கேரளாவின் பத்தனம்திட்டா ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நகரம் என்றே சொல்லாம். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என பச்சைப் போர்வை போர்த்தியது போல் ஊரே ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இந்நகரம் உங்கள் கண்களுக்கு மட்டும் விருந்தளிக்கவில்லை, இந்தியாவிலேயே குறைவான மாசு கொண்ட நகரப் பட்டியலில் இரண்டாம் இடத்தையும் பிடித்து பலரையும் வியக்கவும் வைத்துள்ளது. இவ்வூரை இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரி என்று கூறலாம். பத்தனம்திட்டாவை சுற்றியுள்ள பல பகுதிகள் அழகு நிறைந்தவைகளாக இருந்தாலும், கவியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
கவி. பெயருக்கேற்ப, இயற்கை எழுதிய கவிதை போன்று அழகுற காட்சியளிக்கிறது இந்த கேரளத்து மலைக் கிராமம். சுருங்கச் சொன்னால், ஒரு சொர்க்கம். கேரளா என்றதுமே மூணார், கொச்சி, ஆலப்புழா என வழக்கமான இடங்களை தவிர்த்து புதுமையான இடம் தேடுவோருக்கு குளுமையான தேர்வு, கவி. கேரளத்தில் இன்னும் அதிகம் வெளியுலகுக்கு தெரியாத சொர்க்கபுரி.
மலை ஏறும்போது முழு காட்டின் அழகையும் பறவைக் கோணத்தில் பார்க்க ஆசைப்பட்டால், அதற்கு சரியான தேர்வு நகரப் பேருந்தாக மட்டுமே இருக்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். கேரள மாநில அரசு போக்குவரத்தின் பேருந்து நிலையத்திற்குச் சென்று அங்கு அதிகாலையில் கவி வழியாக குமுளிக்குச் செல்லும் பேருந்தில் ஏற வேண்டும். காலை 6.30 மணிக்கே எழுந்து செல்ல வேண்டுமா என உங்களுக்கு தோன்றினால், மதியம் 12.30-க்கு ஒரு பேருந்து இருக்கிறது.
தங்கள் சொந்த வாகனங்களில் காட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும். அதோடு அனுமதிச் சீட்டு வாங்க காலை 8.30-க்கு முன்பாகவே அங்கமூழி செக் போஸ்டிற்கு செல்ல வேண்டும்.
மழைக்காடுகள் வழியாக 90 கிலோமீட்டர் தூரம் செல்லும் பயணம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் அங்கமூழியிலிருந்து தான் தொடங்குகிறது. அங்கமூழியை அடைய வேண்டுமென்றால் பத்தனம்திட்டாவிலிருந்து சீதாதோடு வழியாக செல்ல வேண்டும். இதுவொரு அழகிய கிராமம். அருகிலேயே கக்காட்டாறு ஆறு ஓடுகிறது. இங்கு கிடைக்கும் பாரம்பரிய உணவுகளை நீங்கள் கண்டிப்பாக சுவைத்துப் பார்க்க வேண்டும். இந்த கிராமத்திலிருந்து சிறிது தொலைவில் தான் வனத்துறை செக்போஸ்ட் உள்ளது. காட்டிற்குள் செல்ல ஒரு நாளைக்கு 30 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆகையால் கொஞ்சம் சீக்கிரமாக செல்வது உங்களுக்கு நல்லது.
காட்டிற்குள் நுழைந்ததும் சத்தமாக பேசுவதையோ, உங்கள் மொபைலில் பாட்டு போடுவதையோ உடனே நிறுத்திவிடுங்கள். உங்கள் மனமும் கண்களும் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும் உங்கள் எதிரே காட்டு மாடோ அல்லது யானையோ வரக்கூடும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் சிறுத்தை மற்றும் புலியைக் கூட பார்க்கலாம். மரத்தின் கிளைகளில் மலை அணில்களையோ, சிங்கவால் குரங்கையோ பார்க்கலாம். பறந்தபடியே ஓசை எழுப்பும் இருவாட்சி பறவையின் சத்தம் காட்டையே கிழித்து எங்கும் எதிரொலிக்கும்.
அங்கமூழியை கடந்ததும் கொச்சண்டி, வல்லக்கடவு, கவி, வண்டிபெரியார் ஆகிய செக் போஸ்ட்களில் வாகனச் சோதனை நடைபெறும். நீங்கள் கொண்டு போகும் பிளாஸ்டிக் பாட்டிலின் எண்ணிக்கையை கூட வனத்துறை அலுவலர்கள் கணக்கெடுத்துக் கொள்வார்கள். காட்டிற்குள் செல்கையில் வேறு எந்த தீங்கான பொருட்களும் எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதிப்பதில்லை.
நீங்கள் காட்டிற்குள் நீண்ட தூரம் செல்ல செல்ல, எப்போதாவது உங்களை கடந்து வாகனங்கள் செல்லக் கூடும். பெரும்பாலும் இது ஒருவழிப் பாதையாகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கேரள அரசுப் பேருந்துகளும் வனத்துறை அல்லது மின்சாரத் துறை ஜீப்புகள் மட்டும் இதை இருவழிப் பாதையாக பயன்படுத்துகின்றன. அங்கமூழியிலிருந்து கவிக்குச் செல்லும் தனியார் வாகனங்கள் இப்பாதையில் திரும்பி வருவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அவர்கள் காட்டிலிருந்து வெளியே செல்வதற்கு குமுளி பாதையையே பயன்படுத்தியாக வேண்டும்.
வரிசையாக வரும் அணைகள்:
இந்தப் பாதையில் செல்லும் போதே வரிசையாக ஐந்து அணைகள் வரும். இந்த ஐந்து அணைகளும் சபரிகிரி நீர்மின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
முதல் செக் போஸ்டிலிருந்து சில கிலோமீட்டர் தூரம் சென்றதும் மூழியார் அணையை கண்டு ரசிக்கலாம். மழைக்காலத்தில் இந்த அணை நிரம்பி வழியும். இப்போது தண்ணீர் குறைந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
மூழியாறின் மேலே சென்றதும், மூன்று பெரிய மதகுகள் உங்கள் கண்ணில் படும். இப்பகுதியில் மொபைல் நெட்வொர்க் மோசமாக இருந்தாலும், உங்கள் கை தானாகவே செல்போனை எடுத்து போட்டோ எடுக்க ஆரம்பித்துவிடும். அப்புறம் இந்த இடத்தை விட்டு நீங்கள் நகரமாட்டீர்கள்.
அடுத்ததாக நாம் செல்ல இருப்பது கேரள அரசு மின்சார துறை அலுவலகத்தில் அமைந்திருக்கும் பிரபலமான கேண்டீனுக்கு. இங்கு ஒப்பந்த பணியாளராக இருக்கும் காசியை நீங்கள் கட்டாயம் சந்திக்க வேண்டும். நம்ம தென்காசி தான் இவருக்குச் சொந்த ஊர். தினசரி காக்கி அணையின் நீர்மட்ட அளவை பதிவு செய்து, அதை மூழியார் பவர் ஹவுஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிப்பதே காசியின் தினசரி வேலை. சுமார் 40 வருடங்களாக இந்த வேலையில் இருக்கிறார் காசி. முன்பெல்லாம் அணைக்குச் செல்லக்கூடிய 15 கிலோமீட்டர் பாதையை கடக்க சைக்கிளில் செல்வார். பல நாட்கள் இவர் பாதையை காட்டு யானைகள், கரடிகள், சிறுத்தைகள் கடந்து செல்வதை பார்த்திருக்கிறார். ஆனால் இதுவரை ஒரு காட்டு விலங்குகள் கூட இவரை எதுவும் செய்ததில்லை. காட்டில் ஒருவருக்கு ஒருவர் ஒத்திசைவோடு வாழ்வதற்கு இதை சிறந்த உதாரணமாக கொள்ளலாம். இப்போது போக்குவரத்து வசதிகள் பெருகியதும், அணைப் பகுதிக்கு பேருந்தில் செல்கிறார் காசி.
மூழியார் அணைக்குப் பிறகு வருவது கக்கி அணை. கேரளாவின் நீளமான அணைகளில் ஒன்று இது. மழைக்காலங்களில் இந்த அணைகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும். சில வருடங்களுக்கு முன்பு கூட, இந்த அணையிலிருந்து வெளியேறிய வெள்ள நீரினால் ரான்னி நகரமே மூழ்கியதை பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.
வல்லக்கடவு செக் போஸ்டிற்குப் பிறகு யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வதை காணலாம். காட்டுப் பாதை, மலைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கும் பனிப்படலம் என உங்களை கிறங்கடிக்க கூடிய இடங்கள் இங்கு நிறைய இருக்கின்றன. அழகான பூந்தோட்டம், குளம் என காவி ஈகோ டூரிஸம் பாயிண்ட்டின் அழகை வர்ணிக்க உங்களுக்கு வார்த்தையே வராது. இன்ஸ்டாகிராமில் போட்டா போட்டு உங்கள் நண்பர்களை பொறாமைப்பட வைக்க வேண்டுமா? அதற்கு இதுதான் சிறந்த இடம்.
இல்லை, எனக்கு இதெல்லாம் போதாது. இன்னும் காட்டை முழுதாக சுற்றிப் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் அங்கமூழி மற்றும் கொச்சு பம்பாவில் இருக்கும் கேரள அரசுக்கு சொந்தமான பங்களாவில் தங்கலாம். ஆனால் இங்கு தங்க வேண்டுமென்றால் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். கவியில் உள்ள KFDC காட்டேஜை ஆன்லைன் மூலமாகவும் புக் செய்யலாம். ஆனால் இது கொஞ்சம் உங்கள் பர்சை பதம் பார்க்கும். உணவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மூழியார், கொச்சு பம்பா மற்றும் கவியில் சிறிய கேண்டீன்கள் பல உள்ளன.