புதிய வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படி புதிய வனப் பாதுகாப்பு சட்டம் என்ன சொல்கிறது. பார்க்கலாம்.
மத்திய அரசின் வனப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. 'மரங்கள் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களையும் சேர்த்ததுதான் காடு'. வளர்ச்சி என்ற பெயரில் வனங்களை அழிப்பதற்காகவே சட்டத் திருத்ததை அரசு கொண்டு வந்துள்ளதோ என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.
இந்தியாவில் 1980ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப் பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் அடங்கிய ஆவணத்தை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதிலுள்ள ஆட்சேபணைகள், கருத்துக்களை தெரிவிக்க 15 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் முன்மொழிந்துள்ள திருத்தம், வன நிலங்களை எவ்வித கேள்வியும் இன்றி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு வகுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
வன நிலங்கள் பற்றிய வரையறையை உருவாக்கும் உரிமையை மாநில அரசுகளிடம் பறித்து, வனங்கள் தொடர்பான மறு வரையறை செய்யப்பட்ட அறிவிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. இதன் மூலம், வன நிலங்களை, வனமல்லாதவை என்று மாற்றி சொற்ப விலையில், எளிதாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வர அரசு முயல்கிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தம், புதிய சாலைகளையும், ரயில்வே பாதைகளையும் காப்புக் காடுகளில் அமைக்க வழிவகுக்கும், இதன் காரணமாக, வனப்பகுதிகள் சிறு சிறு துண்டுகளாக மாறும், காட்டுயிர்கள் வாழ்விடங்கள் சுருங்கும், மனித - விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரிக்கும் அன்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
மேலும், 2006 ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தை கடுமையாக பாதிப்பதோடு, பழங்குடி மக்கள், வனவாழ் ஆதிவாசி மக்கள் ஆகியோரை வனப்பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றும் என்றும் கூறுகின்றனர். 2021 தொடங்கி அடுத்த பத்தாண்டுகளை காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய அத்தனை மாற்றங்களையும் செய்வதற்கான ஆண்டுகளாக ஐ.நா அறிவித்துள்ளது.
இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், 1980 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப் பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கு முன்மொழிவுகள் அடங்கிய ஆவணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக சில அரசியல் கட்சிகள் சாடியுள்ளன. பழங்குடி மக்கள், வனவாழ் ஆதிவாசி மக்களுக்கு எதிரான, காட்டுயிர்களுக்கு எதிரான, காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
சட்டத்திருத்ததால் ஏற்படும் அபாயங்கள்:
இப்படியான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால் புதிய வனப்பாதுகாப்புச் சட்ட திருத்தம் எதிர்க்கப்படுகிறது. இதுதொடர்பாக புதிய தலைமுறையின் நியூஸ் 360 டிகிரி நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் கீழே உள்ள வீடியோவில்..