சர்வதேச வானொலி தினம்! “ஆகாசவானி செய்திகள் வாசிப்பது..”.. வானொலியும் நீங்கா நினைவுகளும்!!

சர்வதேச வானொலி தினம்! “ஆகாசவானி செய்திகள் வாசிப்பது..”.. வானொலியும் நீங்கா நினைவுகளும்!!
சர்வதேச வானொலி தினம்! “ஆகாசவானி செய்திகள் வாசிப்பது..”.. வானொலியும் நீங்கா நினைவுகளும்!!
Published on

ரேடியோ என்பது ஒரு வகையான தகவல் தொடர்பு தொழில்நுட்பமாகும், இது ஒலியை கடத்தப் பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கைக்கு அடக்கமாக உள்ள ஒரே ஒரு செல்போன் மூலம் சினிமா பாடல்கள் எல்லாவற்றையும் நம்மால் நொடிப்பொழுதில் பார்க்கவும், கேட்கவும் முடிகிறது. ஒரு பாடலை வெளியிட்ட அந்த நொடி முதலே கூட நாம் கேட்டுவிடுகிறோம். ஆனால், கால் நூற்றாண்டிற்கு முன்பு இந்த நிலை கிடையாது. ஒரு பாடலை கேட்க தவமாய் தவமிருக்க வேண்டியிருக்கும்.

ரேடியோ கேசட்டுகளை பணம் கொடுத்து வாங்கி வந்து டேப் ரெக்கார்டர்களில் போட்டு கேட்க வேண்டும். இந்த வசதி எல்லோருக்கும் அன்று இல்லை. அன்று பாடல்களை கேட்க மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது வானொலி என்றால் மிகையல்ல. ஒரு தலைமுறையே பாடல்களை வானொலியில் கேட்டுத்தான் வளர்ந்தது. இளையராஜாவின் பாடல்களும் அந்தக் காலத்தில் வானொலி மூலமே குக்கிராமங்களையும் சென்றடைந்தது.

அப்படியான வானொலிக்கான நாள் தான் இன்று. வானொலி என்பது சினிமா பாடல்களை தாண்டி அத்தனை தகவல்களுக்கான களஞ்சியமாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போர், சுதந்திர போராட்டம், எமெர்ஜென்ஸி காலங்களில் வானொலியின் பயன்பாடு அளப்பரியதாக இருந்தது. குறிப்பாக போர் குறித்த தகவல்களை கிராமங்களில் ஒன்றாக ஓர் இடத்தில் கூடி கேட்டுக் கொண்டிருந்த காலமும் இருந்தது.

டிஜிட்டல் யுகம் பெரிதாக பூம் ஆகும் வரையில் இந்திய சமூகத்தில் வானொலி என்பது நீக்கமற நிறைந்த ஒன்றே. இன்றளவும் FM-கள் மூலம் வானொலி உயிர்ப்புடன் தான் இருக்கிறது. வானொலி தினமான இன்று அது குறித்த சில தகவல்களை இங்கு நாம் அறிந்து கொள்வோம்.

வானொலியின் கண்டுபிடிப்பு

ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் மற்றும் ஆலிவர் லாட்ஜ் போன்ற விஞ்ஞானிகளால் 1880, 1890களில் மின்காந்த அலைகள் மீதான சோதனைகள் மூலம் வானொலியின் ஆரம்ப வளர்ச்சி கண்டறியப்பட்டது. இருப்பினும், 1800களின் பிற்பகுதியிலும் 1900களின் முற்பகுதியிலும் இத்தாலிய இயற்பியலாளரும் கண்டுபிடிப்பாளருமான குக்லீல்மோ மார்கோனியின் முயற்சியால், வயர்லெஸ் தகவல் தொடர்புக்கான முதல் நடைமுறை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஸ்பார்க்-கேப் டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் கோஹரர் ரிசீவர்களைப் பயன்படுத்திய மார்கோனியின் அமைப்பு, ரேடியோ அலைகளை நீண்ட தூரத்திற்கு அனுப்புவதை முதலில் நிரூபித்தது.

20ம் நூற்றாண்டும் வானொலியின் பயன்பாடும்

இன்று நாம் அறிந்தபடி வானொலி ஒலிபரப்பு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. 1920-ல் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் KDKA மூலம் முதல் வழக்கமான வானொலி ஒலிபரப்பு செய்யப்பட்டது. அது, வெற்றியை தந்ததால், 1920ல், அமெரிக்கா முழுவதும் வானொலி நிலையங்கள் தோன்றின. வானொலி விரைவில் செய்தி, பொழுதுபோக்கு மற்றும் விளம்பரம் ஆகியவற்றின் முக்கிய ஆதாரமாக மாறியது, மேலும் 1930களில், இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையின் மையப் பகுதியாக இருந்தது.

பல ஆண்டுகளாக, FM (அதிர்வெண் பண்பேற்றம்) மற்றும் AM (அலைவீச்சு மாடுலேஷன்) ஒளிபரப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம் மற்றும் செயற்கைக்கோள் ரேடியோ மற்றும் இணைய வானொலி போன்ற வானொலியின் புதிய வடிவங்களின் வளர்ச்சியுடன் ரேடியோ தொழில்நுட்பம் உருவாகி மேம்பட்டுள்ளது.

இன்று, வானொலி பிரபலமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு வடிவமாக உள்ளது, மேலும் சமூகத்தில் அதன் தாக்கம் உலகம் முழுவதும் தொடர்ந்து உணரப்படுகிறது.

இந்தியாவில் வானொலி!

இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரே நேரத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. முதல் வானொலி நிகழ்ச்சிகள் ‘ரேடியோ கிளப் ஆப் பாம்பே’ என்ற தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, நிர்வாகம் செய்து வந்தது.  ‘அகில இந்திய வானொலி’ என்ற பெயர் வைக்கப்பட்டது 1936 ஜூன் 8-ல்தான். அந்தப் பெயரை வைத்தவர் அகில இந்திய வானொலியின் முதல் இயக்குநரான லையனல் பீல்டன். 

1947 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் பெறும் போது 6 வானொலி நிலையங்கள், 18 டிரான்ஸ் மீட்டர்கள் இருந்தது. தற்போதும் அகில இந்திய வானொலி நிறுவனம் 20-க்கும் இந்திய மொழிகளில் அதன் உள்நாட்டு ஒலிபரப்பை நடத்தி வருகிறது. இவை மட்டுமல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் போன்ற அயல்நாட்டு மொழிகளிலும், 16 தேசிய மொழிகளிலும் சர்வதேச ஒலிபரப்பை செய்து வருகிறது.

வானொலியின் இன்றைய நிலை!

வானொலி தொழில்நுட்பம் பல ஆண்டுகளாக படிப்படியாக வளர்ந்தது, பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்கள் பல சோதனைகளை நடத்தி, ரேடியோ அலைக்கற்றை கொண்டு ஒலியை கடத்துவதில் முனைப்பை  மேற்கொண்டனர். இருப்பினும், இத்தாலிய இயற்பியலாளரும் கண்டுபிடிப்பாளருமான குக்லீல்மோ மார்கோனி வயர்லெஸ் தகவல் தொடர்புக்கான முதல் நடைமுறை அமைப்பை உருவாக்கிய பெருமையைப் பெற்றார்.

நார்வே தனது முழு FM வானொலி வலையமைப்பையும் முடக்கி அதற்கு பதிலாக டிஜிட்டல் வானொலியை அறிமுகப்படுத்தி உலகின் முதல் நாடாக மாறியுள்ளது. இன்று, ரேடியோ அலைகள் பல்வேறு, துறைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பட்டாலும், இரவு நேரங்களில் ரேடியோவின் மூலம் பாடல்களை கேட்டுக்கொண்டு தூங்குவது பல பேருக்கு ஒரு பிடித்தமான பொழுதுபோக்காக அமைந்திருக்கிறது. 

இன்றைய இளம் தலைமுறையினருக்கு நிச்சயம் வானொலி பற்றிய புரிதல் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. இதற்கு முந்தைய தலைமுறைக்கு வானொலி என்பது ஓர் உணர்வுபூர்வமான விஷயம்தான். “ஆகாசவானி செய்திகள் வாசிப்பது………..” இந்த வார்த்தை இன்றளவும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள். தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய எந்த விஷயங்களையும் மனிதன் நிச்சயம் மறக்க மாட்டான். அந்த வரிசையில் வானொலியும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

உங்கள் வாழ்வில் வானொலி பயன்பாடு குறித்து கமெண்ட்டில் பதிவிடுங்கள் நேயர்களே!

- ஜெயஸ்ரீ அனந்த்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com