அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் கண்துடைப்பா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பார்ப்போம்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளைத்தொடர்ந்து தற்போது, தங்கமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே ரெய்டு விவகாரம் ரிப்பீட்டு மோடில் சென்றுகொண்டிருக்கிறது. ரெய்டு, ஆவணம் பறிமுதல், அடுத்த முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு என மாநாடு கதையாகியிருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை/ லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என தொடங்கும் செய்தி, இறுதியில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல் என நிறைவு பெறுகிறது. அடுத்த சில நாட்களில் நெருப்பில் விழுந்த நீராக தணிந்துவிடுகிறது. அடுத்த சில நாட்களில் மற்றொரு அமைச்சர் வீட்டில் ரெய்டு என ரெய்டுகள் மட்டுமே தொடர்ந்துகொண்டிருக்கிறதே தவிர, பறிமுதல் செய்யப்பட்டதாக கூறும் ஆவணங்கள் மீதான நடவடிக்கை எதுவும் இல்லை என்பதால், இந்த சோதனைகள் எல்லாம் வெறும் கண்துடைப்பா? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பிவருகின்றனர்.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், ''அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை சட்டப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுகுறித்து விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்பதுதான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி. தொடர்ந்து, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் பிரசாரத்தின் போது பேசிய ஸ்டாலின், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து பேசினார். திமுக ஆட்சிக்கு வந்தால் ஒருமாதத்தில் வேலுமணி சிறையில் இருப்பார் என்றெல்லாம் ஸ்டாலின் கூறினார். அதன்படி, ஆட்சிக்கு வந்த திமுக முதலில் கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியது. பிறகு, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், வீரமணி, எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடைபெற்றது.
இந்த ரெய்டுகள் அடுத்தடுத்து நடக்கின்றதே தவிர, அடுத்தக்கட்டமான நகர்வுகள் சுணக்கத்தில் தான் இருக்கின்றன. லஞ்ச ஒழிப்புத்துறை கரூர் விஜயபாஸ்கரை மட்டுமே அழைத்து விசாரணை நடத்தியதே தவிர, மற்ற அமைச்சர்கள் யாரும் விசாரிக்கப்படவில்லை. இதைப்பார்க்கும் பொதுமக்களுக்கு, வெறும் சடங்கு போலத்தான் இந்த ரெய்டுகள் நடக்கின்றதோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது. ரெய்டை காட்டி பயமுறுத்தி, அவர்களுக்கு மேலே கத்தியை தொங்கவிட்டால், போதும் என திமுக நினைக்கிறதா? என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே நிலவுகிறது. ஆனால், இதை இப்படிப்பார்க்க தேவையில்லை. ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையும் ஒருபுறம் நிலவுகிறது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இந்த அமைச்சர்கள் மீதெல்லாம் ஊழல் புகார்கள் பதிவாகி, கவர்னரிடமும், லஞ்ச ஒழிப்புத்துறையிடமும் அனுப்பிவைக்கப்பட்டது. நடவடிக்கை இல்லை என்றதும் நீதிமன்றத்திலும் கூட வழக்குகள் உள்ளன. டெண்டர் முறைகேடு, கொள்முதலில் நடந்த ஊழல்கள் என அமைச்சர்கள் மீதான புகார்கள், திமுக, அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த ஆட்சியிலேயே பதிவாகியுள்ளன. சொல்லப்போனால், ஒரு ரெய்டு தொடங்கியதும், மற்ற அமைச்சர்கள் ஆவணங்களை மறைத்து அதற்கான நடவடிக்கைகளில் தங்கள் ஆடிட்டர்களை ஈடுபடுத்தியிருப்பார்கள்.
அப்படிப்பார்க்கும்போது, இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை ஏன் தேவைப்படுகிறது என்றால், அப்போதுதான் பினாமி சொத்துகள் குறித்த உண்மை வெளியேவரும். காவல்துறை விசாரணை நடத்தினால் தான் உண்மையான தகவல்கள் கிடைக்கும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் வரும். ஆனால், அந்த நடவடிக்கை இல்லாமல் வெறும் ரெய்டு மட்டும் நடப்பது இது வெறும் கண்துடைப்பு தான் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அரசியல் ரீதியாக அதிமுகவை ஆஃப் செய்ய திமுக எடுக்கும் அட்டைக்கத்தியா ரெய்டு? எனவும் மக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர்.
இது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் வெறும் ரெய்டு தானே என்ற எண்ணத்தை கொடுத்துவிடும். மறைக்க வேண்டிய ஆவணங்களை மறைத்து கொள்வார்கள். இதை ஸ்டாலின் அரசு மாற்றி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை இருக்கிறது. உரிய நடவடிக்கை இல்லை என்றால் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையில்லாமல் போய்விடும்'' என்றார்.