வெயில்காலம் ஆரம்பித்தவுடனே சூடு அதிகமாக ஆரம்பித்துவிட்டது. இதனால் இயற்கையாகவே அதிகமாக அனைவருக்கும் வியர்க்கும். அதனால் பலர் உடற்பயிற்சி செய்யவேண்டாம் என நினைப்பர். அடிக்கடி வெயிலில் வேலை செய்வதுடன் சிறிது உடற்பயிற்சியும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதேநேரம் அதிக உடற்பயிற்சியும் ஆபத்தில் முடிந்துவிடும். அதிகமாக வியர்க்கும்போது அது பக்கவாதம், குமட்டல், தலைவலி மற்றும் உடல் வறட்சி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். உடல் எப்போதும் அதிக சூட்டில் இருக்கும்போது இயற்கையாக உடலில் இருக்கும் குளிரவைக்கும் தன்மை மாறி, மயக்கம் மற்றும் வெப்ப அதிர்ச்சியை உடலில் உருவாக்கிவிடும்.
இதை சமாளிக்க அதிக தண்ணீர் குடிப்பது மட்டுமே போதாது. ஏனென்றால் அதிகமாக வியர்க்கும்போது நீருடன் எலக்ட்ரோலைட்டுகள் என்று சொல்லப்படுகிற பொட்டாசியம், சோடியம், குளோரைடு, பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற நுண் சத்துகளும் உடலிலிருந்து வெளியேறிவிடும். இந்த நுண் சத்துகள் வெளியேறும்போது அது தசைப்பிடிப்பு, பலவீனம், சீரற்ற இதயத்துடிப்பு, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
பகல்நேரத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்!
காலை 10 மணிமுதல் மதியம் 3 மணிவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்த நேரங்களில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும். வெயில்காலங்களில் உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் காலை சூரியன் உதிக்கும் நேரம் அல்லது மாலை சூரியன் மறையும் நேரம். மேலும் காற்று மாசுபாடு அதிகமாக இருப்பதால் வெளியே உடற்பயிற்சி செய்வதை தவிர்த்துவிடுவது சிறந்தது.
தளர்வான மற்றும் வெளிர்நிற உடைகளை அணியுங்கள்!
அடர் நிறங்கள் வெப்பத்தை இழுக்கும். வெளிர்நிறங்கள் வெப்பத்தை பிரதிபலிக்கும். அதேபோல் இறுக்கமான ஆடைகள் வசதியற்ற உணர்வைத் தருவதுடன், சுவாசிப்பதிலும் சிரமத்தை ஏற்படுத்தும். தளர்வான உடைகளை அணியும்போது நல்ல காற்றோட்ட வசதி இருப்பதால் நீண்டநேரம் உடற்பயிற்சி செய்யமுடியும்.
சன்ஸ்க்ரீன் தடவ மறவாதீர்கள்!
வெயில், குளிர் மற்றும் மழை என எந்த காலமாக இருந்தாலும் வெளியே உடற்பயிற்சி செய்ய செல்லும்போது எஸ்.பி.எஃப் 30 அல்லது அதற்கும் அதிகமான சன்ஸ்க்ரீன் லோஷனை தடவுவது சரும பிரச்னைகள் வராமல் தடுக்கும். மேலும் வயதான தோற்றத்தையும் மாற்றும்.
தண்ணீர்பாட்டிலை உடன் கொண்டு செல்லுங்கள்!
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு குறைந்தது 2 கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதேபோல் உடற்பயிற்சிக்கு இடையிடையே சிறிது தண்ணீர் குடிப்பது அவசியம். உடற்பயிற்சி முடிந்தபிறகு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகளைப் பெற பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அறிகுறிகளை கருத்தில் கொள்ளுங்கள்!
மயக்க மற்றும் தலைசுற்றல், குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்படும்வரை உடற்பயிற்சி செய்யக்கூடாது. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் பயிற்சியை உடனே நிறுத்தி விட வேண்டும். இதுதவிர இதயத்துடிப்பு அதிகரிப்பு, பலவீனம், தலைவலி, தசைப்பிடிப்பு, வாந்தி போன்ற அறிகுறிகளும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே உடல் இதுபோன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்போது சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு, தண்ணீர் குடித்தல், சிற்றுண்டி எடுத்தல் அவசியம்.