மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்து... ஏன்?

மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்து... ஏன்?
மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்து... ஏன்?
Published on

கொரோனா முதல் அலையின்போது இந்தியாவில் ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகப்படியாக விற்கப்பட்டிருப்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, மிதமான மற்றும் லேசான பாதிப்பை குணப்படுத்துவதற்கான ஆன்டிபயாடிக் மருந்துகள்தான் அதிகமாக விற்பனையாகியுள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது எந்தளவுக்கு ஆபத்தானது, ஏன் ஆபத்தானது என்பது பற்றி சற்றே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

அமெரிக்காவின் வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், ‘ஜூன் 2020 முதல் செப்டம்பர் 2020 க்குள் (கொரோனா முதல் அலையில்) இந்தியாவில் 216.4 மில்லியன் அதிக டோஸ் ஆன்டிபயாடிக்ஸ் விற்கப்பட்டுள்ளது.  38 மில்லியன் அசித்ரோமைசின் மருந்துகள் விற்கப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது. மாத்திரைகள் வாங்கி சென்றோரில் பலரும் வைரல் பாதிப்புகளுக்காகவே வாங்கிச் செல்கின்றனர் என்பது கூடுதல் தகவல். இதை அடிப்படையாக வைத்து, ‘இந்தியாவில் கொரோனா முதல் அலையின்போது, பலரும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை தவறான காரணத்துக்கு பயன்படுத்துகின்றனர்’ என ஆய்வாளர்கள் கூறுயுள்ளனர்.

ஆன்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியா பாதிப்பை மட்டுமே தடுக்கும் மருந்து என்பதுதான் மருத்துவ உண்மை. அதுவும் கோவிட் 19 போன்ற வைரல் பாதிப்புக்கு ஆன்டிபயாடிக் தீர்வாக எப்போதுமே இருக்காது என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியிருந்தும், வைரஸ் பெருந்தொற்று நேரத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளை மக்கள் அதிகமாக வாங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடிப்படை விழிப்புணர்வு இல்லாமையே, இதன் பின்னணியாக தெரிகிறது.

”இப்படி எடுத்துக்கொள்வோருக்கு, பின்வரும் நாள்களில் சிறிய காயம் – மிதமான நிமோனியா பாதிப்பு ஏற்பட்டால்கூட தீவிர சிகிச்சை தரவேண்டிய நிலை உருவாகும். அந்தளவுக்கு உடல் அடிப்படை மாத்திரைகளுக்கு ஒத்துழைக்காமல் போகலாம்” என ஆய்வாளர்களில் ஒருவரான தொற்றுநோயியல் நிபுணர் சுமந்த் கூறியுள்ளார்.

இந்தக் கூற்றுக்கு வலுசேர்க்கும் விதமாக, “அளவுக்கதிகமாக ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக்கொள்வது, குறிப்பிட்ட நபரை பலமற்றவராக ஆக்கும் அளவுக்கு ஆபத்தானது” என்கின்றார் சென்னையை சேர்ந்த பொதுநல மருத்துவர் அர்ஷத் அகில்.

இதுபற்றி அவர் விரிவாக கூறும்போது, “ஆன்டிபயாடிக் மருந்துகள் உடலிலுள்ள பாக்டீரியாவை அழிக்கும். அந்த பாக்டீரியா, நல்ல பாக்டீரியாவா – ஆபத்தான பாக்டீரியாவா என்பது மருந்துக்கு தெரியாது. உடல் ஆரோக்கியமாக ஒருவர், தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொண்டால், அதனால் உடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் யாவும் அழியும்.

உடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிவது மட்டுமன்றி, உடல் அம்மருந்துக்கு பழகிவிடும் அபாயமும் உள்ளது. அப்படி உடல் அந்த மருந்துக்கு பழகிவிட்டால், ஒருகட்டத்துக்கு மேல் நோய் பாதிப்பு எதற்காவது அம்மருந்தை எடுத்துக்கொள்ளும்போது உடல் மருந்துக்கு ஒத்துழைக்காமல் போகும். ‘மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளாமை’ என இதை சொல்வோம்.

மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளாமல் போகும்போது, அடிக்கடி உடல் உபாதைகள் வரும் அபாயம் வரும். குறிப்பாக வைட்டமின் குறைபாடு – ஊட்டச்சத்து குறைபாடு – வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளும் அன்றாட வாழ்வில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆன்டிபயாடிக் மருந்துகளின் ஆபத்தை உணர்ந்தே, உலக நாடுகள் அனைத்தும் இதற்கான நெறிமுறைகளை கட்டுக்கோப்பாக வைத்துள்ளது. இந்தியாவில்தான் நினைத்தவுடன் அருகிலிருக்கும் மருந்துக்கடைக்கு சென்று மருந்து வாங்கிக்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. இது நிச்சயம் தடுக்கப்பட வேண்டிய வழிமுறையே. மருத்துவ பரிந்துரையின்றி, பொதுமக்கள் யாரும் ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளவேகூடாது. அதுவும் இந்த பெருந்தொற்று நேரத்தில், இப்படியான வழிமுறைகள் தவறு.

பாராசிட்டமால் போன்ற வலி நிவாரணி - காய்ச்சல் மாத்திரைகளை, தவிர்க்க முடியாத சூழலில் சுயமாக எடுத்துக்கொள்ளலாம். அதுவும், அதிகபட்சம் இரண்டு நாள்களுக்குத்தான். அதற்குப் பிறகும் பிரச்னை தொடர்ந்தால், மருத்துவரை நாடுவது கட்டாயம். கொரோனா பரவல் அதிகமிருக்கும் இந்த நேரத்தில், சுயமருத்துவம் - விருப்பப்பட்ட மருந்து என இருப்பது தவறு” என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com