டபுள் மாஸ்க் முதல் சுவாசப் பிரச்னைகள் வரை: அடிப்படை சந்தேகங்களுக்கு நிபுணரின் பதில்கள்

டபுள் மாஸ்க் முதல் சுவாசப் பிரச்னைகள் வரை: அடிப்படை சந்தேகங்களுக்கு நிபுணரின் பதில்கள்
டபுள் மாஸ்க் முதல் சுவாசப் பிரச்னைகள் வரை: அடிப்படை சந்தேகங்களுக்கு நிபுணரின் பதில்கள்
Published on

ஓர் ஆண்டுக்கு மேலாக நம் தினசரி வாழ்க்கை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

அதிலும், கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையில் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதுடன், பெரும்பாலான கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுத்திணறலால் இறந்த செய்திகள் பலரிடையே பயத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக சுவாசப் பிரச்னை உள்ளவர்களின் பயம் பலமடங்கு அதிகரித்துள்ளதுடன், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.

சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? அவர்கள் என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளவேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் நுரையீரல் நிபுணர் டாக்டர் ஜெயராம்.

வீட்டிற்குள்ளேயே இருக்கும்போது சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன? தொற்று வியாதி மற்றும் தொற்று அல்லாத வியாதியை எவ்வாறு புரிந்துகொள்வது?

"ஆஸ்துமா, அலர்ஜி, COPD மற்றும் காசநோய் போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்களை கொரோனா காலகட்டத்தில் இரண்டு விதமான நோயாளிகளாக பிரிக்கலாம். அதாவது ஒரு தரப்பு நோயாளிகள் ஆன்லைன், வீடியோ அல்லது நேரில் மருத்துவரை சந்தித்து முறையான சிகிச்சை பெறுபவர்கள். மற்றொரு தரப்பு நோயாளிகள் கொரோனாவுக்கு பயந்துகொண்டு வெளியே வர மறுப்பதுடன், டெக்னாலஜி வசதியும் இல்லாததால் மருந்து, மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொள்வதில்லை. உதாரணத்திற்கு காசநோய் இருப்பவர்கள் முறையாக மருந்து எடுத்துக்கொள்ளாதபோது அவர்களுக்கு பிரச்னை அதிகரிப்பதோடு மற்றவர்களுக்கும் பரவுகிறது. அதேசமயம் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் முறையாக மருந்து எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், அவர்களால் மற்றவர்களுக்கு பரவுவதில்லை. ஆனால் அவர்களுக்கு அவ்வப்போது சுவாசப் பிரச்னை ஏற்படும்.

தொற்று வியாதி இருப்பவர்கள் முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாத நோய் எனும்போது அது அவர்களுக்குள்ளேயே பிரச்னையை அதிகப்படுத்தும். இப்படி வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் நோயாளிகளுக்கு வரும் பிரச்னைகளில் மாற்றம் இருக்கிறது."

ஒர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களுக்கு சுவாசப் பிரச்னை இருந்தால் அவர்கள் என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

"வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் காற்றோட்டமான அறையில் இருப்பதே சிறந்தது. காசநோய் போன்ற தொற்றுவியாதி இருப்பவர்கள் மருத்துவரை அணுகி முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்வதே அவர்களையும் பிறரையும் பாதுகாக்கும். இருமும்போது மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணிந்துகொள்வதே சிறந்தது. தனி அறையில் இருப்பது அதிலும் சிறந்தது. இதுவே ஆஸ்துமா போன்ற பிரச்னை உள்ளவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரை அணுகி மருந்துகளை தொடர்வது குறித்து கேட்டு அதை தொடரவேண்டும்.

சுவாசப் பிரச்னை இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் போன்ற மற்ற இணைநோய்கள் இருப்பின் அவர்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான இன்சுலின் ஊசிகளை முறையாக எடுத்துக்கொண்டால் மட்டுமே நீரிழிவு கட்டுக்குள் இருக்கும். அப்போதுதான் காசநோய் விரைவில் குணமாகும்."

சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு உணவுமுறைகளில் மாற்றம் தேவைப்படுமா? அவர்கள் என்னென்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்?

ஆஸ்துமா, காசநோய் போன்ற எந்தவிதமான சுவாசப்பிரச்னை இருந்தாலும் அவர்கள் உணவுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக காசநோய் இருப்பவர்களுக்கு இருமும்போது அதிக புரதச்சத்து இழப்பு ஏற்படுவதால் அவர்கள் சுண்டல், முட்டை, பயறுவகைகள், அசைவம் போன்ற புரதச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு ஒவ்வாமை பிரச்னை இருந்தால் அந்த குறிப்பிட்ட உணவை மட்டுமே தவிர்க்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்துவர். அதுதவிர வீட்டில் இருந்தபடியே ஜாக்கிங், உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். ஒருவேளை வெளியே செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு அதனால் கொரோனா நோய்த்தொற்று ஏற்படும்போது மருந்துகளை தாமே எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி கொரோனா சிகிச்சையை தொடங்கவேண்டும்.

தொடர்ச்சியாக ’டபுள் மாஸ்க்’அணிவதால் மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புகள் உள்ளதா?

"கண்டிப்பாக இல்லை. கொரோனா நாட்கள் மட்டுமல்ல; தினமும் மாஸ்க் அணிந்துகொண்டு வெளியே செல்வது மாசுக்கள் மற்றும் நோய்க்கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். அதிலும் டபுள் மாஸ்க் அணியும்போது புகை, அழுக்கு என எதுவும் உள்ளே செல்லாது. அதேபோல் மூச்சு அடைத்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற எந்த பிரச்னையும் இருக்காது. எனவே எல்லா காலங்களிலும் வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்துகொண்டு செல்வது மிக மிக அவசியமானது."

சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிந்துரையின்றி இணையங்களில் வரும் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாமா?

"சாதாரண மூச்சுப் பயிற்சி, நடை பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளை முறையாக கற்றுக்கொண்டு அதனை தினமும் செய்யலாம். சுவாச மண்டலத்தை வலுவாக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பலூன் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதுதவிர பழக்கமில்லாத பயிற்சிகளை சிரமப்பட்டு செய்வதை தவிர்ப்பது சிறந்தது. மேலும் தற்போது அனைத்து வகுப்புகளுமே இணையங்களில் சுலபமாக கிடைப்பதால் வல்லுநர்களின் பயிற்சி வகுப்புகளை கடைபிடிக்கலாம்."

சுவாசப் பிரச்னை இருப்பவர்கள் முதலுதவிக்கென்று மருந்து மாத்திரைகளை கைவசம் வைத்திருப்பது அவசியமா?

"சுவாசப் பிரச்னைக்கென தனியாக மருந்து மாத்திரைகள் தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு மேல் சளி, இருமல் இருக்கும்பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மேற்கொண்டு சிக்கல்கள் வராமல் பாதுகாக்கும்."

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com