வயதாக ஆக ஒருவருடைய உடலின் மெட்டபாலிசமும் குறைய ஆரம்பிக்கும். தசைகள் நலிவடைந்து, ஹார்மோன்களின் அளவும் குறையும். இதனால் எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றம் மற்றும் இளமையில் இருந்ததுபோலல்லாமல் உடல்நலக்குறைபாடுகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். ஆனால், கொழுப்புகளை எரித்து, ஆற்றலை சமநிலையில் வைத்திருக்க, நோய்வாய்ப்படும் வாய்ப்புகளை குறைக்க தினசரி வாழ்வில் பழக்கமாக்கும் செயல்கள் நமக்கு நிறையவே இருக்கிறது.
ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் நீண்ட நேரம் பசிக்காது. மேலும் சாப்பிட வேண்டுமென மனம் நாடாது. மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். தொடர் உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மன அழுத்தத்தை குறைத்தல் போன்றவற்றிற்கு துணைபுரியும். குறிப்பாக 40 வயதை கடந்த பெண்களுக்கு எந்தெந்த மாதிரியான உணவுகள் தேவை என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
40 வயதை கடந்த பெண்கள் கவனிக்கவேண்டியவை
உடல் எடையை குறைக்கவேண்டும் என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும் என்றாலும், அந்த குறிக்கோளை அடைய நிலையான டயட் முறையை பின்பற்ற வேண்டும். நிலையான டயட் என்பது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கவேண்டும் என்பதுதான். மற்றபடி அது மிகவும் ஸ்ட்ரிக்டாக இந்த உணவுதான் என்று இருக்கவேண்டிய அவசியமில்லை என்கின்றனர் நிபுணர்கள். ஒரு நிலையான உணவு என்பது சமநிலையான டயட் என்பதை புரிந்துகொள்வது மிகவும் அவசியம். வயதாக ஆக நமது உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக்கொள்வது மிகமிக அவசியம். தினசரி எடுத்துக்கொள்ளும் உணவில் கீழ்க்கண்ட ஊட்டச்சத்துகள் கட்டாயம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
புரதம்
உடலுக்கு அடித்தளமாக செயல்படுகிறது புரதம். உடலை கட்டுக்குள் வைக்கவோ அல்லது தசைகளை வலிமையாக்கவோ எண்ணினால் புரதம் கட்டாயம் தேவை. உடல் எடையை குறைக்க புரதம் சேர்ப்பது மிகவும் அவசியம். நார்ச்சத்தை போலவே புரதமும் தேவையான சக்தியை அளிக்கின்றன. எனவே முட்டை, மெல்லிய இறைச்சி, பால் பொருட்கள், மீன், பீன்ஸ் மற்றும் பருப்புகள் கட்டாயம் டயட்டில் இடம்பெற வேண்டும்.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்
இந்த சத்துக்கள் இல்லாமல் உங்களுடைய உடல் சீராக இயங்காது. போதுமான பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், முழு தானியங்கள், முட்டைகள், மீன்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்வது உடலுக்கு தேவையான மைக்ரோ நியூட்ரியன்களை உடலுக்கு வழங்குகிறது.
ஆரோக்கியமான கொழுப்புகள்
பாலி அன்சேச்சுரேட்டேட் கொழுப்புகள் உடல் இயக்கத்திற்கு மிகவும் அவசியம். இவை நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் உடல் பருமன் போன்ற நிறைய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. கொழுப்பு மீன்கள், அவகேடோ, ஆலிவ், நட்ஸ் மற்றும் நட்ஸ் எண்ணெய் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின்கள் உடலில் சேருவதற்கு போதுமான நல்ல கொழுப்புகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
நார்ச்சத்து
நீண்ட நேரம் பசிக்காமலும், திருப்தியுடனும் இருக்க இந்த சத்து மிகவும் முக்கியமான ஒன்று. இது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.
எந்த உணவாக இருந்தாலும் உடலுக்கு தேவையான கலோரிகளை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. அதிக கலோரிகள் ஆபத்தே. பொரித்த உணவுகளைவிட க்ரில்லிங், பேக்கிங் அல்லது வேகவைத்த உணவுகள் சிறந்தது. அதிக எண்ணெய் அல்லது வெண்ணெயை தவிர்க்கவும். குறிப்பாக 40 வயதை கடந்த பெண்கள் இந்த உணவுகளை கட்டாயம் சரியான முறையில் சேர்ப்பது சிறந்தது.