகத்திலுள்ள தழும்புகள் மற்றும் பரு அடையாளங்களை நீக்குகிறது.
பால் பொருட்கள்
பொதுவாக பால் பொருட்கள் முகப்பருவை உருவாக்கும் என கேட்டிருக்கிறோம். ஆனால் சரும ஆரோக்கியத்திற்கு சரிவிகித உணவு அவசியம். கொழுப்பு குறைந்த பால் பொருட்களில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இது சரும ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிண்டடுகள் நிறைந்திருக்கின்றன. இவற்றில் தாவர ரசாயனங்கள்(phytochemicals) நிறைந்திருப்பதால் சரும பாதுகாப்பில் சிறந்தது.
தயிர்
பெரும்பாலான சரும பேக்குகளில் தயிர் இடம்பெற்றிருக்கும். அதிலுள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புசக்திதான் இதற்கு காரணம். இது சருமத்தை சுத்தப்படுத்தி சரும துவாரங்களில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது.
வால்நட்
தினசரி வால்நட் சாப்பிட்டு வந்தால் சருமத்தின் மென்மை மற்றும் மிருதுத்தன்மை அதிகரிக்கும். வால்நட் எண்ணெயிலுள்ள லினோலெக் அமிலம் சரும அமைப்பை பராமரித்து, சருமம் நீரேற்றத்துடன் இருக்க உதவுகிறது.
செலினியம்
நட்ஸ் மற்றும் தானியங்களில் உடலுக்குத் தேவையான செலினியம் உள்ளது. உடலில் செலினியம் அளவு அதிகமாக இருந்தால் சூரிய கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவே இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
ஆப்பிள்
முகப்பருவுக்கு எதிரியான பெக்டின் ஆப்பிளில் நிறைந்திருக்கிறது. குறிப்பாக ஆப்பிள் தோலில்தான் பெக்டின் அதிகமாக இருக்கிறது. எனவே ஆப்பிள் சாப்பிடும்போது அதன் தோலையும் சேர்த்து சாப்பிடுவது அவசியம்.