கிங் மேக்கர், படிக்காத மேதை, கர்ம வீரர், தென்னாட்டுக் காந்தி என கொண்டாடப்படும் தன்னிரகற்ற பெருந்தலைவர் காமராஜர் வாழ்வில் நிகழ்ந்த 5 முக்கிய சம்பவங்களை காணலாம்.
கொலை முயற்சி
1966ஆம் ஆண்டில் மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, பசு விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தீவிரமாகக் கையிலெடுத்தன. பசு வதைக்கு எதிராக உடனடியாக சட்டம் கொண்டுவரக் கோரினார்கள். அதை இந்திரா காந்தி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இந்துத்வா அமைப்பினர் பல்லாயிரக்கணக்கில் டெல்லியில் திரண்டனர். அச்சமயத்தில் பெரும் கூட்டம் ஒன்று நாடாளுமன்றத்தை நோக்கி ஆவேசத்துடன் சென்றது. நாடாளுமன்றத்தின் கதவுகள் சாத்தப்பட்டிருப்பதைக்கண்டு ஆத்திரமடைந்த அவர்கள், நாடாளுமன்ற வீதியிலிருந்த அரசுக் கட்டடங்கள் அனைத்தையும் தாக்கத்தொடங்கினர். அங்கிருந்த, காங்கிரஸ் தலைவர் காமராஜர் வீட்டின்மீது அவர்கள் கல்வீசித் தாக்கினர். பிறகு, காமராஜர் வீட்டுக்குத் தீ வைத்தனர். அப்போது மத்திய உணவை சாப்பிட்டுவிட்டு கண் அயர்ந்திருந்தார் காமராஜர். நல்லவேளையாக அந்தத் தாக்குதலிலிருந்து அவர் உயிர் பிழைத்தார்.
கிங் மேக்கர்
தலைமைக்கு அடித்துக்கொள்ளும் இன்றைய அரசியல்வாதிகள் இருக்கும் இதே மண்ணில்தான் பதவி ஆசை இல்லாமல் தம்மை தேடி வந்த பிரதமர் பதவியை மறுத்து இரண்டு பிரதமர்களை உருவாக்கிய 'கிங் மேக்கர்' காமராஜர். சுதந்திர இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற நேரு 1964ல் உயிரிழந்தார். நேருவால் காங்கிரசின் தேசியத் தலைவராக்கப்பட்ட காமராஜர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், லால்பதூர் சாஸ்திரியை பிரதமராக முன்மொழிந்தார் காமராஜர். பிறகு, 1966ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். இதலனாலேயே 'கிங்மேக்கர் காமராஜர்' என்று அவர் நினைவுகூரப்படுகிறார்.
காமராஜர் - பெரியார் உறவு
காங்கிரஸ் ஒழிய வேண்டும் என்று சொன்ன அதே தந்தை பெரியார்தான், காங்கிரஸ் கட்சியை உயிர்நாடியாக நினைத்த காமராசரின் ஆட்சியைப் 'பொற்கால ஆட்சி' என்று பாராட்டினார். காமராஜர் 3 முறை முதல்வரானபோதும், அவருக்காக பிரச்சாரம் செய்தவர் பெரியார். 1963ஆம் ஆண்டு கே பிளான் திட்டத்தில் காமராஜர் பதவி விலகியபோது அதனைக் கண்டித்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. காமராஜர் தேசிய அரசியலுக்குச் சென்ற பிறகும் பெரியாரின் ஆதரவு தொடர்ந்தது. 1967ஆம் ஆண்டு தேர்தலில் காமராஜருக்கு எதிராக 7 கட்சிக் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் அண்ணா. காமராஜருக்கு ஆதரவாக களத்தில் இருந்தது பெரியாரின் திராவிடர் கழகம் மட்டுமே .
பெரியாரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து நடந்த கூட்டத்தில் பேசிய காமராஜர், ''பெரியாரின் வரலாறு தமிழ்நாட்டின் வரலாறு. அவர் சமுதாயச் சீர்திருத்தங்களையும் பலவீனங்களையும் ஒழிப்பதற்கு இந்தியாவிற்கே ஒளிவிளக்காக விளங்கினார். அப்படிப்பட்ட பெரியாரை நாம் இழந்திருக்கிறோம்" என்றார்.
9 ஆண்டுகள் சிறைவாசம்
தனது 16 வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பொது வாழ்க்கையை தொடங்கிய காமராஜர், தனக்காக ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. திருமணமே செய்து கொள்ளாமல் தனது வாழ்நாள் முழுவதையும், நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணித்தார். 1930ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, முதன்முதலாக சிறைக்கு சென்றார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, 9 வருடங்கள் தன்னுடைய இளம் வயதின் வாழ்க்கையை சிறையில் கழித்தவர் காமராஜர்.
காமராஜரின் கடைசி நிமிடங்கள்
அக்டோபர் 2, 1975. மகாத்மா காந்தி பிறந்த நாளன்று இயல்பாகவே இருந்தார் காமராஜர். அன்று காலை தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். பிற்பகலில் அவர் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப் போனார். மாலையில் காமராஜரின் உடம்பு முழுவதும் வியர்த்திருந்தது. காமராஜர் தமது உதவியாளரை அழைத்து மருத்துவர்களைக் கூப்பிடும்படி கூறினார். உடனே, மருத்துவர்களுக்கு தொலைபேசியில் விவரம் தெரிவிக்கப்பட்டது. டாக்டர்கள் வந்தால் தன்னை எழுப்பும்படி உதவியாளரிடம் கூறிய காமராஜர், விளக்கை அணைக்க சொன்னார்.
3.15 மணிக்கு வந்த மருத்துவர் சவுரிராஜன், காமராஜரை பரிசோதித்தபோது இறந்து விட்டதாகக் கலங்கிய கண்களுடன் தெரிவித்தார். தொடர்ந்து வந்த மருத்துவர்கள் ஏ.எல்.அண்ணாமலையும் ஜெயராமனும் உடலைப் பரிசோதித்துப் பார்த்து, உயிர் பிரிந்ததை உறுதிப்படுத்தினார்கள். காமராஜர் மறைவுச் செய்தியைக் கேட்டவுடனே முதல்வர் மு.கருணாநிதி விரைந்து வந்தார். மறுநாள் காமராஜரின் உடல் காந்தி மண்டபத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு அதற்கு இடது பக்கத்தில் தகனம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. இந்த இடத்தைத் தேர்வுசெய்து தகனத்துக்கான ஏற்பாடுகளை, காங்கிரஸ் தலைவர்களோடு கலந்து மு.கருணாநிதி செய்திருந்தார்.
இதையும் படிக்கலாமே: தமிழ்நாட்டின் கல்விக் கண்ணை திறந்த 'படிக்காத மேதை'.. கர்ம வீரரின் ஆட்சி ஏன் பொற்கால ஆட்சி?