சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் பேரரசி என்ற பெருமையை கொண்டவரும், ஆங்கிலேய படைகளை வீழ்த்தியவருமான வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி - முத்தாத்தாள் நாச்சியாரின் ஒரே மகளாக பிறந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். இளம் வயதிலேயே குதிரையேற்றம், வாள் வீச்சு, களரி உள்ளிட்ட போர்க்கலைகளை கற்று யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரத்தோடு திகழ்ந்தார். 1746ல் சிவகங்கை இளைய மன்னர் முத்து வடுகநாதரை மணந்து பட்டத்து ராணியானார் வேலு நாச்சியார். 1772ம் ஆண்டு காளையார்கோவிலில் ஆங்கில படைத்தளபதிகள் ஸ்மித், பாஞ்சோர், ஆகியோரால் கணவர் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆங்கிலேய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேலுநாச்சியார் சூளுரைத்தார்.
விருப்பாச்சி கோபால்நாயக்கரிடம் அடைக்கலம் அடைந்த அவர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக குறுநில மன்னர்களை ஒருங்கிணைத்தார். மேலும், ஹைதர் அலி அளித்த காலாட்படை, குதிரைப்படைகள் மூலம் 7 ஆண்டுகளுக்கு பின்பு சிவகங்கை சீமையை வெற்றிக்கரமாக மீட்ட வீரமங்கை வேலுநாச்சியார், 1780-ம் ஆண்டு ராணியாக முடிசூட்டப்பட்டார். 1780 முதல் 1789 வரை நல்லாட்சி புரிந்த அவர், 1796-ம் ஆண்டு தனது 66வது வயதில் மரணமடைந்தார்.