நீட் தேர்வில் முறைகேடு?: எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்

நீட் தேர்வில் முறைகேடு?: எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்
நீட் தேர்வில் முறைகேடு?: எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்
Published on

முதுநிலை மருத்துவ படிப்புகளான எம்டி, எம்எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான மருத்துவ நுழைவுத் தேர்வு கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இதில் வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வை கட்டாயாமாக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகள் என கருதப்படும் எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் இயக்ககம் கடந்த சனிக்கிழமை நடத்தியது. முழுக்க முழுக்க கணினி வழி தேர்வாக நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் இயக்கக அதிகாரிகளும், கணினிவழி தேர்வுக்காக பணி ஒதுக்கப்பட்டிருந்த முன்னணி மென்பொருள் நிறுவனம் ஒன்றின் கிளை நிறுவனமான ஐஆன் டிஜிட்டல் செண்டர் என்ற நிறுவன அதிகாரிகளும் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

முறைகேடு நடப்பது எப்படி

சில தரகர்கள் தேர்வு எழுதும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் தேர்ச்சிப் பெற வைக்க பணம் கொடுக்க வேண்டும் என்ற வகையில் டீலிங் பேசுகிறார்கள். இதற்கு தரகர்களும், தேசிய தேர்வுகள் இயக்கக அதிகாரிகளும் கூட்டு. தரகர்களிடம் இருந்து யாரை தேர்ச்சிப் பெற வைக்க வேண்டுமோ அவர்களது தேர்வு எண்ணை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். அதன்மூலம் மாணவர்கள் தேர்வு எழுதிய மையத்தினை கண்டுபிடித்து விடுகிறார்கள்.

தேர்வு மையங்களில் உள்ள கணினிகளை இயங்க செய்ய வேண்டுமானல் அதில் உள்நுழைய கடவுச்சொல் வேண்டும். அதாவது தேர்வு மைய எண் (Center code) மற்றும் testing Id என்று சொல்லக் கூடிய கணினி பரிசோதனை எண்ணும் தேவைப்படும். இதில் தேர்வு மைய எண் தேசிய தேர்வுகள் இயக்கக அதிகாரிக்கே தெரியும். ஆனால் கணினி பரிசோதனை எண் என்பது சம்பந்தப்பட்ட தேர்வுப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவன அதிகாரிகளுக்கே தெரியும். இவர்கள் மூலம் அந்த எண்ணையும் பெற்று கணினியில் லாக் இன் செய்து விட்டால் மாணவரின் பதிவெண்ணை வைத்து மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முடியும். முழுக்க முழுக்க வாட்ஸ் அப் மூலம் முறைகேடு தொடர்பாக பேசிக் கொள்வதால், முறைகேட்டில் ஈடுபடுபவர்களை கண்டறிவதில்  காவல்துறையும் திணற வாய்ப்புள்ளது.

மகராஷ்டிரா, லக்னோ போன்ற வட மாநில பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து இது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.இது தொடர்பாக டெல்லி காவல்துறையில் புகார் செய்த போது , லக்னோ என்பதால் அந்தப் புகார் உத்திர பிரதேச காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்வு என்று சொல்லிவிட்டு, தேர்வை நடத்தும் அதிகாரிகளே முறைகேட்டில் ஈடுபட்டாதாக எழுந்துள்ள புகாரால் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனால் உண்மையாக உழைத்து படிக்கும் பலரின் மருத்துவ மேற்படிப்பு கனவு நிறைவேறாமல் போகும் நிலை உருவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com