மாஸ்க் அணியவில்லை எனக் கூறி சட்டக்கல்லூரி மாணவர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட சர்ச்சை குறித்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் அப்துல் ரஹீம் தற்போது புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேசியுள்ளார்.
கடந்த ஜனவரி 14-ம் தேதி, சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்துல் ரஹீம் என்ற சட்டக்கல்லூரி மாணவருக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான பிரச்னையொன்று எழுந்திருந்தது. இதில் காவல்துறை தரப்பில், ‘மாணவர் அப்துல் ரஹீம், காவல்துறையினரை தகாத வார்தைகளால் திட்டி, அரசுப் பணியைச் சரிவரச் செய்யவிடாமல் தடுத்து, கையால் தாக்கி மிரட்டினார்’ என்று கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜன் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 341, 294 பி, 353, 332, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அப்துல் ரஹீமைக் கைதுசெய்து, பின் மறுநாள் காலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக கூறப்பட்டது. ஆனால் மாணவர் அப்துல் ரஹீம் தரப்பில், ‘நான் இரவு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, மாஸ்க் அணியவில்லை என என் மீது பொய்க் குற்றச்சாட்டு கூறி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். காவல்நிலையத்தில் நான் எனக்கு நீதி கேட்டதால், என்னை காவலர்கள் மிகக்கொடூரமாக தாக்கினர்’ என்று கூறியிருந்தார்.
மனித உரிமை ஆணைய தலையீடு, சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் என இந்த விஷயம் பூதாகரமாகியுள்ள நிலையில், மாணவர் அப்துல் ரஹீம் அன்று இரவு தனக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து நம்மிடையே பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அந்தவகையில், அப்துல் ரஹீம் புதிய தலைமுறையிடம் பகிர்ந்துக்கொண்ட தக்வல்கள் இங்கே:
“நான் சட்டக்கல்லூரி மாணவன். என்னோட கல்லூரி நேரம் போக, மற்ற நேரங்களில் பகுதி நேரமா மெடிக்கல்ஷாப் ஒன்னுல வேலை பார்த்துட்டு இருக்கேன். கொரோனா ஆரம்பிச்ச நேரத்துல இருந்து, கல்லூரி முழு நேரமா இயங்காததால, கிட்டத்தட்ட முழு நேரமா வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அப்படித்தான் கடந்த ஜனவரி 14 பொங்கல் நாளின்போதும் வேலைக்கு போயிட்டு நைட் 11 மணிகிட்ட வீட்டுக்கு போயிட்டிருந்தேன். எப்போதும்போல மாஸ்க் போட்டுட்டு, சைக்கிள்ள போயிட்டு இருந்தேன். வழியிலருந்து போலீஸ்காரங்க சிலபேர், என்னோட சைக்கிளை மறிச்சு ‘நீ இப்போ எங்களை பார்த்துட்டுதான் மாஸ்க் எடுத்து போட்டிருக்க. முறையாக மாஸ்க் போடாததுனால, அபராதம் கட்டிட்டு போ’னு சொல்லி, 1,500 ரூபாய் அபராதம் கேட்டாங்க. எனக்கு ஒருநாளுக்கு 200 ரூபாய் சம்பளம் கிடைக்குறதே பெரிய விஷயம். அப்படியிருக்க, நான் ஏன் எந்த தப்பும் செய்யாம 1,500 ரூபாயை இவங்ககிட்ட கொடுக்கனும்னு எனக்கு தோணுச்சு. என்னோட கேள்வியை நான் அவங்ககிட்ட கேட்டேன்.
ஆனால் நான் அப்படி கேட்டது, அவங்களுக்குப் பிடிக்கல. ‘என்ன நீ சட்டம் பேசுறியா’னு கோவமா கேட்டாங்க. நான், ‘நிஜமாவே நான் சட்டக்கல்லூரி மாணவன்தான் சார்’னு பொறுமையா சொன்னேன். ஆனால் அதுக்குள்ள அடிக்க வந்துட்டாங்க. நான் என்னை தற்காத்துக்க, அவங்க அடிச்சதை தடுத்தேன். ஆனால் அதை தப்பா புரிஞ்சுகிட்டு, இன்னும் அடிச்சுகிட்டாங்க. அங்க இருந்து என்னையை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்க. அங்க இன்னும் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
அங்க இருந்த பி.சி., நசீமானு ஒரு மேம், பூமிநாதன்னு ஒரு சார்னு தொடங்கி அந்த ஸ்டேஷன்ல இருந்த ஒவ்வொருத்தரும் வரிசையா வந்து வந்து அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. வரிசையா மாற்றி மாற்றி அவங்களுக்குள்ள பேசி வச்சு அடிச்சாங்க. கிட்டத்தட்ட அன்னைக்கு நைட் 11 மணிக்கு தொடங்கி, மறுநாள் அதிகாலை வரைக்கும் தொடர்ந்து ஒருத்தர் ஒருத்தரா ஷிஃப்ட் போட்டு ரொம்ப கொடூரமா அடிச்சுகிட்டே இருந்தாங்க. காலையில விடிஞ்சதும், பக்கத்துல இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போய் தையல் போட்டுவிட்டாங்க. திரும்பி வந்தபிறகு, மறுபடியும் ஸ்டேஷன்குள்ள உட்கார வச்சு கொடுமைபடுத்தினாங்க. அதுக்குப்பிறகு, ஸ்டேஷன்ல இருந்து எக்மோர் நீதிமன்றத்துக்கு என்னையை அழைச்சிட்டு போனாங்க. அங்கயும் நீதிபதிகிட்ட எனக்கு நடந்த கொடுமையை சொன்னேன். ஆனா அவங்களும் சரியா கேட்கலை. நீதிபதி, ஏதோ எழுதுகிட்டே இருந்துட்டு, 15 நாள் ரிமேன்ட்னு சொல்லி தீர்ப்பு எழுதிட்டாங்க. என்னால ரொம்ப முடியலைன்னு சொன்னதால, மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போயிட்டாங்க. முதல்ல ஒரு மருத்துவமனைக்கு அழைச்சுட்டு போனாங்க, ஆனா அங்க கொரோனா படுக்கை மட்டும்தான் இருந்துச்சுன்றதால, என்னை அங்க அட்மிட் பண்ண முடியலை. அப்றம், வேற மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போனாங்க. கிட்டத்தட்ட ஒருவாரத்துக்கு என்னால எதும் பண்ண முடியலை. இயல்பா சாப்பிடக்கூட முடியலைங்க… அவ்வளவு வலி, அவ்வளவு வேதனை. அதனாலதான் மனித உரிமை ஆணையத்துகிட்ட முறையிட்டேன். அவங்ககிட்ட நடந்த எல்லாத்தையும் சொன்னேன்.
எனக்கு இரன்டு கோரிக்கை தாங்க… ஒன்னு, என்மேல பதியப்பட்ட வழக்குகளை நீக்கணும்; குறிப்பா 323-ன் கீழ் பதியப்பட்ட வழக்கை நீக்கனும். அடுத்து, என்மேல தப்பா வழக்கு பதிஞ்ச காவல்துறையினர் மேல வழக்கு பதியணும்; குறிப்பா 326, 307 உட்பட கொலை முயற்சி வழக்குகளை அவங்க மேல பதிவு பண்ணனும். நான் எந்த தப்புமே செய்யலை. அப்படியிருக்கும்போது, என்மேல செக்ஷெனே போட்டிருக்க கூடாது. ஆனா கடைசியில இப்போ என் நிலைமையை பாருங்க… இப்போ நீதிமன்றம், என்மேல போடப்பட்ட வழக்கையெல்லாம், ஆல்டெர் பண்ணி என்னை பெயில்ல வெளியே அனுப்பிருக்காங்க. என்னால நீதிமன்றத்தை எதிர்த்து எதுவுமே பண்ண முடியலை. எனக்காக நான் கேட்குறது, நீதி மட்டும்தான். அதுமட்டுமில்லங்க., என்மேல வழக்கு பதிஞ்சிருக்கதால என்னோட படிப்பும் இப்போ பாதிக்கப்பட்டிருக்கு. தப்பே செய்யாம, என்மேல இன்னைக்கு வழக்கு பதிஞ்சு, என் வாழ்க்கையையே நான் இழந்துட்டு நிக்கிறேன்.
எனக்கு இப்போ தேவைப்படறதெல்லாம், ஒரு நிம்மதியான வாழ்க்கை. அவ்வளவுதான். நான் எந்த தப்புமே பண்ணாதப்போ, இப்படி என் வாழ்க்கையோட நிம்மதியையே போயிடுச்சு. அதான் என்னோட வருத்தம். இப்பக்கூட இந்த விஷயத்தை நான் பெருசுப்படுத்தல. நான் மனித உரிமை கமிஷன்கிட்ட நியாயமா போய் கோரிக்கை வைச்சேன். அவ்வளவுதான். சொல்லப்போனால், எனக்கு மீடியா அட்டென்ஷன் இந்தளவுக்கு கிடைக்கும்னு நான் எதிர்ப்பார்க்கலை. இதுவும்கூட எனக்கு பிரச்னையா முடியுமோன்ற பயம் எனக்கு இருக்கு. என்ன செய்றதுன்னே எனக்கு தெரியலை இப்போ…” என்றார் வலியும் குழப்பும் நிறைந்த குரலோடு.
இவ்விஷயம் அடுத்தடுத்து என்ன மாதிரியான நிலைகளை அடையுமென்பது இனி வரும் நாள்களில்தான் தெரியும். யார்மீது தவறு, சரி என்பதை சட்டம் சொல்லும் எனும்போதிலும், இவ்விஷயத்தில் பாதிக்கப்படுவது யாரென்று பார்க்கையில் அது சாமாணியவர்களாகவே இருக்கிறார்கள்.
- கலிலுல்லா, ஜெ.நிவேதா