கொரோனா பலிகொண்ட தமிழக அரசியல் பிரபலங்கள்

கொரோனா பலிகொண்ட தமிழக அரசியல் பிரபலங்கள்
கொரோனா  பலிகொண்ட  தமிழக  அரசியல் பிரபலங்கள்
Published on

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜெ.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்-திமுக:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன்தான். தனது பிறந்த நாளான ஜூன் 10-ஆம் தேதியிலேயே அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை உருவாக்கியது. வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் என்பதால் தனது கட்சியை தாண்டி மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்பட்ட நபர் இவர். உயிரிழந்தபோது இவர் சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.

2001ல் தியாகராய நகர் தொகுதியிலும், 2011 மற்றும் 2016 தேர்தல்களில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இவர். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு நேரத்திலும் கூட களப்பணியாற்றியவர். நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்க சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார் இவர்.

ஹெச்.வசந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர்-காங்கிரஸ்:

கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் நாடறிந்த அரசியல் பிரபலம். இவரும் கூட கொரோனா காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கிவந்தவர். இவர் ஏற்கனவே 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவராகவும் இருந்தார். அரசியல் வாழ்வினைப்போலவே தொழில் வாழ்க்கையிலும் உச்சம் தொட்டவர் வசந்தகுமார், இவர் தொடங்கிய வசந்த் அண்ட் கோ நிறுவனம் இன்று தமிழகத்தின் முன்னணி வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனையகமாக உள்ளது.

பி.வெற்றிவேல்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்-அமமுக:

அதிரடி பேட்டிகள் மூலமாக அனைவருக்கும் அறிமுகமான நபர் வெற்றிவேல். இவர் தற்போது அமமுகவின் பொருளாளராகவும் இருந்தார். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் பின்னர் அதிமுகவில் இணைந்து 2011 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர்  தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2015 ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டபின்னர், தனது  சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.கே.நகரில் ஜெயலலிதா 88 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற பாடுபட்டவர் இவர். இதன் காரணமாக ஜெயலலிதா, சசிகலா, தினகரனின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் வெற்றிவேல். 2016 ஆண்டு பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தினகரனை ஆதரித்த காரணத்தால் 2017 ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர் கடைசியாக செப்டம்பர் 17 ஆம் தேதி நடந்த பெரியார் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார், கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துவந்தவர் வெற்றிவேல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com