மக்களின் தலையில் இடியாக இறங்கும் பெட்ரோல் டீசல் விலை - அரசின் தவறான வரிச்சுமை காரணமா?

மக்களின் தலையில் இடியாக இறங்கும் பெட்ரோல் டீசல் விலை - அரசின் தவறான வரிச்சுமை காரணமா?
மக்களின் தலையில் இடியாக இறங்கும் பெட்ரோல் டீசல் விலை - அரசின் தவறான வரிச்சுமை காரணமா?
Published on

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுக் அளவுக்கு எகிறியுள்ளது. இதற்கு என்ன காரணம்? இதற்கான வரிவிதிப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம். 

ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க நீங்கள் 100 ரூபாய்க்கு மேல் கொடுக்கும்போது, அதில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரியாக வசூலிக்கப்படுகிறது. சர்வதேச சந்தை விலைப்படி பார்த்தால் கூட, ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை மதிப்பு கிட்டத்தட்ட 40 ரூபாய் மட்டுமே. டீசலுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். வியாழக்கிழமை நிலவரப்படி சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 84 டாலர். அதாவது ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 52 சென்ட் அல்லது 38 ரூபாய். சுத்திகரிப்பு செலவு மற்றும் போக்குவரத்து செலவுக்கு பிறகு, ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்தி விலை 40 ரூபாய் மட்டுமே.

மத்திய அரசு வசூலிக்கும் உற்பத்தி வரி, கூடுதல் உற்பத்தி வரி மற்றும் செஸ் காரணமாக விலையில் கிட்டத்தட்ட 34 ரூபாய் கூடுகிறது. இதிலே பெட்ரோல் சில்லறை வியாபாரம் செய்வோருக்கான கமிஷனும் சேருகிறது. இந்தக் கட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை கிட்டத்தட்ட 75 ரூபாயைத் தொடுகிறது. மேலும் இதில் சாலைகளை கட்டமைப்பதற்கான செஸ் வரி 18 ரூபாய், விவசாய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான செஸ் 2.50 ரூபாய் மற்றும்
கூடுதல் உற்பத்தி வரி என 11 ரூபாய் வசூலிக்கிறது மத்திய அரசு.

அடுத்தகட்டமாக மாநில அரசுகள் தங்களுடைய பங்குக்கு 27 சதவிகிதம் வரை வாட் வரி வசூல் செய்கின்றன. இதனால்தான் பெட்ரோல் மற்றும் டீசல் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி, ஏழை எளிய மக்களின் கண்களை குளமாக்கி கொண்டிருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வு இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோருக்கு பெரிய சுமை ஆகிவிட்ட நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தினமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகை பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் டீசல் பயன்படுத்துவதால், போக்குவரத்து செலவு அதிகரித்து ஏழை மக்களின் வாழ்க்கையை மேலும் கடினமாகிறது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கையில் இந்தியாவில் உள்ளதை விட குறைவான விலையில் பெட்ரோல் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் அதிக விலையில் விற்கப்படுவது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது. கடந்த மன்மோகன் சிங் அரசு ஆட்சியிலிருந்த காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தபோது, அதை சரிக்கட்டும் வகையிலே வரிகளை குறைத்து, அத்துடன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற எரிபொருள் நிறுவனங்களுக்கு மானியமாக பத்திரங்களை அளித்து விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது.

2014 ஆம் வருடத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சரிந்தது. அப்போது பெட்ரோல் டீசல் விலை வெகுவாக குறையும் சூழலைப் பயன்படுத்தி, மத்திய அரசு வரிகளை அதிகரித்து விலை குறைவு வரிவசூல் ஆக மாற்றிக்கொண்டது. எரிபொருள் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பத்திரங்களுக்கு வட்டி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அந்த சமயத்திலே தெரிவிக்கப்பட்டன. மன்மோகன் சிங் அரசு அளித்து வந்த மானியங்களின் சுமையால், மத்திய அரசு நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் நெடுஞ்சாலைகள் அமைப்பது போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டதால், அதற்கான செஸ் அதிகரிக்க படுவதாக மத்திய அரசு அறிவித்தது. செஸ் மூலம் வசூல் செய்யப்படும் பணம் தனி கணக்கில் வைக்கப்பட்டு, நெடுஞ்சாலைகள் அமைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என அரசு கூறியது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் செல்லும் சாலைகளை மேம்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டது. இந்த வருட நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டபோது, அதிலே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இரண்டரை ரூபாய் என விவசாய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய செஸ் வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

செஸ் வரி வசூலில் மாநிலங்களுக்கு பங்கு அளிக்கப்படுவதில்லை என்பது பல்வேறு மாநில அரசுகளின் புகாராக இருந்து வருகிறது. ஏற்கனவே சாலை வரி மற்றும் வாகனங்களுக்கான வரியை என பலவகையில் வரி வசூலிக்கப்படும்போது, செஸ் வரி ஏன் தனியாக வசூலிக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சுத்திகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகள், சில்லறை விற்பனையாளர் களுக்கான கமிஷன் என பல செலவுகள் பெட்ரோல்-டீசல் விலையில் அடங்குகின்றன. இருப்பினும், மத்திய மற்றும் மாநில அரசுகள் சுமத்தும் அதிகப்படியான வரியே சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருளை ஒரு லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் என்கிற புதிய உச்சத்தை தொட வைத்துள்ளன.

பலமுறை இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் பரஸ்பர குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தை பரபரப்பாகினாலும், இதுவரை வாடிக்கையாளர்களுக்கு பலன் கிட்டவில்லை. மத்திய அரசு வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் எரிபொருட்களை கொண்டுவர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்திவருகிறது. பல மாநிலங்களில் எரிபொருள் மீதான வாட் வரி அதிகமாக விதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் அடிக்கடி எழுப்பப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல்- டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை வரி வசூல் செய்ய சிறந்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றன என்பதே நிதர்சனம்.

ஒரு பக்கம் குறைந்த விலையில் உணவு தானியங்களை அளிக்க மானியம் மற்றும் விவசாயத் துறைக்கு மானியம் என பல மானியங்கள் அளிக்கப்பட்டாலும், அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல் மற்றும் டீசலை பொருத்தவரை அவை மத்திய மற்றும் மாநில அரசுகள் வசூல் ராஜாக்களாக செயல்படும் வியாபாரங்களாக உருவெடுத்துள்ளன.

-கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com