PT Web Explainer: நாம் 'டிஜிட்டல் பதுக்கல்'காரர்களா? - இணைய யுகத்தில் இப்படி ஒரு சிக்கல்!

PT Web Explainer: நாம் 'டிஜிட்டல் பதுக்கல்'காரர்களா? - இணைய யுகத்தில் இப்படி ஒரு சிக்கல்!
PT Web Explainer: நாம் 'டிஜிட்டல் பதுக்கல்'காரர்களா? - இணைய யுகத்தில் இப்படி ஒரு சிக்கல்!
Published on

இந்தக் கட்டுரையை ஒரு தனிப்பட்ட குறிப்புடன்தான் துவங்க வேண்டும். அதற்கு முன் ஒரு கேள்வி.

"நீங்கள் பதுக்கல்காரரா?"

இந்தக் கேள்வி உங்களை ஆவேசம் அல்லது அதிருப்தி கொள்ள வைக்கலாம். 'கட்டுரையை படிக்க வந்ததற்கு தண்டனையா?' என நினைக்கலாம்.

ஆனால், 'நீங்கள் டிஜிட்டல் பதுக்கலில் ஈடுபடுகிறீர்கள்' என்பதை மட்டும் அல்ல, 'அதை அறியாமல் இருக்கிறீர்கள் தெரியுமா?' என்று அடுத்தக் கேள்வியை கேட்டால், இன்னும் கூடுதலாக கோபம் கொள்ளலாம்.

ஆனால், நீங்களும், மற்றவர்களும், இன்னும் பலரும், ஏன்... இந்தக் கட்டுரையாளரான நானும் டிஜிட்டல் பதுக்கலில் ஈடுபடவே செய்கிறோம் என்பதே உண்மை.

வாருங்கள், நாம் அப்படி என்ன டிஜிட்டல் பதுக்கல் செய்கிறோம் என்பதை தெரிந்துகொள்வோம்.

இந்த இடத்தில் 'பதுக்கல்' பற்றி சில வார்த்தைகள். பொதுவாக, 'பதுக்கல்' என்றால், கொள்ளை லாபம் அடிப்பதற்காக கள்ளச்சந்தையில் பொருள்களை பதுக்குதல்தான் நினைவுக்கு வரும். ஆனால், சாமானியர்களும் கூட, இப்படி பதுக்கலில் ஈடுபவது உண்டு. ஆங்கிலத்தில் இவர்களை 'ஹோர்டர்ஸ்' (Hoarders) என்கின்றனர்.

தேவையில்லாத பொருட்களைக் கூட தூக்கி எறிய மனமில்லாமல், தங்கள் வீட்டில் சேமித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களைத்தான் இப்படிச் சொல்கின்றனர். பலரிடனும் இருக்கும் பழக்கம் என்றாலும், இது சிலரிடம் மிகையாகவும் அமைந்துவிடுவதுதான் பிரச்னை. இந்த மனநிலையை ஒருவிதமான உளவியல் கோளாறு என்கின்றனர்.

'பதுக்கல் கோளாறு' என்றால் என்ன? எனும் தலைப்பில் இதுபற்றி 'சைக்யாட்ரி' இணையதளம் விவரிக்கிறது. பதுக்கல் கோளாறின் அறிகுறிகளும், காரணங்களும் என 'மயோகிளினிக்' தளத்தின் கட்டுரை விவரிக்கிறது. இவ்வளவு ஏன், பதுக்கல்காரர்களின் பிரச்னையை அருமையாக விவரிக்கும், அமெரிக்க தொலைக்காட்சி தொடரும், நெட்ஃபிளிக்ஸ் சிரீஸும் கூட இருக்கின்றன.

இவற்றை எல்லாம் படிக்கும்போதும், பார்க்கும்போதும், இப்படி கூடவா மனிதர்கள் இருக்கின்றனர் என நினைக்கத் தோன்றலாம். ஆனால், இணைய யுகத்தில் பலரும் இதேபோல டிஜிட்டல் பதுக்கலில் ஈடுபடுகின்றனர் என்பதை ஆய்வுகள் உணர்த்துகின்றன என்பதை தெரிந்துகொள்ளும்போது கொஞ்சம் கவலையாகவே இருக்கிறது.

ஸ்மார்ட்போனுக்கும், சமூக ஊடகங்களுக்கும்தான் அடிமையாகி இருப்பதாக நினைத்தால், பலரும் அறியாத புது பிரச்சனையாக 'டிஜிட்டல் ஹோர்டிங்' உருவாகி நிற்கிறது.

டிஜிட்டல் பதுக்கல் என்றால் என்ன?

முன்னுரையை எல்லாம் கடந்த வந்த பிறகும் கூட, இந்தப் பிரச்னை பற்றி விளக்காமல் இருக்க முடியாது. 'பயனாளிகளுக்கு இனியும் தேவைப்படாத டிஜிட்டல் கோப்புகளை டெலிட் செய்யாமல் சேமித்து வைத்திருப்பதை' டிஜிட்டல் பதுக்கல் என்கின்றனர். இதற்கு 'மின்னணு பதுக்கல்', 'டேட்டா பதுக்கல்', 'சைபர் பதுக்கல்' என்றெல்லாம் பெயர் இருப்பதை விக்கிபீடியா அறிமுகம் உணர்த்துகிறது.

'டிஜிட்டல் பதுக்கல்' பற்றி மேற்கொண்டு பார்ப்பதற்கு முன், 'டிஜிட்டல் பதுக்கல்' என்பது உங்கள் மனநலத்தை பாதிக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிப்பதையும் மனதில்கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால், டிஜிட்டல் பதுக்கல் எப்படி மன நலத்தை பாதிக்கிறது எனும் 'ஹெல்த்லைன்' இணையதள கட்டுரையையும், டிஜிட்டல் பதுக்கலில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை பற்றி விவரிக்கும் 'வாக்ஸ்' இணையதள கட்டுரையையும் படித்துப்பார்க்கவும்.

ஆனால், இதுபற்றி அதிகம் அறியாமல் இருப்பதற்காக வருந்த வேண்டாம். ஏனெனில், 'டிஜிட்டல் பதுக்கல்' எனும் பொருள் தரும் Digital Hoarding ஆங்கில வார்த்தை 2015-ம் ஆண்டுதான் முதன்முதலில் ஓர் ஆய்வுக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டது. நெதர்லாந்தில் உள்ள டிஜிட்டல் பதுக்கல்காரர் ஒருவரை மையமாக கொண்டு எழுதப்பட்ட கட்டுரை அது.

47 வயதான அந்த மனிதர் ஒவ்வொரு நாளும் தவறாமல் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் புகைப்படங்களை எடுத்து, அவற்றை கையாள்வதில் மணிக்கணக்காக நேரத்தை செலவிட்டிருக்கிறார். அந்தப் படங்களை அவர் பார்த்ததும் இல்லை, பயன்படுத்தியதும் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் தேவைப்படலாம் என்பதால், கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கிறார்.

இப்படி டிஜிட்டல் படங்களை சேமித்து வைப்பதை கட்டுப்படுத்த முடியாமலும், அதை நிர்வகிக்க முடியாமலும் போன நிலையில்தான் அவர் மருத்துவரிடம் பரிந்துரைக்கப்பட்டு, ஆய்வுக்கும் உள்ளாகியிருக்கிறார்.

இந்த அளவுக்கு இல்லை என்றாலும், நம்மில் பலரும் பலவிதங்களில் இத்தகைய டிஜிட்டல் சேமிப்பில் ஈடுபடுகிறோம் என்பதை விஷயம். படிக்கப்படாத இமெயில்கள், டெலிட் செய்யப்படாத கோப்புகள், பிரவுசரில் முடிவில்லாமல் சேர்ந்திருக்கும் புதிய 'டேப்'கள் – இவை எல்லாமே டிஜிட்டல் பதுக்கல்தான். அதாவது மிகை டிஜிட்டல் சேமிப்புதான் என்கின்றனர்.

இப்போது உங்கள் டெஸ்க்டாப் அல்லது ஸ்மார்ட்போனை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். டெஸ்க்டாப்பில் ஐகான்களாக குவிந்து கிடக்கின்றனவா? ஸ்மார்ட்போனில் எப்போதோ எடுத்த எண்ணற்ற படங்களும், யார் யாரோ அனுப்பிய செய்திகளும் குவிந்து கிடக்கின்றனவா? இவை எல்லாமே உங்களுக்கு தேவையானதுதானா? எனில், இவற்றை ஏன் டெலிட் செய்யாமல் வைத்திருக்கிறீர்கள்?

இன்பாக்ஸில் படிக்காத இ-மெயில்கள் குவிய அனுமதிப்பதும், படித்துவிட்ட மெயில்களை டெலிட் செய்யாமல் அப்படியே விட்டு வைத்திருப்பதும் கூட, டிஜிட்டல் பதுக்கலின் ஓர் அம்சம்தான். இணைய முகவரிகளை நூற்றுக்கணக்கில் புக்மார்க் செய்துவிட்டு, அவற்றை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பதும்தான்.

"எதற்காக சேமிக்கிறோம் என்பது தெரியாத அளவுக்கு, டிஜிட்டல் கோப்புகளை சேகரித்து வைப்பதும், இதனால் ஒழுங்கின்மை மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதும் டிஜிட்டல் பதுக்கலின் அடையாளம்" என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நான்கு வகை டிஜிட்டல் பதுக்கல்காரர்கள்:

டிஜிட்டல் பதுக்கலை வரையறை செய்திருப்பது மட்டும் அல்ல, டிஜிட்டல் பதுக்கல் செய்பவர்களை நான்கு விதமாக வகைப்படுத்தியும் இருக்கின்றனர். சேகரிப்பாளர்கள் (Collectors), தற்செயல் பதுக்கல்காரர்கள் (Accidental hoarder), கட்டளைப்படி பதுக்குபவர்கள் (hoarder by instruction) மற்றும் கவலையால் பதுக்குபவர்கள் (Anxious Hoarders ) என நான்கு விதமான டிஜிட்டல் பதுக்கல்காரகள் இருப்பதாக ஆய்வாளர்கள் பகுத்துள்ளனர்.

இவர்களில் முதல் வகையான சேகரிப்பாளர்கள் பரவாயில்லை. அவர்கள் சேமிப்பில் ஓர் ஒழுங்கு இருப்பதோடு, அதை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கின்றனர். ஆனால், இரண்டாம் ரகத்தினர் ஒழுங்கின்மையால் அவதிப்படுகின்றனர். மூன்றாம் ரகத்தினர் மீது பழி சொல்ல முடியாது. அவர்கள் பாவம். அலுவகத்தில் சொன்னார்களே என்று, எல்லா டிஜிட்டல் கோப்புகளையும் அழிக்காமல் வைத்திருக்கின்றனர். நான்காம் ரகத்தினர் பரிதாபத்துக்குறியவர்கள். அவர்கள், டிஜிட்டல் கோப்புகள் மீதான உணர்ச்சிமயமான பிடிப்பால், தேவையில்லாத கோப்புகளைக் கூட நீக்க மனமில்லாமல் அவை தங்கள் டெக்ஸ்டாப்பை அடைத்துக்கொள்ள செய்கின்றனர்.

'டிஜிட்டல் பதுக்கல்' அல்லது 'சேமிப்பு' வெளிப்படையாக தெரியாவிட்டாலும், நிச்சயம் ஒருவரின் பணி வாழ்க்கையை பாதிக்கவே செய்கிறது. இது செயல்திறனை மட்டும் அல்ல, மனநலத்தையும் பாதிக்கலாம்.

எல்லாம் சரி, ஏன் இப்படி 'டிஜிட்டல் பதுக்கல்' அல்லது எல்லையில்லா டிஜிட்டல் சேமிப்பில் ஈடுபட வேண்டும்?

இதற்கு பலவிதமான காரணங்களை கூறுகின்றனர். இ-மெயில்களை எடுத்துக்கொண்டால், பின்னாளில் தேவைப்பட்டால் என்ன செய்வது எனும் உணர்வோடு, படித்த மெயில்களை கூட டெலிட் செய்யாமல் வைத்திருப்பது பலரும் வழக்கமாக இருக்கிறது.

தொழில்நுட்ப முன்னேற்றமும் இதற்கு இன்னொரு காரணம் என்கின்றனர். யாஹு மெயில் காலம் நினைவில் இருக்கிறது. புதிய மெயில் வந்தால், பழைய மெயிலை நீக்கினால்தான் புதிய மெயிலை நீக்க முடியும் எனும் எச்சரிக்கை அடிக்கடி வரும் அல்லவா? ஆனால், ஜிமெயில் வருகைக்கு பின் எக்கச்சக்கமாக இமெயில் இடம் அளிக்கப்படுவதால் ஆயிரக்கணக்கில் மெயில்களை சேமித்து வைக்கிறோம். அவற்றின் தேவை பற்றி யோசிப்பதில்லை.

அதேபோல, குறைந்த விலை ஹார்டு டிரைவ் மற்றும் கிளவுட் சேவை காரணமாக டிஜிட்டல் கோப்புகளையும், டிஜிட்டல் படங்களையும் மெகாபைட், மெகாபைட்டாக சேமித்துக் கொள்கிறோம்.

டெஸ்க்டாப்பின் செயல்திறன் காரணமாக ஐகான்களாக உருவாக்கித் தள்ளுகிறோம். படங்கள், பாடல் கோப்புகள் என குவித்து வைக்கிறோம்.

இத்தகைய டிஜிட்டல் மிகை சேமிப்பில் உள்ள பிரச்னை ஒழுங்கின்மையும், மன அழுத்தமும் மட்டும் அல்ல: இப்படி தகவல்களை குவித்து வைப்பது சைபர் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் விஷயம் என எச்சரிக்கின்றனர். அதுமட்டும் அல்ல, சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்கின்றனர். ஏனெனில், நாம் சேமிக்கும் கோப்புகள் கிளவுட் சேவையில் சேமிக்கப்பட வேண்டும் என்பதால், அதற்கான மின்சார செலவும், இன்னும் பிற செலவுகளும் சுற்றுச்சூழல் நோக்கில் தீங்கானவை.

அடடா... நம்மிடம் இத்தனை பிரச்னை இருக்கிறதா எனும் நினைப்பு இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். எனில், டிஜிட்டல் பதுக்கலில் இருந்து எப்படி விடுபடுவது என தெரிந்துகொள்ளுங்கள். வீட்டை பெருக்கி சுத்தம் செய்வதுபோல, உங்கள் கம்ப்யூட்டரையும், போனையும் டிஜிட்டல் தூய்மையாக்கத்திற்கு உட்படுத்துங்கள் என்கின்றனர். அதாவது, டெஸ்க்டாப்பில் குறைவான கோப்புகளை வைத்திருங்கள். பயன்படுத்திய பின் நீக்கிவிடுங்கள் அல்லது பின்னர் தேவைப்படும் எனில், தனியே ஒரு ஃபோல்டரில் போட்டு வையுங்கள். இந்த ஃபோல்டர்களில் உள்ள கோப்புகளை அடிக்கடு ஆய்வு செய்து, அவற்றின் பயன்பாடு அடிப்படையில் நீக்கி சுத்தமாக்குங்கள்.

படிக்காத பழைய மெயில்களை தயக்கமின்றி நீக்குங்கள். புதிய மெயில்கள் வந்தால், உடனே பைசல் செய்யுங்கள். முக்கிய மெயில்கள் என தனியே ஆர்க்கேவ் செய்யுங்கள்.

டிஜிட்டல் புகைப்படங்கள் எனில், தேவையில்லாத படங்களை நீக்கி, நல்ல படங்களை சேமித்து வையுங்கள். எல்லாம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது!

பி.கு: துவக்கத்தில் குறிப்பிட்ட தனிப்பட்ட குறிப்பு, நானும் ஒரு டிஜிட்டல் பதுக்கலில் ஈடுபடுவதை உணர்ந்தது தொடர்பானது. பழைய கோப்புகள், படங்கள் என என்னிடம் மிகையாக இல்லாவிட்டாலும், இணைய ஆய்வுப் பழக்கம் காரணமாக, எப்போதும் பிரவுசரில் 30 அல்லது 40 டேப்கள் வைத்திருக்கிறேன். என் போனில், எப்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட இணையதள டேப்கள் இருக்கின்றன.

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com