இந்திய ’ரன் மெஷின்’ விராத் கோலிக்கு உலகம் முழுவதும் இருக்கிறார்கள் ஏராளமான ரசிகர்கள். மொழி, நாடு தாண்டி பலரது இதயத்தில் அவருக்கும் இருக்கிறது, அன்பான இடம். தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு நாள் மற்றும் டி20 தொடரை கைப்பற்றிச் சாதனை படைத்த பிறகு அவர் மீது கண்மண் தெரியாமல் காதல் வந்திருக்கிறது ரசிகர்களுக்கு.
அந்தக் காதல் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடமும் இருப்பதில் ஆச்சரியமேதும் இல்லைதான். அதை எங்காவது வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் அவர்களும்.
தீவிரவாத தாக்குதல்களை அடுத்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம். அந்த நாட்டுக்குச் சென்று விளையாடுவதற்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னதான் முட்டி மோதினாலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் புகார் பட்டியல் வாசித்தாலும் கண்டுகொள்ளவில்லை பிசிசிஐ. இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றால் பிசினஸ் ஏரியாவிலும், கோடிகளாகக் கொட்டும் என்பதால் பிடிவாதம் பிடித்துவருகிறது பாக். மறுத்துவருகிறது பணக்கார பிசிசிஐ.
இது ஒருபுறம் இருக்க, எப்போதும் அனல் கக்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டியை காண ஏங்கித் தவிக்கிறார்கள் ரசிகர்களும்! களத்தில் ரசிகர்கள் உர்ரென முறைப்பதும், கோபத்தில் வெடிப்பதும் இந்தப் போட்டியின், அதிரி புதிரி சிறப்பு!
இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்களை ஓரங்கட்டிவிட்டார்கள். கடுப்பான பாகிஸ்தான், ’நாங்களும் நடத்தறோம்’ என ஐபிஎல் மாதிரியே பிஎஸ்எல் போட்டியை நடத்தி வருகிறது, கடந்த மூன்று ஆண்டுகளாக. இதில் இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை. இதனால் இந்திய வீரர்களின் கிரிக்கெட்டை ரசிக்கும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றம்!
இந்த ஆண்டுக்கான பிஎஸ்எல் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. துபாய், சார்ஜா என எங்கு போட்டி வைத்தாலும் கூட்டம் மட்டும் வரவே இல்லை. ரசிகர்களை இழுக்க, பாகிஸ்தானின் முன்னணி நடிகர், நடிகைகள், அமெரிக்க பாப் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் என பிரபலங்களை அழைத்து வந்தாலும் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. வெறிச்சோடி கிடக்கும் ஸ்டேடியத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் கிளம்பி வருகின்றன இணையத்தில்.
இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள், அட்டையை தூக்கிக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இஸ்லாமபாத், குவெட்டா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ரசிகர்கள் சிலர், ‘பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் உங்களை பார்க்க வேண்டும் விராத் கோலி’ என்று எழுதப்பட்ட ஏக்க கார்டை தூக்கிப் பிடிக்க, அதையே அடிக்கடி காண்பிடித்துக் கொண்டிருந்தார்கள் டிவியில்!
யார் வந்து தீர்ப்பது ஏக்கங்களை?