ஃபிட்னஸ் சேலஞ்ஜ் ட்ரெண்டிங்: ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வந்த சவால் !

ஃபிட்னஸ் சேலஞ்ஜ் ட்ரெண்டிங்: ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வந்த சவால் !
ஃபிட்னஸ் சேலஞ்ஜ் ட்ரெண்டிங்: ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வந்த சவால் !
Published on

“நாட்டுல இந்த ஃபிட்னஸ் சேலஞ்ஜ் தொல்லை தாங்கல பா" என்ற அளவுக்கு பல விஐபிகள், ஒருவருக்கு ஒருவர் ட்விட்டரில் ஃபிட்னஸ் சேலஞ்சை கொடுத்து வருகின்றனர்.

"நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா ஃபிட்டாக மாறும்" என்று ஃபிட்னெஸ் சேலஞ்ஜை முதலில் ஆரம்பித்தது வைத்தார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். அதன்படி ஃபிட்னெஸ் சேலன்ஜ் (FitnessChallenge) என்ற ஹேஷ்டேக்  சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இதன்மூலம், இந்தியர்கள் தங்களது உடற்பயிற்சி முயற்சிகளை சமூக வலைதளங்களில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, அந்தச் சவாலை பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்தார். இதனை ஏற்ற பிரதமர் மோடி தான் தினசரி செய்யும் நடைப்பயிற்சி, யோகப் பயிற்சி, அக்குபஞ்சர் பயிற்சிகளுக்கான வீடியோவை வெளியிட்டார். பிரதமரின் உடற்பயிற்சி வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகியது.

இது என்னடா தமிழனுக்கு வந்த சோதனை? நம்ம ஊர்ல எவ்வளவு பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்காங்க. அவங்க யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஃபிட்னஸ் சேலஞ்ஜ் கொடுக்கமாட்றாங்கனு நெட்டிசன்கள் கேட்கவும் கலாய்க்கவும் செய்தனர். சரி நாமளே இதை ஆரம்பிச்சு வைப்பொம்னு, தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசியல் கட்சிப் பிரமுகர்களை தொலைப்பேசியில் அழைத்தோம். இதனைதொடர்ந்து ஃபிட்னெஸ் சேலஞ்ஜ் பற்றி நமது புதியதலைமுறை இனணயதளத்திலிருந்து சில தமிழக அரசியல் தலைவர்களிடம் கேள்வி கேட்ட போது, அவர்கள் சுவாரஸ்யமாக சிலருக்கு ஃபிட்னஸ் சேலஞ்ஜ் விடுத்தனர்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் அவர்களிடம் முதலில் ஃபிட்னஸ் சேலஞ் குறித்து பேசினோம். அவர் கூறுகையில், “நான் பள்ளியிலும், கல்லூரியிலும் நீச்சல் வீரர் (swimming champion) . ஃப்ரீ ஸ்டைல் (Freestyle), ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் (Breast stroke), பேக் ஸ்ட்ரோக் (Back stroke), பட்டர்ஃப்லை ஸ்ட்ரோக் (Butterfly stroke) ஆகிய அனைத்து பிரிவிலும் நான் சாம்பியன். அதனால் என்னைப் போல நண்பரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலினுக்கு ஃபிட்னஸ் சேலஞ்ஜை விடுக்கிறேன்" என சவால் விட்டார் ஜெயக்குமார்.

எப்போதும் பரபரப்பாக இருப்பார் தினகரன் அணியின் எம்எல்ஏ தமிழ்செல்வன். பாண்டிச்சேரி ரிசார்ட்டில் கூட தங்கதமிழ் செல்வன் பீச்சில் நடைப்பயிற்சி மேற்கொண்டே ஊடகங்களுக்கு பேட்டியளிப்பார். அதனால், அவரிடம் நீங்கள் யாருக்கு ஃபிட்னஸ் சேலஞ்சை கொடுப்பீர்கள் என கேட்டோம், கண் இமைக்கும் நேரம் கூட தாமதிக்காமல் அசுர வேகத்தில் பதில் தந்தார் அது "அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்குதான்" என கூறினார்.

மேலும் பேசுகையில் "நான் ஃபிட்னெஸ் ஆக இருக்கிற மாதிரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருக்க வேண்டும். நான் நடைப் பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டில் இருந்து, முன்பு இருந்ததை விட தற்போது 5 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். அதுபோல எடப்பாடி பழனிசாமியும் இருக்க வேண்டும்" என பொளேரென கூறினார்.

எதற்கெடுத்தாலும் முறுக்கிக் கொண்டு கருத்துச் சொல்லும் நாஞ்சில் சம்பத் இது குறித்து " எனக்கு இதன் மீது உடன்பாடில்லை என்றும் ஒரு நாட்டின் பிரதமர் இப்படி செய்வது அறுவறுக்கத்தகுந்த செயல்" என்றார். 

பார்ப்போம் ஸ்டாலினும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்பார்களா ?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com